என் மலர்
திருவள்ளூர்
- தொழிலாளி பாரதி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
- ஆமூரில் தண்ணீர் டேங்க் அருகில் பாரதி இறந்து கிடந்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது54). தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஆமூரில் தண்ணீர் டேங்க் அருகில் பாரதி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
- அப்புன் ராஜ், வெங்கடாசலம் ஆகியோர் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரிய வந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு லோடுமேனாக பொன்னேரியை அடுத்த பள்ளம் பகுதியைச் சேர்ந்த அப்புன் ராஜ், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி நேரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் பள்ளியை மூடிச்சென்றனர். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டார்குப்பம் மகளிர் குழு கட்டிட கதவை உடைத்து கம்ப்யூட்டர் திருடு போனது. மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்த சிலிண்டர், கேஸ் அடுப்பு, மின் அடுப்பு ஆகியவற்றையும் கொள்ளை கும்பல் திருடி சென்று உள்ளனர். தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது
- இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் வருகிற 20-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
தெப்ப திருவிழாவில் உற்சவர் வைத்திய வீரராகவர் சமேதராக ஸ்ரீதேவி, பூ தேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்வார்.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
- வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்கள் இடம் பெற்றதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
- பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 123 ஏரிகளுக்கான ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடுபவருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்களும் விவசாயம் மேற்கொள்ளாத பட்டா இல்லாத நபர்களின் பெயர்களும் இடம் பெற்றதாக விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
மேலும் பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.
இதையடுத்து 12 ஏரி பகுதிகளில் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொன்னேரி கோட்டத்தில் கீழ்கண்ட கிராமங்களில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் சில நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இலவம்பேடு ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஒன்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஆத்ரேய மங்கலம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், வேலூர் அம்மனேரி மற்றும் பள்ள ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பள்ளிப்பாளையம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறுளப்பாக்கம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம்.
ஆரணி ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சின்னம்பேடு பெரிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், குமார சிறுளப்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சேகண்யம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், உப்புநெல்வாய் ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், வழுதலம்பேடு பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் ஆகிய சங்க தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தின் மீது வேகமாக மோதியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
சென்னை, முகப்பேரை சேர்ந்தவர் கிருத்திகா(23). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நண்பர்களை அழைத்துச் செல்ல அதிகாலை கிருத்திகா தனது காரில் வந்து கொண்டு இருந்தார். பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தின் மீது வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதேபோல் லாரியின் பின்பக்கமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் காரை ஓட்டி வந்த கிருத்திகா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனை கண்ட கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள் காரின் கதவை திறந்து கிருத்திகாவை பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்ததும் பூல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்ததும் கிருத்திகா உடனடியாக மீட்கப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ‘பிளாஸ்டிக் மறுசுழற்சியை’ வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
- ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் சைதன்யா (22). இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பசுமை இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கி கர்நாடக மாநிலம், தமிழகம் வழியாக 3600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக குர்ரம் சைதன்யா கூறியதாவது:-
'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.
தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறுசுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன்.
625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
நெல்லூர் சீமப்பொறி மருத்துவமனை அருகே பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடையில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
- தலைமறைவாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது திருடிய ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை பங்கு பிரித்து கொண்டு சென்றது தெரியவந்தது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த திருமழிசை, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் பூந்தமல்லி - டிரங்க் சாலை அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் சட்டரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கடையில் வேலை செய்து வந்த திருவள்ளூரை சேர்ந்த ஜேம்ஸ் (21), திருவண்ணாமலையை சேர்ந்த சிவா (22) ஆகியவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது திருடிய ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை பங்கு பிரித்து கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித் தொழிலாளி. இவரது மகள் தாரணி (வயது18). இவர் பூந்தமல்லி அருகே புதுசத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு வெகு நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளவேடு போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- ஏற்றுமதிக்கு சென்ற ஷூக்களை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளவேடு அருகே 400 அடி புற வழிச்சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்பில் திருவண்ணாமலையில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதிக்கு சென்ற ஷூக்களை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஷூக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த தனசங்கர் (36), திருவாரூர் மன்னார்குடி பகுதியை சேர்ந்த இளைய மாறன் (47), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சொகி அப்துல்லா (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் 55 ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர்.
- ஊராட்சி செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் 55 ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர். இதில் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சி செயலாளர்கள் வேறு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பணி மாற்றத்தை கண்டித்தும், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மீண்டும் பணி மாற்றம் வேண்டும் என கோரியும், ஊராட்சி செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.






