என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது

    பல்லடம் :

    பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் தர்மராஜ் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் பள்ளி செயலாளர் மலர்க்கொடி தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர் புவன் சக்கரவர்த்தி, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்
    • ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    திருப்பூர் : 

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர், பொங்கலூர், காட்டூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். மாதப்பூர் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பாலப்பணி, பொங்கலூர் ஊராட்சி மில் காலனியில் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடப்பணி, முருகன் நகரில் ரூ.13¼ லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள், அம்மாபாளையத்தில் பட்டு வளர்ப்பு கூடாரம், காட்டூரில் சாலை பணி, தொடக்கப்பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், செல்டன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வர்த்தக கண்காட்சி நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர் :

    தி.மு.க. மேற்கு மண்டல நெசவாளர் அணி மாவட்ட, மாநகர, தலைவர், துணைத்தலைவர் மற்றும் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நெசவாளர் அணி மாநில தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். மாநில செயலாளர்கள், துணைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வாழ்த்தி பேசினார். முடிவில் தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு, கோவை தெற்கு, வடக்கு, மாநகர், ஈரோடு வடக்கு, தெற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்தியம், தருமபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை கவுண்டம்பாளையத்தில் வருகிற 20-ந் தேதி கைத்தறி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனச்சரகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • ஐ.ஜி. பவானீஸ்வரிபோலீஸ் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

    உடுமலை :

    உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனச்சரகத்தின் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாள்தோறும் பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த வாகனங்களை சோதனை இடுவதற்கு ஏதுவாக ஒன்பதாறு சோதனைச்சாவடியில் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடியும், சின்னாறு பகுதியில் வனத்துறை சோதனை சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது.அதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நியமிக்கப்பட்டு நாள்தோறும் சுழற்சி முறையில் வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ஒன்பதாறில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    • சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது
    • அரிய தொண்டு செய்பவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    2023-24-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண்.113-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம். இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • விற்பனை சங்கத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

     அவிநாசி : 

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,569 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    • பெண்கள் அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
    • இந்த விருது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர் : 

    பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த பெண்கள் அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- சா்வதேச மகளிா் விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-ம் ஆண்டுக்கானஅவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும்.

    சமூக நலனை சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கைகள், சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு 2024-ம் ஆண்டுக்கான அவ்வையாா் விருது வழங்கப்படுகிறது.எனவே விருது பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா். 

    • இலவச பொது மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.
    • இம்முகாமில் மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.

    பின்னா் அவா் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.அதன்படி நடைபெறும் இம்முகாமில் மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

    இம்முகாமில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை, எக்கோ பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை, இதய நோய்கள் தொடா்பான பரிசோதனை, நுரையீரல், மகளிா் மருத்துவம், கண், பல், காது, மூக்கு- தொண்டை தொடா்பான பரிசோதனைகளும், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான பரிசோதனை, காசநோய், மூளை நரம்பியல், வயிறு சமந்தப்பட்ட பரிசோதனை, மனநல மருத்துவம் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா்.

    இம்முகாமில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனா்.மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை.
    • தனியார் மையங்களுக்குச்சென்று ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

    உடுமலை:

    தமிழக கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு தகவல் அனுப்பப்படுவதில் இப்போது இணையதளம் மட்டுமே மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பள்ளியில் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்படுவது, மாணவர்களின் விவரங்களை கேட்பது, அரசின் அறிவிப்புகள் என அனைத்துமே ஆன்லைன் வாயிலாக, அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது.

    ஆனால், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை. இதனால் மொபைல் போன்களில் தான் இப்போதைய தகவல் பரிமாற்றம் நடக்கிறது. ஆனால் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவதற்கு, இவ்வசதி கட்டாயம் தேவையாக உள்ளது. குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில், இந்த வசதியில்லாததால் தனியார் மையங்களுக்குச்சென்று தான் ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

    இதனால், வகுப்புகளும் பாதிக்கப்படுகிறது. நடுநிலைப்ப ள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அத்திட்டம் அனைத்து பள்ளி களையும் சென்றடையவில்லை. மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள், ஆன்லைன் வாயிலாக வீடியோக்கள் காண்பிப்பதற்கும், அவர்களின் கல்வி தொடர்பாக செயல்படுவதற்கும், இன்டர்நெட் வசதி தேவையாக உள்ளது. தற்போது வரை ஆசிரியர்களின் மொபைல் போன்களுக்கென போடப்படும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் பல நேரங்களில், சர்வர் பிரச்சினையால் இணைய வசதி செயல்படுவது இல்லை. எனவே பள்ளிகளில் தடையில்லா இன்டர்நெட் சேவை பெறுவதற்கும், கம்ப்யூட்டர் வசதி வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினரும், கல்வி ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இரு பருவங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் படைப்புழு தாக்குதல், வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களினால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    அதிலும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி தாமதமானது.

    தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் சாகுபடிக்கு வழக்கமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. தற்போது படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நான்கு முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளதால் விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடி செலவினம் 35 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை குறைந்தே காணப்படுகிறது.

    தற்போது ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலையும் வரத்து அதிகரிக்கும் போது குறைந்து விடும். இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

    கால்நடைகளுக்கு தீவனத்திற்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆதார விலை நிர்ணயித்தல், அரசு கொள்முதல், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் பதறியபடி கூச்சலிட்டு விழுந்தனர்
    • வேகத்தடையில் ஏறி இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிந்தது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால் மேடு பகுதி அருகே வந்த போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் பதறியபடி கூச்சலிட்டு விழுந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து சாலையில் காயங்களுடன் கிடந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேனில் பயணம் செய்த 11 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்களின் சத்தத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    ×