என் மலர்
திருப்பத்தூர்
- தண்ணீரை மூடி வைக்க அறிவுறுத்தல்
- துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் டவுன் சிவராஜ் பேட்டை 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45). இவருடைய மனைவி சுமித்ரா(35). தம்பதியினர் மகன்கள் பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5) மகன் புருஷோத்தமன் (8 மாதம்). மணிகண்டன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். சுமித்ரா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அபிநதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றிய, பேரூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. மாணவரணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், கா.அமுதரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகரம், 15 ஒன்றியம் மற்றும் 3 பேரூர் ஆகிய பகுதிகளுக்கான மாணவரணி அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்கு பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.
அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நகராட்சி கமிஷனர் தகவல்
- 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பை நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் நிலுவைத் தொகைக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சதவீதமாக அபராதம் விதிக்கப்பட்டு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-2024-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியையும் வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு உரிய காலத்திற்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி சொத்து வரிக்கான 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு நகராட்சி கமிஷனர் பழனி தெரிவித்துள்ளார்.
- 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும்
- அதிகாரிகள் எச்சரிக்கை
ஆலங்காயம்:
வாணியம்பாடியில் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரி கள் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கச்சேரி சாலை மற்றும் உதயேந்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை என 2 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக நிலத்திலும், பாலாற்றிலும் வெளியேற்றியது கண்டறியப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் கோபாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொ ண்டார்.
மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு தற்போது உதயேந்திரம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ள நிலத்தில் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ.1 லட்சமும் கச்சேரி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கழிவுநீர் கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றியதற்காக ரூ. 80 ஆயிரமும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 34 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்ற ப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆ.செல்வ ராஜ், ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆர். மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள் பி.சந்தியா, ஆர்.ரஜினி, வி.ஆர். சரவணன், ஏ.ரமேஷ், கே.லில்லி, எம். சுகன்யா, ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 150 கர்ப்பிணி தாய்மார்கள் பயனடைந்தனர்
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம், பேராம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தீபா, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ரவி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர் மலர்மன்னன், மாவட்டம் மருத்துவர் அணி துணை தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 25 கிலோ சிக்கியது
- ரூ.1900 அபராதம் விதித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவின் படி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் யாராவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சுமார் 25 கிலோ இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1900 அபராதம் விதித்தனர்.
மீண்டும் பிளாஸ்டிக் விற்பனை செய்தது தெரியவந்ததால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிள் எச்சரிக்கை விடுத்தனர்.
- 250 கிலோ சிக்கியது
- ரூ.10 ஆயிரம் அபராதம்
ஆலங்காயம்:
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் உதவி பொறியாளர் கேசவன் ஆகியோர் இணைந்து வாணியம்பாடி பஸ் நிலையம், சி.எல். சாலை, காதர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிஎல் சாலையில் உள்ள சையது பிளாஸ்டிக் ஏஜென்சி மற்றும் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் பழக்கடைகளில் சோதனையிட்டனர்.
2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகள், தேனீர் கப்புகள் ஆகியவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்தாதவாறு அங்கேயே கிழித்தனர். மேலும் ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும், மற்றொரு பழகடைக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து நெகிழி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது நகராட்சி களப்பணி உதவியாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அருள், அலெக்ஸ், பெருமாள், கஜேந்திரன், சவுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.10 லட்சத்தில் அமைகிறது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு குடியான குப்பம் ரெயில்வே கேட்டை கடக்கும் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் நடவடிக்கையாக ஜோலார்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் தலைமையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்வே கேட்டை கடந்துள்ள பொதுமக்களுக்கு நிரந்தரமாக காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.
குடிநீர் வசதி ஏற்படுத்த குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இதில் நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் சங்கர், வார்டு கவுன்சிலர் ஜி. சக்கரவர்த்தி, பணி மேற்பார்வையாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் காதல் மனைவி பிரிந்தார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் பி கஸ்பாவை சேர்ந்தவர் சத்யா (வயது 25). ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் உடன் வேலை செய்யும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக சத்யாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
இதனால் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார். சத்யாவின் பெற்றோர் மகனுக்கு 2-வது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சத்யா திருமணத்திற்கு மறுத்து வந்தார். பின்னர் திடீரென நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த மேலூரை சேர்ந்தவர் சாமந்தி (வயது 19). இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். சாமந்தி உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
சாமந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று விஷம் குடித்து சாமந்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக சாமந்தி இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






