என் மலர்
தேனி
- சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
- காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
பூஜையில் பல்குதர்கள் குடும்பம் செழிப்படைந்து, கஷ்டங்கள் தீர பஜனை பாடி பைரவருக்கு வழிபாடுகள் செய்து பாலபிஷேகம் உட்பட 16 சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
- மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.381 கோடி செலவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் மூணாறு அருகே உள்ள கேப் ரோட்டில் விதிமுறைகளை மீறி பாறைகள் உடைக்கப்பட்டன. அவ்வாறு 6,28,00 மெட்ரிக் டன் பாறைகள் உடைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் அரசுக்கு தாக்கல் செய்தனர். இதற்காக ரூ.6 கோடியே 28 லட்சத்தி 22 ஆயிரத்தி 480 செலுத்துமாறு ஒப்பந்தகாரருக்கு அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ஒப்பந்தகாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் 2017ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கேப் ரோட்டில் 5 முறை மண்சரிவுகள் ஏற்பட்டன. 2019ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எனவே இந்த சாலை மண் சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதியாக கருதி தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மூணாறிலிருந்து பள்ளிவாசல், ராஜாகாடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக மாற்றுப்பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேனிக்கு வந்து செல்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
- சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.
கடந்த மாதம் வரை வறண்டு கிடந்த சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
இதனால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
அமாவாசை நாட்களில் மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து இங்குள்ள அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேலப்பர், நாராயணன் கோவிலில் வழிபாடு செய்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டம் என்பது அருவியையொட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் விரட்டுவதில் வனத்துறையினர் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வருகிற 17ந் தேதி ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று அதிக அளவு பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக யானைகள், காட்டெருமைகளை விரட்டி பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் நடசேன் மகள் புவனேஸ்வரி (15). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே புவனேஸ்வரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடலூரை சேர்ந்தவர் இளவரசன் (32). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
- இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் ராசிங்காபுரம் அழகர்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அழகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. காமராஜ் கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அழகேஸ்வரி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காமராஜ், அவரது தந்தை கண்ணன், தாய் லெட்சுமி, சகோதரி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
- எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனிமாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வீரபாண்டி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கடந்த ஆண்டு மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி கல்லூரி வரை அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் எளிதாக பஸ்களில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து கூடுதலாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
எனவே அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் ஒரே ஒரு பஸ் மாணவ-மாணவிகளுக்கு போதுமானதாக இல்லை. மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு வேறு பஸ் சேவைகள் எதுவும் இல்லை. வீரபாண்டி கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனில் தேனிக்கு சென்று அதன் பின்னர் வேறு ஒரு பஸ்ஸில் வீரபாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் மாணவிகளும் படிகளில் நின்றவரே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:-
வெளி சந்தைகளில் தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்திய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலைக்கு தக்காளி பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
- ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
- திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான கிராம இணைப்பு சாலை கோரிக்கைக்கு தற்பொழுது ரூ.2.29 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை இருந்தது.
தற்பொழுது விவசாயம் மற்றும் ஜவுளி பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல சிறு பாலங்கள் கட்டுவதற்கும் இத்திட்டப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 2½ கி.மீ. தொலைவிற்கு 5 பாலங்களுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, திம்மரச நாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்க்ஷயா தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது.
- இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 2349 கன அடி நீர் வரை தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.
இதனால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மழைப்பொழிவு குறைந்ததால் வேகமாக உயர்ந்து வந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது குறைந்த அளவு நீர்வரத்தால் பெரிய அளவில் உயரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 50.13 அடியாக உள்ளது. 152 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.55 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 0.2, தேக்கடி 0.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.
- நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்
- அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கூடலூர்:
தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த லோயர்கேம்ப் எல்.எப். ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸபெக்டர் சுப்புலட்சுமியிடம் தகவல் தெரிவித்து ரேசன் அரிசி கடத்திய நபரையும் ஒப்படைத்தனர்.
- ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
- வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் கடந்த 2008-2009ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தற்போது வரை அந்த வணிக வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
இதனால் வணிக வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சிதிலமடைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணாகியுள்ளது. எனவே இந்த வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் இந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
- இந்த நிலையில் கணவரின் தந்தை, தாய், சகோதரர் ஆகியோர் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் சோனியாகாந்தி (வயது34) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவரின் தந்தை செல்வம், தாய் விஜயா, சகோதரர் மகாராஜன் ஆகியோர் சோனியா காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






