என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Application distribution to households"

    • ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.
    • விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    சமத்துவப் பாதையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரம் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் என 2 முக்கிய நோக்கங்களை கொண்டது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து தந்துள்ளது. இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவற்காக அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் முகாம் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பணிகளையும், முகாம் நடைபெறும் நாளன்று தேவையான குடிநீர், இருக்கை வசதிகள், இணைய வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் 517 ரேசன் கடைகள் உள்ளன. இக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்களால் வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேசன்கடைக்கு குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப தலைவிகள் முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் பொழுது, குடும்ப அட்டை அசல், ஆதார் அட்டைஅசல், வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகிய 4 வகையான அடையாள அட்டைகளை அசலாக எடுத்து செல்ல வேண்டும்.

    விண்ணப்பத்தோடு எந்தவிதமான ஆவணங்களின் நகலினையும் இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு மையத்திலோ அல்லது விண்ணப்பங்களுக்கோ எந்த விதமான கட்டணங்களும் செலுத்த தேவையில்லை.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரிபார்த்திட விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு சென்றவுடன் உதவி மையங்களில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பப் பதிவு பணியாளரிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஒரு குடும்ப அட்டையில் உள்ள பெண்களில் ஒருவர் மட்டுமே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பப் பதிவு மையத்திற்கு நேரில் எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள எண் கொண்ட கைப்பேசியினை எடுத்து செல்வது விண்ணப்பத்தினை பதிவு செய்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    ×