என் மலர்
தேனி
- யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.
அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.
தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளில் போதுமான கழிப்பட வசதி இல்லாததால் கம்பம்மெட்டு சாலையில் உள்ள நகராட்சி பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் சேதமடைந்ததையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுகாதார வளாகம் மூடப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது.
பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன தூய்மை வளாகம் கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்து தூய்மை வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சுகாதார வளாகத்தை திறக்க கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையில் சேனை ஓடையை ஒட்டியிருந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரமில்லாததால் அந்த சுகாதார வளாகத்தையும் பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கம்பம்மெட்டு சாலையில் உள்ள நவீன சுகாதார வளாகத்தை திறக்க கோரி பெண்கள் ஏ.கே.ஜி. திடல் முன்பு கம்பம் - கூடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாக்டர் அம்பேத்கர் தெரு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். தற்காலிகமாக சுகாதாரமின்றி கிடக்கும் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் சேனை ஓடையில் உள்ள சுகாதார வளாகத்தை உடனடியாக சரி செய்து தருவதாக நகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நகராட்சியில் ஆணையாளர் பதவி காலி இடமாக உள்ளதால் புதிய ஆணையாளர் வந்தவுடன் வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி நவீன சுகாதார வளாகம் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமலும், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதியடைந்தனர்.
- நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி வ.உ.சி. நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி முத்துமணி (வயது 42). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
- பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்து நின்று விட்டது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு வரவில்லை.
115 அடியில் இருந்து பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடிக்கு உயர்ந்த நிலையில் அதன் பிறகு மழை குறைந்ததால் நீர் வரத்து நின்றது. இருந்தபோதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.70 அடியாக உள்ளது. நேற்று 197 கன அடி வந்த நிலையில் இன்று காலை 97 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2574 மி.கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 49.89 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1977 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 70.52 அடியாகவும் உள்ளது.
- சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
- படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 33). இவர் தனது உறவினர் மாறன் (57) என்பவருடன் வேலை நிமித்தமாக சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
- சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.
சின்னமனூர்:
சின்னமனூரில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. சின்னமனூர் - உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திட்டத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் மின் மாற்றிகள், உயர் அழுத்த மின் கம்பிகளை ஒட்டிய பகுதிகளில் மண் அகற்றப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நிற்பதால் எப்பொழுதும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஒருபுறம் வாகனங்கள் அதிகம் போக்குவரத்துள்ள தேசிய நெடுஞ்சாலை, மறுபுறம் விவசாய நிலங்கள் என்ற இரண்டுக்கும் நடுவே ஆபத்தான நிலையில் எந்த பிடிமானமும் இல்லாமல் சாய்ந்த நிலையில் மின் மாற்றிகளும் உயர் மின்னழுத்த கம்பிகளும் நிற்கின்றன .இதனால் வாகன ஓட்டிகளும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.
குழாய் பதிப்புக்காக பணிகள் நடைபெற்ற போது பாசனத்திற்காக இருந்த நீர் வழி பாதைகள் சிதைக்கப்பட்டு தற்போது நீர் பாசன வசதி பெற முடியாமல் பல ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன .மேலும் சின்னமனூர் பைபாஸ் சந்திப்பில் விவசாய நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதினால் கடந்த 2 நாட்களாக விவசாயத்திற்கு உள்ள நீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையும் பழுதடைந்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
குழாய் பதிப்பிற்காக தார்சாலையை ஒட்டி சில இடங்களில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலை எந்த பிடிமானம் இல்லாமல் சரிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. சின்னமனூர் - கம்பம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குழாய் பதிப்பு பணிகளை முழுமையாக முடித்து சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
- தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.
தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே பாம்பு நுழைந்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி கீழத்தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதியில் சங்கரன் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு நுழைந்தது.
அங்கே எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே நுழைந்தது. அந்த சமயத்தில் நல்ல பாம்பும் உள்ளே வசமாக சிக்கிக்கொண்டது.
எலி வலைக்குள் இருந்த நல்ல பாம்பு ஆக்ரோஷமாக சீறியதைக் கண்டு சங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். பின்னர் இது குறித்து போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வைகை அணை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
சுற்றுலாத்துறை மக்களின் முக்கிய தேவையாக இன்றைய காலகட்டத்தில் மாறியுள்ளது. வேலைப்பளுவின் காரணமாக மன அமைதிக்கு ஓய்வு எடுக்கவும் மறுபடியும் ஊக்கத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை மன அழுத்தத்தை போக்க சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை முடக்கி இருந்தது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.
சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சாத்திக்கூறுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் புதிய படகு சவாரிகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
- சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது.
தை முதல் ஆனி மாதம் வரை உள்ள பொழுது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பகல் காலம் முடிவடைந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த காலத்தை தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைப்பார்கள். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் முதல் நாளிலும், 31-ம் நாளிலும் 2 அமாவாசை வருகிறது. இது போன்ற விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
வழக்கமாக எல்லா அமாவாசை நாட்களும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஆடி மாத பிறப்பின் முதல் நாளில் அமாவாசை வருவதால் இன்று பல்வேறு இடங்களில் புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்புனித நீராடி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூடுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சுருளி அருவியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் இந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.
இதனையடுத்து இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அதில் ஆனந்தமாக நீராடி அதன் பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் இங்குள்ள விஸ்வநாதர், பூதநாராயணன் கோவிலிலும் வழிபாடு செய்தனர். இது மட்டுமின்றி அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட சுருளி அருவி இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.
இங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
- ஆண்டிபட்டியில் மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
- இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
மதுரை-போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 15-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டதால் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து தினசரி காலை 9.24 மணிக்கும், சென்னையில் இருந்து வாரம் 3 முறை இயக்கப்படும் குளிர்சாதன விரைவு ரெயில் காலை 8.20 மணிக்கும் ஆண்டிபட்டிக்கு வருகிறது.
இதேபோல் மதுரைக்கு மாலை 6.34 மணிக்கும், சென்னைக்கு இரவு 9.10 மணிக்கும் ரெயில்கள் திரும்பி செல்கின்றன. இந்தநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ரெயில் நிலையம் பூட்டப்படுகிறது. ஆண்டிபட்டி ரெயில் நிலையத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே வரும் பயணிகள் ரெயில் நிலையம் பூட்டப்பட்டு ள்ளதால் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிபட்டி பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.
- கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி மீனாட்சி (வயது 45). இவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மீனாட்சியின் மகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கேரளாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக ஈஸ்வரன் கேரளாவில் இருந்து கோம்பைக்கு வந்தார். அப்போது மீனாட்சியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயன்றார்.
உயிருக்கு பயந்து அவர் வெளியே ஓடி வரவே வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஈஸ்வரன் சூறையாடி ரூ.5 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இது குறித்து மீனாட்சி கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






