என் மலர்tooltip icon

    தேனி

    • அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    • சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

    அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
    • சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன.

    குறிப்பாக புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய காலகட்டங்களில் மக்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் பாறை ஓவியங்களும், நெடுங்கற்கள், கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி போன்றவை உள்ளன.

    பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் ஒன்றாக கற்பதுகையுடனான குத்துக்கல் அமைப்பு தமிழ் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவு இப்பகுதியில் வெம்பூர் கிராமத்திற்கு அருகே கல்லாதிபுரத்தில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பலநூறு நெடுங்கல் தூண்கள் இருந்தன. அவை அனைத்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டு, விளைநிலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

    இது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த பெருங்கற்கால, புதிய கற்கால நினைவு சின்னங்களை நாள்தோறும் சிதைத்தும் அழித்தும் வருகின்றனர். வருசநாட்டின் பெருமையை மட்டுமின்றி, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றக்கூடிய தொல் நினைவுச் சின்னங்களை, தொல்லியல் துறை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியை ஆவணம் செய்து அகழாய்வு செய்திட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் என்பவர் கூறுகையில், வருசநாடு அருகே உள்ள வெம்பூர் பகுதியில் உள்ள நடுகல் தமிழகத்திலேயே மிக உயரமான கல்லாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த கல் உள்ளது. இது ஆவண படுத்தப்பட்டதற்கான சான்றும் உள்ளது.

    ஆனால் பராமரிப்பின்றி இருப்பதால் இதனை பாதுகாக்க வேண்டும். மேலும் தங்கம்மாள்புரத்தில் பொட்டி அம்மன் கோவில் தற்போது சிவன் கோவில் என அழைக்கப்படுகிறது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது. இந்த கோவிலில் இருந்த பழமையான கற்களை பொதுமக்கள் தாங்கள் வீடு கட்ட எடுத்து சென்று விட்டனர்.

    மீதமுள்ள சிலைகள் மற்றும் பழமையான கற்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாண்டியர் காலத்தில் மாறவர்மனால் கடமலைக்குண்டுவில் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அதுவும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இங்கு பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    இப்பகுதியில் தேன் மற்றும் மூலிகை எடுக்க செல்லும் மக்களால் இந்த பாறை ஓவியங்கள் எரித்து, சேதப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது. கீழடியைப் போல இங்கேயும் தொல்லியல்துறை ஆய்வு நடத்தி அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் மீதமுள்ள சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.
    • திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டுக்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 22-ந்தேதி ஆடிப்பெருந்திருவிழா தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிர மாக நடந்து வருகின்றன.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளார். ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.

    முப்பெரும் தெய்வங்க ளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானு க்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்க ளுடன் காட்சி அளிக்கிறார்.

    இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளில் நடை பெறுவது வழக்கம். இதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. முதல் சனி வார திருவிழாவன்று காலை 11 மணிக்கு கலிப்பணம் கலிக்கப்படும். பின்பு கோவில் வளாகத்தைச் சுற்றிலும் சுத்தநீர் தெளித்து வழிபாடு நடைபெறும்.

    பூலாந்தபுரம் ராஜ கம்பளத்தார் திருவிழா வுக்கான சகுனம் பார்ப்பர். அப்போது காகம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பறந்து செல்வது சுவாமி உத்தரவாக எடுத்துக் கொள்ளப் படும்.

    இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். அன்றும், ஒவ்வொரு ஆடி மாத சனிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆகஸ்ட் 4-ந்தேதி பகல் 12.30 மணிக்கு சிறப்பு நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு சனிதோறும் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சள் காப்பு சாத்துப்படி, சுவாமி புறப்பாடு, ஆக.7-ம் தேதி மாலை 6 மணிக்கு லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆக.19-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடையும்.

    விழாவை முன்னிட்டு கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று நெரிசலின்றி வெளி யேறும் வகையில் தனிப்பா தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்களில் மதுரை, திண்டு க்கல், போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    • மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைஅணையில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டனர்.

    இதனால் ஏற்கனவே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்து தற்போது அவர்கள் மூலமாகவே மீன்கள் பிடிக்கப்பட்டு குத்தகைதாரர் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

    காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிசலில் செல்ல மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வழக்கமாக 65 மீன்பிடி பரிசலில் சென்று மீன்பிடிப்பார்கள். ஆனால் தற்போது 30 பரிசல்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஒரு டன் வரை மீன்கள் கிடைத்த நிலையில் தற்போது 300 முதல் 400 கிலோ வரை மட்டுமே மீன்கள் வரத்து உள்ளதாக குத்தகைதாரர் தெரிவிக்கின்றார்.

    காற்றின்வேகம் குறைந்த பின்பு அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார்.
    • அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தியதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவிந்த்(45). இவருக்கு மஞ்சளாறு அணை பகுதியில் மாந்தோப்பு உள்ளது. இதன் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது.

    அவர் சென்றுவர தனது நிலத்தில் பாதை அமைக்க ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் பிரவிந்த் தோப்பு கேட், பூட்டு மற்றும் கரையை ஜே.சி.பி எந்திரம் மூலம் மணி சேதப்படுத்தினார். மேலும் அவரது தோட்டத்திற்கு செல்ல பாதையை மேலும் அகலப்படுத்தி உள்ளார். இதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றபோது பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது.
    • படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    கம்பம் ஆலமர தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(50). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும் உள்ளனர். சரவணக்குமாருக்கு திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்த நாகராஜ் கிடைக்கும் வேலையை செய்து வந்தார்.

    இந்தநிலையில் க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் உழவு பணி மேற்கொள்ள டிராக்டரை ஓட்டிச்சென்றார். பின்னோக்கி டிராக்டரை இயக்கியபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தவறிவிழுந்த நாகராஜ் மீது டிராக்டர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகராைஜ அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வாட்டர் டேங்க் பின்புறம் வசித்து வருபவர் கண்ணன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருள்கார்த்திகா (17) என்ற மகளும், பார்த்த சாரதி (16) என்ற மகனும் உள்ளனர்.

    பார்த்தசாரதி ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரின் ஆட்டோவை பார்த்த சாரதி சுக்காங்கால்பட்டி அருகே ஓட்டிச் சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சின்னமனூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் அலுவலர்கள் போடி பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி வளாக கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரண்யா, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு த்துறை அலுவலர்கள் சுரேஷ், மணிகண்டன், அகமது உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது காலாவ தியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள், மெகுழு பூசப்பட்ட பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
    • பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.

    கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலை ஹைவேஸ் பேரூராட்சி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஹைவேஸ் பேரூராட்சி மலைப்பகுதி என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் ஞானம் என்பவர் கூறியதாவது:-

    இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்களும் வாங்குவதற்கு ஹைவேஸ் பேரூராட்சியில் அலுவலகம் இல்லாததால் அங்கிருந்து 50 கி.மீ தூரமுள்ள உத்தமபாளையம் செல்லும் நிலை உள்ளது. இதனால் ஒரு நாள் அவர்களது வேலையை விட்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஹைவேவிஸ் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

    மணலாறு- மகாராஜா மெட்டுவரை சாலை வசதிகள் இதுவரை செய்து தரவில்லை. எனவே உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான சமுதாயக்கூடம் சேதம் அடைந்து உள்ளது. இதை சரி செய்து தர வேண்டும்.

    ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள வணிக வளாகத்தில் சுமார் 14 கடைகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த வணிக வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.

    சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் தங்கும் விடுதியில் முறையான அலுவலர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்களே அலுவலர் பணியை பார்த்து வருகிறார்கள்.

    ரேசன் கடைகளில் விலை இல்லா அரிசி மற்ற பொருள்கள் சரியான முறையில் விநியோகிக்க படுவதில்லை. இதை நம்பி வாழும் கூலி வேலை செய்யும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    ஹைவேவிஸ் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டி பயன் பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இக்கட்டிடத்தை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவருக்கும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உசிலம்பட்டியில் இருந்து அல்லிநகரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    • அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கன் (வயது 70). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு அல்லிநகரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.
    • இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்கு சுமார் 5 சதுர கி.மீ. பரப்பில் மீனாட்சி அம்மன் கண்மாய் அமைந்துள்ளது.

    மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    மேலும் இக்குளத்தில் உற்பத்தியாகும் மீன்களை உண்பதற்காக கொக்கு,நாரை, வாத்து, நீர்க்காகம், மீன் கொத்தி பறவை, கரண்டிமூக்கன் பெலிக்கண் போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் ஆயிரக்கணக்கில் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் இந்த கண்மாய்க்கு கால்வாய்கள் மூலம் வந்தடைகிறது.

    அம்மாபட்டி ஊராட்சிக்கு சொந்தமான இந்த கண்மாயில் தற்போது மீன்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை, கண்ணாடி கெண்டை, உழுவை, குரவை, கெழுத்தி, நாட்டு ரக மீன்கள் உற்பத்தி இனப்பெருக்கம் செய்யப்பட்டு தினமும் சுமார் 500 கிலோ முதல் 750 கிலோ வரை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    தற்போது போதிய மழையின்மை காரணமாக கண்மாய் க்கு வரும் நீர்வரத்து நின்று விட்டதால் கண்மாயில் நீர் வற்றி குறைந்து காணப்படுகிறது.

    தற்போது சில நாட்களாக இந்த கண்மாயில் தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளது. இதனால் கண்மாயை சுற்றிலும் மீன்கள் செத்து மடிந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.

    போதிய மழை இல்லாத காரணத்தினால் கண் மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் மேல சொக்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.

    தினமும் இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடான கண்மாயாக மாறி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

    ×