என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை:

    தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி மே மாதத்திற்கு அனைத்து (பண்டகமில்லா குடும்ப அட்டை நீங்கலாக) குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை அட்டை தாரர்களின் உரிம அளவின்படி விலையில்லாமல் நியாய விலைக்கடைகள் மூலம் இன்று (4-ந்தேதி) முதல் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும் மேற்படி அத்தியாவசியப் பொருட்களோடு முன்னுரிமை, முன்னுரிமையற்ற மற்றும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

    குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற ஏதுவாக பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் கடந்த 2 நாட்களாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

    காரைக்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவியை கணவன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடி:

    காரைக்குடி குறிஞ்சி கண்மாய பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 40). காரைக்குடியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகந்தி (வயது 35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    காதல் திருமணம் செய்த இவர்களிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

    வழக்கம்போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் செந்தில் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து சுகந்தி மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. உடல் கருகிய சுகந்தியை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார்.

    குற்றுயிராய் கிடந்த சுகந்தி போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் கணவரே தன் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து செந்திலிடம் விசாரணை நடைபெறுகிறது.

    கொரோனாவின் பிடியில் இருந்து சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி என்பது குறித்து அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
    சிவகங்கை:

    தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிவகங்கை மாவட்டம் தன்பக்கம் ஈர்த்து உள்ளது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் அறிகுறிகள் வந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் அதை எதிர்கொள்ள தயார் ஆகிவிட்டது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து துறையினரையும் அழைத்து பேசி, அனைவரும் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த மார்ச் 1ந் தேதிக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த 5 ஆயிரத்து 11 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    28 நாட்கள் சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்தனர். இந்த 28 நாட்களும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு 5 வயது சிறுமி உள்பட 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்களால் சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது. இன்று வரை தீவிரமாக காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள், குறிப்பாக சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்த முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை உள்ளது.
    சிவகங்கை:
     
    சிவகங்கை  மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு மேல் அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் நின்று விட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

    சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.

    சிகிச்சையில் இருந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ் ஆனதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சிவகங்கை உள்ளது. 
    மோட்டார் சைக்கிள்கள் மோதலில் காயம் அடைந்த பயிற்சி பெண் டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றியவர் ஆவார்.
    சிவகங்கை:

    பெரம்பலூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் அங்கு டெய்லராக உள்ளார். இவருடைய மகள் அகிலா (வயது 23). இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார்.

    அதன்பின்பு அகிலா கடந்த ஓராண்டாக பயிற்சி டாக்டராக சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த மார்ச் 28-ந் தேதியுடன் பயிற்சி டாக்டர் பணி முடிந்தது. இந்த நிலையில் அவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மேலும் ஒரு மாதம் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.

    அதன்பின்பு சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றினார். சம்பவத்தன்று அகிலாவும், மற்றொரு பயிற்சி டாக்டரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பிரபஞ்சன் (23) என்பவரும் பூவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு சான்றிதழை பெற மோட்டார் சைக்கிளில் சென்று இருந்தனர். அந்த சான்றிதழை பெற்றுக் கொண்டு சிவகங்கையை நோக்கி திரும்பி வந்தனர்.

    குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

    இதில் டாக்டர்கள் பிரபஞ்சன், அகிலா மற்றும் கருப்பணன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அகிலா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் மற்றும் டாக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கொரோனா தாக்குதலில் இருந்து சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
    சிவகங்கை:

    கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து, முடக்கி போட்டுள்ளது. அதில் இந்தியாவும், அதில் தென் கோடி மாநிலமான தமிழகமும் தப்பவில்லை.

    தூங்கா நகரம் என்ற பெயரை கொண்ட மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில், மதுரையையொட்டி உள்ள சிவகங்கை மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    அதாவது, கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சிவகங்கை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அந்த மாவட்டத்தில் 12 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு மேல் அந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் நின்று விட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார்.

    இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிவகங்கை தன்பக்கம் ஈர்த்து உள்ளது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் அறிகுறிகள் வந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் அதை எதிர் கொள்ள தயார் ஆகிவிட்டது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து துறையினரையும் அழைத்து பேசி, அனைவரும் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

    இதில் முக்கியமாக பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த 5 ஆயிரத்து 11 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை 28 நாட்கள் சுகாதாரத்துறையினர் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்தனர். இந்த 28 நாட்களும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

    கொரோனா வைரஸ் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்களால் சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது.

    அத்துடன் அவர்கள் வசித்த பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர்கள் குணம் அடைந்தாலும், அந்த பகுதிகளில் 28 நாட்களுக்கு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் நோய் பரவல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி துறையினருடன் இணைந்து தினமும் வீடு வீடாக சென்று அங்குள்ள யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று கண்காணித்து வந்தனர். இன்று வரை இந்த பணி தொடர்கிறது.

    மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகள், 3 நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கபசுர குடிநீர் தொடர்ந்து 3 நாட்கள் வழங்கப்பட்டது.

    அதுதவிர போலீசார் உதவியுடன் தெருக்களில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த நோய் தவிர்ப்பு நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்பு நன்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு ஊழியர்களும், அயராது பாடுபட்டனர். பஸ்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு என்று தனி பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து துறை ஊழியர்கள் ஆதரவால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    தஞ்சை பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். இவர் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமானார். அந்த பெண் ஒருதலையாக அந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் டிக்-டாக் பழக்கத்தை கைவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த பெண், தனது காதலில் தீவிரமாக இருந்தார்.

    தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த வாரம் அந்த பெண், மதுரை வாலிபரை பார்ப்பதற்காக தஞ்சையில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக கூறி, டிக்-டாக் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தனியாக மதுரையை நோக்கி நடந்துவருவதாகவும், சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும், காதல் பாடல்களை பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறேன் என்பதையும் வீடியோ பதிவாக செல்போனில் படம் பிடித்து அவ்வப்போது அதனையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    அவர் நேற்று மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வந்துவிட்டதாகவும், அந்த வாலிபரின் பெயரை குறிப்பிட்டு தன்னை மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்து செல்லும்படி கூறி ஒரு வீடியோவை டிக்-டாக் மூலம் பதிவு செய்தார். இவரது வீடியோவை வலைத்தளங்களில் பார்க்கும் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியும், இன்னும் சிலர் அவரை வசை பாடியும், இன்னும் சிலர் போலீசார் இதை கவனிக்க வேண்டும் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
    காரைக்குடி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியையும் முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. தள்ளுவண்டிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று காய்கறி வழங்கப்படுகிறது.

    அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் சமூக கட்டுப்பாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறது.

    இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள். பூரண குணமடைந்த அவர்களை கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் டாக்டர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்.

    தேவகோட்டை அகதிகள் முகாமில் குடும்ப அட்டை இல்லாத 55 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
     தேவகோட்டை:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே தேவகோட்டை சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தேவகோட்டை அகதிகள் முகாமில் குடும்ப அட்டை இல்லாத 55 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் சிலம்பனி வீதியில் உள்ள 25 குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சாலை ஓரங்களில் வசிப்பவர்ளுக்கு சங்க நிர்வாகிகள் பாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு டீ, பிஸ்கட், முகக் கவசங்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

    நிகழ்ச்சிகளில் தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக சேவை செய்த நிர்வாகிகள் அனைவரையும் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாராட்டினார்.

    தலைவர் அறிவழகன், உடனடிமுன்னாள் தலைவர் கப்பலூர் பாஸ்கரன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சுப்பிரமணி, துணை தலைவர்கள் வேலுச்சாமி, நடராஜன், யோகலட்சுமி, இணை செயலாளர் சரவணன் சேவை திட்ட இயக்குனர் சிவசுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
    பன்னீர் திராட்சையை விவசாயிகள் பலர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள திராட்சையை ஊரடங்கினால், அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுள்ளனர். இதனால் திராட்சை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
    காரைக்குடி:

    தென்மாவட்டங்களில் ஆங்காங்கே திராட்சை சாகுபடி நடந்து வருகிறது. அதிலும் பன்னீர் திராட்சையை விவசாயிகள் பலர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள திராட்சையை ஊரடங்கினால், அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுள்ளனர். இதனால் திராட்சை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    காரைக்குடி அருகே பேயன்பட்டி பகுதியில் பொறியியல் பட்டதாரியான விடுதலை அரசு, தனது தோட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார். கொரோனாவினால் அமலில் உள்ள ஊரடங்கு திராட்சை விவசாயத்தை எந்த அளவுக்கு பாதித்து உள்ளது என்பது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது தோட்டத்தில் 3 ஏக்கர் நிலத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்த திராட்சை செடி குச்சிகளை வைத்து பயிரிட்டுள்ளேன். ஆண்டுதோறும் இந்த செடிகளுக்கு வேலையாட்கள் மூலம் பராமரிப்பு செய்து அறுவடை காலங்களில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் இங்கு வந்து, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ளூர் பகுதி மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் தோட்டத்தின் அருகிலேயே விற்பனை நிலையம் அமைத்து நேரடியாக விற்பனை செய்து வந்தேன்.

    நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது அறுவடை செய்த பழங்களை வெளி மாவட்டத்திற்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் உள்ளூரில் உள்ள வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்துள்ளேன். கடந்த காலங்களில் 6 டன் வரை அறுவடை செய்யப்பட்டு வந்த இந்த திராட்சை பழங்கள், தற்போது அதிக அளவில் வெப்பம் உள்ளதால் குறைந்தளவு மட்டும் அறுவடை செய்ய முடிகிறது.

    ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு விளைந்த திராட்சை பழங்களை குறைந்த விலைக்கு தான் விற்பனை செய்ய முடிந்தது. கொரோனா காரணமாக இந்தாண்டு திராட்சை சாகுபடியில் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் கிராமத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் கிராம நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    நாடு முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு, மக்களும் பல்வேறு தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் நுழைவு வாயிலில் தற்காலிகமாக தடுப்பு அமைத்து அதில் 2 அல்லது 3 பேர் தங்களது கிராமத்திற்கு வெளி நபர்கள் யாரும் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பிற்காக நிற்கின்றனர். 

    இதுதவிர வெளிப்பகுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தி பொருட்களை வாங்குகின்றனர். மேலும் வீடுகள் தோறும் வேப்பிலை தோரணங்களை தொங்க விட்டும், வீதிகளில் மஞ்சள் கலந்த கிருமி நாசினி தண்ணீர் தெளித்தும் வருகின்றனர்.

    இதுகுறித்து காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கிராம மக்கள் கூறியதாவது:-

    தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுக்கும் செயல்பாடுகளை விட பொதுமக்கள் நாம் தான் அதிகளவில் ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்போடு இருக்க வேண்டும். முககவசம் அணிதல், வெளியே செல்லாமல் வீட்டில் இருத்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும். 

    எங்கள் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெளிநபர்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக தடுப்பு அமைத்து அந்த பகுதியில் இரவு பகலாக பாதுகாத்து வருகிறோம். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கினால் கூட அதை பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் செல்கின்றனர். 

    இவ்வாறு கூறினர்.
    சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை பிரிவை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறிய இதுவரை கொரோனா அறிகுறிகளோடு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நபர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இதனால் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாஸ்கரன் இந்த பரிசோதனை பிரிவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் ரெத்தினவேல், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-

    இதுவரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உள்ளதா என்பதை அறிய கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க தற்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதற்கான பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இனி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    ×