என் மலர்
சேலம்
- ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேலம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு, பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலர் அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு பிரதோஷ வழிபாட்டு கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது. வேப்பி லைப்பட்டி, கல்யாணகிரி, மோட்டூர் சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடடில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு மேல் கனமழையாக கொட்டியது.
ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் மலைபாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் அதிகமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
- ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார்.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( 28), ரவுடி. இவரது மனைவி மோனிஷா (24), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு மோனிஷா கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் அண்ணாதுரை வீட்டிற்கு பிரபாகரன் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியாரையும் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து அவர் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று பிரபாகரன் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.
- மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம் கங்காநியூர் பகுதியை சேர்ந்தவர் கோபி.
இவரது மனைவி பூங்கொடி (38). இவர் அதே பகுதியில் உள்ள உத்திரவேலு என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் மில்லில் கடந்த 7 வருடமாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பூங்கொடியின் சேலை கயிறு திரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் பூங்கொடி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பூங்கொடி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின் மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
- மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
ஏற்காடு:
நாட்டில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய அளவில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், மாநில அளவில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், மாவட்ட அளவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும், வட்ட அளவில் வட்ட சட்டப்பணிகள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதியில் இருந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி நேற்று முதல் ஏற்காடு தாலுகாவில் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்காடு நீதிமன்ற கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவில் தகுதியான நலிவடைந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்குதல், மக்கள் நீதிமன்றம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சட்ட முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஏற்காடு பொதுமக்கள் மேற்கண்ட சட்ட உதவிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
- அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக பரிமளா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22), இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் ஹரிகரன் மீது போக்சோ வ ழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
- மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும் இதற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட மாட்டாது. அதேசமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந்தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு இன்று முதல் அடுத்த மாதம் 9- ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
- இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
சேலம்:
சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சபரிநாதன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசில் சபரிநாதன் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும் மகளும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சுரேஷ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில் 2 மகள்களும் பரிதவிப்பில் உள்ளனர்.
- தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
சேலம்:
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பாரி, ராஜேந்திரன், மணிகண்டன், ரபார்ட் கிங்ஸ்லி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.






