என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தடுப்பூசி போட்டவர்களின் விவர பட்டியலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சோளிங்கர்:

    சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. அங்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு முறையாக சான்றிதழ் கிடைப்பதில்லை, எனப் புகார் எழுந்தது.

    இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ேநற்று திடீரென கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவர பட்டியலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ள 16-வது மெகா தடுப்பூசி போடும் முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதில் முதல் தவணை தடுப்பூசியை அதிக நபர்களுக்கு செலுத்த வேண்டும். அதற்காக, அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்டு பொறுப்பாளர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் தங்களது முழு பங்களிப்பை அளிக்க வேண்டும். காலை 8 மணிக்கு முகாம் தொடங்குவதில் எந்தக் காலதாமதமும் இருக்கக்கூடாது. மாலை 6 மணிக்கு முன்னதாக முகாமை முடிக்கக்கூடாது.

    தேவைப்படும் இடங்களுக்கு முகாமை மாற்றிக் கொள்ளலாம். செயல்படாத வார்டு பொறுப்பாளர்களின் பெயர் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    அப்போது சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் கணினி ஆபரேட்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமனார் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
    காவேரிப்பாக்கம்:

    பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜீவா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குழந்தை இல்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் ஜீவா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாணாவரம் போலீசார், உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜீவாவின் தாயார் சுமதி அளித்த புகாரின்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருமணமாகி 3½ வருடங்களே ஆவதால் ஜீவாவின் தற்கொலை குறித்து கோட்டாட்சியர் பூங்கொடி விசாரணை செய்தார். இதில் ஜீவாவை தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது.

    இதனையடுத்து கணவர் கார்த்திகேயன், மாமனார் நரசிம்மன், மைத்துனர் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜா கிளை சிறையிலும் மாமியார் சாந்தியை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
    ஏகாம்பரநல்லூரில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவர் அதேப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீசார், சக்தியை கைதுசெய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது சம்பவத்தில் அதிஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் 7 பேர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிற்சாலைக்கு ஒரு தனியார் வேனில் நேற்று காலை வந்து கொண்டிருந்தனர். அந்த வேன் தொழிற்சாலை அருகில் வந்த போது திடீரென வேனில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் வேனை நிறுத்தி உள்ளே இருந்த ஊழியர்களை கீழே இறக்கி விட்டு புகை வெளியேறுவதை சரி செய்ய முயன்றார். அப்போது குபீரென தீப்பிடித்து வேன் எரிந்தது.

    தகவல் அறிந்ததும் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமாகியது.

    இந்தத் தீ விபத்து திருவள்ளூர் மாவட்ட எல்லையில் நடந்ததால் திருவாலாங்காடு போலீசார் விசாரித்தனர். புகை வெளியேறுவதை கண்ட டிரைவர் வேனை நிறுத்தியதால் 7 பேரும் அசம்பாவிதமின்றி உயிர் தப்பினர். ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரக்கோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,994 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 132 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பங்களை வழங்கினர். மாற்றுத் திறனாளிகளின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்கினர். அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் கலெக்டர் அறிவுரையின்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 37 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

    இந்த முகாமில் உடல் செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.1,500 மற்றும் மாற்றுத்திறனாளிகளை பார்த்து கொள்பவர்களுக்கு பராமரிப்புத் தொகை ரூ.1000 வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டது.‌

    முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், மாவட்டத்தில் இதுவரை 1,239 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, 1,113 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை, 1,642 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை என 3,994 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 6 பேருக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 247 மாற்றுத்திறனாளிகள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 நபர்களுக்கு உயர் ஆதரவற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    உறவினர்கள் தாக்கியதில் பெண் மரணம் அடைந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. இவரது மகன் ரமேஷ். இவருடைய மனைவி ரேவதி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ரமேஷின் தாய் புஷ்பா, மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதில் மாமியார், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் உள்ள ரேவதியின் தந்தை நீலமேகம், அண்ணன் சதீஷ்குமார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்கோலத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது ரேவதியை பார்க்க சென்றபோது ரேவதிக்கும், புஷ்பாவுக்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்து புஷ்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த புஷ்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், பாலாஜி, தட்சிணாமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சோளிங்கர் தாலுகா ஜானகாபுரத்தை சார்ந்த சோமு, நீலமேகம் மற்றும் ரேவதி ஆகியோரை நேற்று அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி கைது செய்தார்.
    அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதும், ரெயில் தடம் புரள்வதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் 6 முறைக்கு மேல் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் முக்கியமான சந்திப்பாக உள்ளது. சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், கோவை மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.

    அரக்கோணம் தண்டவாள பகுதியில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் அடுத்த மோசூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் தடம்புரண்டது.

    நேற்று மதியம் காட்பாடியில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு ரெயில் அரக்கோணம் சித்தேரி அருகே பசுமாட்டின் மீது மோதி தடம்புரண்டது.

    இந்த நிலையில் இன்று காலை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பார்மில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

    அதை ரெயில் பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தண்டவாளம் சரி செய்யப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் தாமதமாக சென்றன. மேலும் தண்டவாள விரிசல் உடனடியாக சரி செய்யப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதும், ரெயில் தடம் புரள்வதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் 6 முறைக்கு மேல் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அன்வர்திகான்பேட்டையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் மின்கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ராடெக் சிமெண்டு, குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை அரக்கோணம் மின்கோட்ட செயற் பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (34). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவ பரிசோதனையின்போது, கடந்த 13-ந்தேதி பிரசவத்திற்கு நாள் குறித்து கொடுத்துள்ளனர். ஆனால் அன்று கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்த லோகநாதன் தனது அக்காள் கீதாவின் உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

    இதில் கடும் போராட்டத்திற்கு பிறகு கோமதிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அதிக ரத்த போக்கால் கோமதியின் உடல் நிலை கவலைக்கிடமானது.

    இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் உடனடியாக தனது மனைவியை அருகேயுள்ள புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

    அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கோமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோகன் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் லோகநாதன் அவரது அக்கா கீதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    திமிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆயிரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48), தொழிலாளி. இவரது மனைவி லலிதா. நேற்று முன்தினம் இரவு பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் லலிதா கோபித்துக்கொண்டு பக்கத்து கிராமமான சீயாம்பாடி கிராமத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணி அளவில் எழுந்து பார்க்கும் போது பழனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே வீடு புகுந்து 3 பெண்கள் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி என்பவரது மனைவி சுதா (வயது 52). மகன் புஷ்கரன் (24).ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு புஷ்கரன் அவரது தாயார் சுதா, பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் கதவைத் தட்டினர். யாரோ உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்கரன் கதவைத் திறக்கச் சென்றார்.

    இருந்தாலும் சந்தேகத்துடன் மெதுவாக கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக கதவை உட்புறமாக பூட்டினார். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக புஷ்கரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த புஷ்கரன் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு கண்விழித்த அவரது குடும்பத்தினர் கதறி கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். மேலும் புஷ்கரனின் தாயார், பெரியம்மா, பாட்டி ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தனர். புஷ்கரனை கத்தியால் வெட்டினர். இதில் அவர் மயங்கினார்.

    இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மாறி மாறி பேசி அந்த கும்பல் அவர்களை மிரட்டினர்.

    துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் புஷ்கரன் தாயார் உள்ளிட்ட பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர்.

    மொத்தம் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவினர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நாங்கள் மீண்டும் இங்கு வருவோம். உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    புஷ்கரன்

    புஷ்கரன் செல்போன் மட்டும் கொள்ளையர்கள் கண்ணில்படவில்லை. அந்த போன் மூலம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட 4 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தீரன் சினிமா பட பாணியில் ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மொழிகளில் பேசியதால் இவர்கள் வட இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படியுங்கள்...பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி - கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

    பனப்பாக்கம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த சிறு வளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் குமார்.பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த 5 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக சக்திவேல் குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சக்திவேல் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×