என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரியகுக்குண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாலாஜா அடுத்த தகரகுப்பத்தை சேர்ந்த மகேஸ்வரி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மகேஸ்வரியும் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி மகேஸ்வரி தகர குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெய்சங்கர் பல இடங்களில் தனது மனைவியை தேடினார். ஆனால் அவரை காணவில்லை.
ஜெய்சங்கர் இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெரியகுக்குண்டி பகுதியிலுள்ள ஒரு விவசாய கிணற்றில் மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக மகேஸ்வரியின் கள்ளக்காதலர்களான பெரிய குக்குண்டி மற்றும் பழையனூரை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் பெரியகுக்குண்டி ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு (27) என்ற கட்டிட தொழிலாளி மகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.
மகேஸ்வரிக்கும், பிரபுவுக்கும் கடந்த 6 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் கட்டிட தொழிலாளர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து வந்தனர். மேலும் மகேஸ்வரி பிணமாக கிடந்த கிணற்றின் அருகே கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரபு அத்தித்தாங்கலை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து மகேஸ்வரிக்கும் அவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. மேலும் மகேஸ்வரிக்கு பழையனூரை சேர்ந்த அருண் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 30-ந்தேதி இரவு மகேஸ்வரி கையில் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு பிரபுவின் வீட்டின் வழியாக சென்றார். இதைக் கண்ட பிரபு அவரை பின்தொடர்ந்து சென்றார். தொடர்ந்து கிணற்றின் அருகே மகேஸ்வரி நின்று கொண்டு யாருக்கோ போன் செய்து பேசி கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட பிரபு, ' யாருக்கு போன் செய்து பேசுகிறாய். கள்ளக்காதலனை இங்கே வரவழைக்க பேசுகிறாயா ' என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் பிரபு அங்கிருந்த கல்லால் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் பிரபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை பகுதியில் உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலம் அப்பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது பாலு அந்த நிலத்தில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார்.
அது நன்கு வளர்ந்து சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.இந்த நிலையில் நீர் நில ஆக்கிரமிப்பு பயிர்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதனை அகற்றினர்.
அப்போது பாலுவின் மனைவி பார்வதி நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுதார். அவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பார்வதி கூறும்போது ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இருந்தால் அந்த நெற்பயிரை அறுவடைக்கு வந்து இருக்கும். தற்போது பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது. பயிர்களைப் பயிரிட படாதபாடு படுகிறோம். எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறினார்.
மேலும் முன் அறிவிப்பு இல்லாமல் பயிர்களை அழித்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அரசு சார்பாக 6 மாதத்திற்கு முன்பு அறிவிப்பை வழங்கி விட்டோம் என்றனர்.






