என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலவை அருகே ஆக்கிரமிப்பால் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்- நெற்பயிர்களை அரவணைத்து கதறி அழுத பெண்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை பகுதியில் உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலம் அப்பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது பாலு அந்த நிலத்தில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார்.
அது நன்கு வளர்ந்து சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.இந்த நிலையில் நீர் நில ஆக்கிரமிப்பு பயிர்களை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அதனை அகற்றினர்.
அப்போது பாலுவின் மனைவி பார்வதி நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுதார். அவரை அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பார்வதி கூறும்போது ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து இருந்தால் அந்த நெற்பயிரை அறுவடைக்கு வந்து இருக்கும். தற்போது பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது. பயிர்களைப் பயிரிட படாதபாடு படுகிறோம். எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறினார்.
மேலும் முன் அறிவிப்பு இல்லாமல் பயிர்களை அழித்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அரசு சார்பாக 6 மாதத்திற்கு முன்பு அறிவிப்பை வழங்கி விட்டோம் என்றனர்.






