என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில்  பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தலைமை தாங்கினார். 

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கோஷம் எழுப்பினர். 
    காவேரிப்பாக்கம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் டீசல் ஆறாக ஓடியது.
    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து ராணிப்பேட்டையை நோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. 

    அப்போது பசு மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  பசுமாடு ஒன்று பலியானது. லாரி ரோட்டில் கவிழ்ந்து லாரியிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் சாலையில் ஆறாக ஓடியது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு துறையை சேர்ந்த தலைமை அலுவலர் லக்ஷ்மி நாராயணன் மாவட்ட உதவி அலுவலர் தீயணைப்பு வீரர்கள் தீ பற்றாமல் இருக்க லாரியின் மீது ரசாயன நுரைக்கலவையை தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காவேரிபாக்கம் போலீசார்   போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பணியில் ஈடுபட்டனர். 

     கிரேன் மூலம் கவிந்து கிடந்த டேங்கர் லாரியை தீயணைப்புப் படையினர் 3 மனி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை&பெங்களூர்  சாலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    ராணிப்பேட்டை நகர மையத்தில் உள்ள பிஞ்சி ஏரி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது என்று அமைச்சர் காந்தி பேசினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராணிப்பேட்டை நகர மையத்தில் உள்ள பிஞ்சி ஏரியை சீரமைத்து பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர  பாண்டியன் முன்னிலை வகித்தார். 

    கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    ராணிப்பேட்டை நகராட்சியின் மையப்பகுதியில் பொதுப் பணித்துறை நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 11 எக்டேர் பரப்பளவில் உள்ள பிஞ்சி ஏரியினை சீர்படுத்தி மக்கள் பொழுதுபோக்காக பயன்படுத்தி மாற்றியமைக்க நீண்டநாள் பணி நிலுவையில் இருந்து வருகிறது. 

    இப்பணியை இந்த ஆண்டு கண்டிப்பாக முடித்தாக வேண்டும். இந்த ஏரிக்கு பொன்னை ஆற்று பாசன நீர் தண்டலம் ஏரி வழியாக பிஞ்சி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. 

    இந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ஏரிக்கு 4 இடத்தில் இருந்து கழிவு நீர் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதனை தடுத்து அந்த கழிவுநீரை மாற்றுப் பாதை அமைத்து தனியாக வெளியேற்ற திட்டம் வேண்டும்.

    பிஞ்சி ஏரியை சுற்றிலும் கரைகள் அமைக்கப்படும். நடைபாதைகள் அமைத்து, கரையை சுற்றி மரங்கள் நட்டு, புல்வெளிகள் அமைத்து ஒரு சிறந்த இயற்கை சூழலுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். 

    அதேபோன்று ஏரியில் அதிக அளவு தண்ணீர் தேக்கி படகு சவாரி செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏரியைச் சுற்றி ஆங்காங்கே நவீன கழிப்பறைகள் அமைத்திட வேண்டும். 

    குழந்தைகள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அம்சங்கள் அமைக்க வேண்டும். ஏரியை ஆழமாக தூர்வாரி அதிக அளவு நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏரி சீரமைப்பு திட்டத்தை போன்று சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள், மக்கள் காலை, மாலையில் இயற்கை சூழலுடன் ஓய்வெடுக்கும் ஒரு இடமாக அமைத்து மாற்றிக் காட்ட வேண்டும். 

    நகர மையப்பகுதியில் இயற்கை சூழலை அமைத்து மக்களின் சந்தோசத்திற்கு வழி வகை செய்யும் திட்டமாக இத்திட்டம் செயல்பட வேண்டும். 

    இத்திட்டத்திற்கு ரூ.45 கோடி வரை செலவாகும் என தனியார் திட்ட மதிப்பீட்டாளர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை செயல்படுத்தினால் கட்டாயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    ஆகவே திட்ட அறிக்கையை தயார் செய்து வழங்கினால், தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும். மாவட்ட கலெக்டர் இதில் தனி கவனம் செலுத்தி இத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் முகமது கனி, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ராணிப்பேட்டை தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய சங்கம், சிப்காட் தொழிற்சாலைகள் சங்கம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. 

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி அடையாள அட்டை பெற்ற உடனே 3 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் முன்னிலை வகித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 373 பேருக்கு வழங்கப்பட்டது. 

    கலெக்டர் அறிவுரையின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 97 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவு, 143 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது. 

    முகாமில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகரமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாலாஜா:

    சொத்து வரி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பஸ்  நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாலாஜா நகர செயலாளர் மோகன் வரவேற்றார். 

    முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட துணை செயலாளர் சம்பந்தம், மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் சுகுமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேதகிரி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் கார்த்திகேயன், ராணிப் பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் உள்பட நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, மாணவரணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி, வழக்கறிஞர் பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை சேர்ந்த நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சோமசுந்தரம் நகரில் சந்தேகிக்கும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதேபோன்று சத்தியவாணிமுத்து நகரிலும் வாலிபர் ஒருவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    பாணாவரம் போலீஸ் நிலையத்தை சுற்றி குப்பை கூழமாக உள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரை சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    போலீஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் இருப்பதால் சில பயணிகள் பிளாஸ்டிக் கவரில் சாப்பாடு வாங்கிவந்து அதை ரெயில்வே பிரிட்ஜ் அருகே அமர்ந்து சாப்பிட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே வீசி விடுகின்றனர்.

    இதை போலீசாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. மேலும் பல நாட்களாக அந்த பிளாஸ்டிக் குப்பைகளை பாணாவரம் பஞ்., நிர்வாகம் அப்புறப் படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் பாணாவரம் சுற்றியுள்ள சில பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

    உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சோளிங்கரில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோளிங்கர்:

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். சோளிங்கர் நகர தலைவர் கோபால், ஓபிசி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கண்டன உரை ஆற்றினார். இதில் கியாஸ் சிலிண்டர் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து 100&க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    பின்னர் நிருபர்களிடம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    இந்தியாவில் வாரம் ஒருமுறை தேர்தல் நடைபெற்றால் மட்டுமே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயராது. 5 மாநில தேர்தல் முடிவு பெற்றவுடன் தற்போது விலையை அதிகரித்துள்ளனர்.

    இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருந்தாலும் குறைந்த அளவில் பெட்ரோல், டீசல் வழங்கி மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுப ட்டது என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே விநோத பாதிப்பால் 9-ம் வகுப்பு மாணவி அவதிப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் காண்டீபன் பூங்கொடி. இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஷாலினி (வயது14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஷாலினி பிறந்து 13 ஆண்டுகள் மற்ற பிள்ளைகளை போலவே இயல்பான நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென கடந்த ஒரு ஆண்டாக அவரது வலதுபுற கண் வீக்கமடைந்தது.

    பின்னர் நாளடைவில் கண்களிலிருந்து தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 15 க்கும் மேற்பட்ட எறும்பு போன்ற புழுக்கள் வரத்தொடங்கியுள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக விநோதமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஷாலினியை பல்வேறு கண் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த போதிலும் பரிசோதனைகளில் அனைத்தும் இயல்பான முறையில் இருப்பதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாலினி கண்களில் எறும்பு போன்ற புழுக்கள் தொடர்ச்சியாக வருவதால் ஷாலினி இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் படிக்க முடியாமலும் மிகவும் மனவலியுடன் வாழ்ந்து வருகிறார்.

    தனது பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை பாதிப்பினை எவ்வாறு சரி செய்வது என தெரியாமல் அவரது தாயார் பூங்கொடி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் முகாமிற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் உதவ வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.

    இந்த மனுவினை பெற்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்களிடம் மாணவி ஷாலினியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து மாணவி ஷாலினி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விநோத பாதிப்பால் மாணவி அவதிப்பட்டு வரும் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெமிலி அருகே வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான் (வயது 36). தள்ளுவண்டியில் இறைச்சியை பக்கோடா போட்டு விற்பனை செய்து வந்தார். 

    இவருக்கு கடந்த 10 வருடத்துக்கு முன்பு வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பர்வீனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பர்வீனா தனது மகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 

    இதனால் மன உளைச்சலில் இருந்த மஸ்தான் திடீரென மண்எண்ணையை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மஸ்தான் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு முப்பது வெட்டி கிராமத்தில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி வேளாளர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தரவள்ளி உடனுறை ஸ்ரீ சோமநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. 

    இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும் மழை வளம் பெருகவும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும் ஆற்காடு பஞ்சாங்க கணிதர் சுந்தர்ராஜன் முன்னிலையில் மகா சிறப்பு யாகம் நடந்தது.
     
    முன்னதாக ஸ்ரீ சரபேஸ்வரர், வாராகி, பிரித்திங்கரா தேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு மங்கல பொருட்கள் உணவு தானியங்கள் போடப்பட்டது மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் இரண்டு மூட்டை மிளகாய் போடப்பட்டு மகா பிரித்திங்கரா யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    சோளிங்கரில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேரிமெக்ளின் நடுநிலைப் பள்ளியில் ஜப்பான் ஷீட்டோ ரீயூ கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் சோளிங்கர் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டாமி இணைந்து நடத்தும் கராத்தே பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி அடிப்படையில் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை பயிற்சியாளர் கார்த்தி தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சியாளர்கள் பொன்ஜோதிகுமார், ஆனந்தி, கோபிநாத், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் ஷீட்டோ ரீயூ கராத்தே பயிற்சிபள்ளியின் இந்தியா தலைவர் ரமேஷ், சோளிங்கர் நகராட்சி துணை தலைவர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தகுதி அடிப்படையில் கருப்பு பச்சை நீலம் மஞ்சள் வெள்ளை உள்ளிட்ட பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். 

    தற்போது பெரும்பாலான இடங்களில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிக அளவில் இருப்பதால் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கராத்தே பயிற்சி பெறுவது அவசியமாகும். 

    மேலும் இந்த கராத்தே பயிற்சி பள்ளியில் அதிக அளவில் பெண் பிள்ளைகள் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கறுப்புப் பட்டை பெற்றது. மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 

    தொடர்ந்து சிலம்பம், துப்பாக்கிச்சுடுதல், வில் வித்தை தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தனர்.
    ×