என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணம் அருகே வெயில் தாக்கத்தால் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    அரக்கோணம்:

    சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் மன உளைச்சலாக உள்ளதால் திருப்பதி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தவர் 2  நாட்களாக அங்கேயே நகரில் சுற்றியிருந்தார். பொது மக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் சுற்றி வந்தவர் சரியான உணவு கிடைக்காமல் இருந்ததால் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து இறந்தாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாவில் குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் பல்வேறு மாநிலங் களிலிருந்து கடத்தப் படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. 

    இதை யடுத்து ராணிப் பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் பேரில் ராணிப் பேட்டை டிஎஸ்பி பிரபு அறிவுரையின் பேரில் வாலாஜாபேட்டை இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் தொடர்ந்து பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் நர்சோஜிராவ் தெருவில் சாக்லேட் மொத்த வியாபாரம் செய்யும் வடநாடு வியாபாரி கடையில் திடீர் சோதனை செய்தனர். 

    போலீசார் சோதனையில் தடைசெய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் சுமார் 210 பாக்கெட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

    அவற்றை பறிமுதல் செய்த வாலாஜா போலீசார் கடை உரிமையாளர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
    ரோப் கார் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் சித்திரை முதல் நாளான வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு சுமார் 10 கோடி அளவில் ரோப் கார் அமைக்கும் பணி நடந்து வந்தது.

    தற்போது அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் உள்ளது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கட்டுமான பணிகள் குறித்தும் கட்டுமான பொருட்கள் தரமாகவும் கட்டுமான பணிகள் உறுதியாக இருக்க வேண்டும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    ரோப்கார் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் சித்திரை முதல் நாளான வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு தமிழக முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் முறைப்படி ரோப் கார் ஓடத் தொடங்கும் என்றனர். ரோப்கார் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 1,054 பேருக்கு தொற்று

    காவேரிப்பாக்கம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது41) கட்டிட மேஸ்திரி. 

    அதே பகுதியில் இவர் தனது விவசாய நிலத்தில் மாட்டு பன்னை நடத்தி வருகிறார். மேலும் இவர் வழக்கமாக இரவு வீட்டில் படுக்காமல் மாட்டு பன்னைக்கு சென்றுள்ளார்.

     இந்நிலையில் மர்ம நபர்கள் ரமேசின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவையும் உடைத்து அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் காலையில் வீட்டை திறந்த அவர்களுக்கு பீரோவில் இருந்த துணிகள் தூக்கி வீசப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
    செல்போன்களில் தேவையில்லாத செயலிகளை தொடர்பு கொள்ள வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் புதிய உதவி எண்களையும் 3 வகை ஆன்லைன் ஆப்களையும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்துவைத்து  ஆட்டோ, பஸ்களில் துண்டுப் பிரசுரங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்-தினார். 

    இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ஏ.டி.எஸ்.பி. முத்துக்கருப்பன், டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்&இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர். 

    பொதுமக்கள் செல்போனில் தங்களுக்கு தெரியாத செயலிக்கு செல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். மோசடி நபர்கள் உங்கள் செல்போனுக்கு லிங்க் என்னும் ஆன்லைன் செயலியை அனுப்பி வைப்பார்கள். 

    செல்போன் உபயோகிப்பாளர்கள் அதை தொட்டதும் மோசடி நபர்கள் அவர்களின் விருப்-பங்கள் அனைத்தையும் நிறை-வேற்றிக் கொள்வார்கள். பொதுமக்கள் பணத்தை மோசடி நபர்களிடம் இழக்க வேண்டாம். 

    மோசடி நபர்களால் சைபர் கிரைம் மூலம் பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற செயலி எண்ணை பயன்படுத்தி தகவல் தெரிவித்தால் திருடப்பட்ட பணம் மோசடி நபர்கள் எடுக்காதவாறு வங்கி அதிகாரிகளால் பாதுகாத்து வைக்கப்படும்.

    மேலும் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள தடுக்க 1098 என்ற என்ற செயலி எண், மேலும் காவல்துறையின் அவசர உதவிக்கு க்யூ ஆர் கோடு காவல் உதவி ஆப் பயன்படுத்தினால் உடனடியாக காவல் துறையில் உதவி கிடைக்கும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்தார்.
    பாணாவரம் காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள் தொட்டியில் தண்ணீர் நிரப்பினர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் ஆற்காடு வனச் சரகத்திற்கு உட்பட்ட சுமார் ஆயிரத்து 28 ஏக்கர் பரப்பளவில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், காட்டுப்பன்றி, முயல், நரி, உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன.

    இந்த வன விலங்குகள் கோடை காலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி தண்ணீர் தேடி வரும் மான் உள்ளிட்ட விலங்குகள் காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளங்களில் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்பட்டு இரவு நேரத்தில் உயிரை விடுகின்றன.

    இந்நிலையில் வன விலங்குகளின் உயிரை காப்பாற்றும் பொருட்டு அதே பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் பொதுமக்கள் உதவியுடன் பாணா வரம் காப்புக் காட்டில் 4 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து விலங்குகளுக்கு கோடை காலத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். 

    இந்தச் செயலை கண்ட அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனை பாராட்டி வருகின்ரனர்.
    வாலாஜா அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்-கலையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணை 211.48 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான பழகன்றுகள் மற்றும் வீரிய ஒட்டுரக காய்கறி நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

    இதில் மா, தக்காளி, மிளகாய் மற்றும் மூலிகை செடிகள், தேங்காய் கன்றுகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன. 

    மேலும் அரசு தோட்டக்கலை பண்ணையில் மாந்தோட்டம், முந்திரி தோட்டம், சப்போட்டா தோட்டம் போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டு செடி ஒட்டுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

    அதேபோன்று தோட்டக்கலை பண்ணையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் பதியம் போடப்பட்டுள்ள தென்னை நாற்றுகள் வளர்ப்பு முறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். 

    பண்ணையிலுள்ள சோலார் டிரையர், மிஸ்டு சேம்பர், நிழல் வலை குடில், பசுமைகுடில் ஆகியவற்றை பார்வையிட்டு மா செடியில் ஒட்டு கட்டும் முறைகளையும் பக்க ஒட்டு குருத்து ஒட்டு கட்டும் செயல் முறைகளையும் பார்வையிட்டார்.
     
    அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரி, தக்காளி, மிளகாய் பயிர்கள் செயல் விளக்கத்தையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.இங்கு தக்காளி, மிளகாய், கத்திரி ஆகியவை இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றது. இதனை விவசாயிகள் பார்வையிட்ட பின்னர் அவர்களுக்கு நாற்றுகள் வழங்க ஏதுவாக இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

    அரசு தோட்டக்கலை பண்ணை தோட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்திட பயிற்சி கூட்டரங்கம் ஒன்று தேவை என கலெக்டரிடம் துணை இயக்குனர் கேட்டுக் கொண்டார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்-ளப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ், தோட்டக்கலை அலுவலர் நீதிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அருண் பாபு, மோனிஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
    அரக்கோணம்,

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகள் பட்டியல் தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். 

    மாவட்டம் முழுவதும் ரவுடிகளை கண்காணிக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து பணம் பறிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்றுபோலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் அரக்கோணம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறுகையில்:-

    கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும்.

    ரவுடிகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல்கள் தெரிவித்தால் அவர்களின் ரகசியம் காக்கப்படும்.

    ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆகியோரை தேடி கண்டுபிடிக்கும் பணிகளை போலீசார் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றார்.
    நெமிலி அருகே டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
    நெமிலி,

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த நல்லூர் பேட்டை பெரியத்தெருவை  சேர்ந்த வாலிபர் ஒருவர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் ஆந்திர மாநிலத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அப்போது பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் காய்ச்சல் குறையாததால் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    அங்கிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது.

    இதனையடுத்து பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜேஷ், வட்டார சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் தமிழரசன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நல்லூர்பேட்டை பகுதியில் வேறு யாருக்காவது டெங்கு தொற்று உள்ளதா என நேற்று வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.

    மேலும் டவுன் பஞ்., ஊழியர்கள் செயல் அலுவலர் குமார் தலைமையில் அந்தப் பகுதியைச் சுற்றி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
    சோளிங்கர் அடுத்த பரவத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக் கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் தலைமை தாங்கினார். 

    பரவத்தூர் ஊரட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், வெங்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் அசோகன் கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

    விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதபடுத்தாமல் உடனடியாக நெல் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

    அப்போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, சாவித்திரி பெருமாள், பிச்சாண்டி, நதியா மதன்குமார், ஊராட்சி செயலாளர் கள் ரவிச்சந்திரன், முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    அரக்கோணத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தலைமையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    பொது தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் சி.துரைராஜ் தொடங்கி வைத்தார். ஞானமுருகன் முன்னிலை வகித்தார்.இதில் பொன்.சிட்டி பாபு, பார்த்திபன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1.1.2017 முதல் 31.3.2017 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள 

    பட்டப்படிப்பு, மேல்நிலை கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. பள்ளி இறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புகள் ஆண்டிற்கு உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    www.tnvelaivaaippu.gov.in அல்லது  https//tnvelaivaaippu.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணணீப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில் நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

    தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள், ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகக் கூடாது. முழு நேர கல்வி பயிலும் மாணவர் ஆக இருத்தல் கூடாது. எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி ரூ.200, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி ரூ.400, பட்டப் படிப்பு/பட்டமேற்படிப்பு ரூ.600 வழங்கப்படும்.

    இத்திட்டத்தின்கீழ் வருவாய்த் துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவி தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஓராண்டு கழித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.அவ்வாறு புதுப்பித்தல் செய்த விவரத்தை தவறாமல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் பிரிவில் தெரிவிக்கவேண்டும். 

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் உதவித் தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ×