என் மலர்
ராணிப்பேட்டை
நெமிலி அருகே இடிதாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த, கரிவேடு கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது.
அப்போது இடி மின்னல் தாக்கியதில் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகன் தீபக் (27) மற்றும் ராமஜெயம் மகன் குணசேகரன் (28) இருவரும் அருகில் இருந்த மரத்தடிக்கு சென்றுள்ளனர்.
அப்போது இடி தாக்கி குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீபக் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர் தப்பி ஓட்டம்
அரக்கோணம்:
அரக்கோணம் புதிய பஸ் நிலையம் கஞ்சா விற்பதாக நேற்று அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் 200 கிராம் கஞ்சாவை வீசிவிட்டு தப்பி ஓடினார்.
கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை பற்றி விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
சோளிங்கரில் ரோப்கார் சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார்.
மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும். இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
மலை மீது 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். டோலி மூலம் தொழிலாளர்கள் பக்தர்களை சுமந்து செல்ல வசதி இருந்தாலும், ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்காக, கடந்த 2014&ம் ஆண்டு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றது. ரோப் கார் சோதனை ஓட்டம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் ஆர்.காந்தி ஜெகத்ரட்சகன் எம்.பி., முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் மாவட்ட குழு துணை தலைவர் எஸ் எம் நாகராஜ் திமுக ஒன்றிய செயலாளர் செல்வம் அவைத் தலைவர் அசோகன் நகராட்சி உறுப்பினர் மோகனா சண்முகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் உறுப்பினர்கள் சாவத்திரி பெருமாள் மாரிமுத்து சோளிங்கர் நகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் மகாராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிளைவ் பஜார் ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிபேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், மதுக் கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மது கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்றத்தின் அவசர கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் வி.சி.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது தமது அறிக்கையில் 2022-&2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்து-ரையின் அடிப்படையில் மான்யம் பெறுவதற்கான தகுதியினை பெறும் பொருட்டு 2021-&2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மேலும் ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் ராணிப்-பேட்டை நகராட்சி எல்லைக்-குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வரி உயர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்-படுகிறது என்ற ஒரு தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேற்கண்ட இந்த தீர்மானத்தின் மீது உள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து 3 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத் கவுன்சிலர்கள் அப்துல்லா, கிருஷ்ணன், தென்றல் ஜெய்கணேஷ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கடன் சுமை 35.7 கோடி உள்ளதாலும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் பணம் பற்றாக்குறை கருத்தில் கொண்டும் நகரமன்ற 30 வார்டுகளில் பல்வேறு பணிகள் நிறைவேற்ற சொத்து வரி உயர்வு அவசியம் என்று தீர்மானத்தையொட்டி இந்த தீர்மானம் நிறைவேற்-றப்பட்டது.
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்:
ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்னை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்த போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை சோதனை செய்தபோது சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சுமார் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர் என்று தொ¤வித்தனர்.
நெமிலி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கீழ் வெண்பாக்கம் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மனைவி தோப்பம்மாள் (வயது52). இவர் நேற்று காலை வழக்கம் போல பனப்பாக்கம் ரோட்டில் உள்ள முந்திரி தோப்பு அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.அங்கே இருந்தவர்கள் அவரை மீட்டு பனப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெமிலி சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அரக்கோணம்:
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ் நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான முகாமை நடத்தியது.
இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் மற்றும் 10-ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்தவர்களை தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்தனர். முகாமில் 321 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பணி நியனமன ஆணைகள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து முகாமில், 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், அரக்கோணம் வருவாய் கோட் டாட்சியர் சிவதாஸ், நகராட்சி ஆணையாளர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்த ணியை அடுத்த அகூர் கிரா மத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அன்பரசன் (வயது 35). திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
அன்பரசன் திருவள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று விடுமுறை என் பதால் திருத்தணி பகுதியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது திருத்தணி இச்சிபுத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அன்பரசன் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பான ஆட்சியால் மு.க.ஸ்டாலினை உலகமே பாராட்டுவதாக ராணிப்பேட்டையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. பேசினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர பொறுப்பாளர் பூங்காவனம் வரவேற்றார்.
கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பேசியதாவது:&
பெண் சிங்கங்கள் வேட்டையாடி இறைச்சி எடுத்து வந்து அதை ஆண் சிங்கம், குட்டி சிங்கங்கள் உண்ணும்.இது போன்று தான் மகளிர். இது இந்தியாவிற்கே விடிவுகாலம். ராணிப்பேட்டை மாவட்டம் எனக்கு தாய் வீடு மாதிரி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.
அவரை உலகமே பாராட்டி வருகிறது. தி.மு.க.வில் அமைச்சர் காந்தி விசுவாசமிக்க ஒரு படைவீரர். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் ரூ.26 கோடி மதிப்பில் மேம்பாலம், சோளிங்கர் நரசிம்மர் கோவில் ரோப் கார் திட்டம் தொடங்கி வைத்தார். திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்தது தி.மு.க. தான். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கி உள்ளார்.
நெமிலியில் வார சந்தை, திமிரியில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையின் வழியில் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்திருக்கிறார்.
இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயாரித்த நிதிநிலை அறிக்கை அல்ல. இது முதல்வர் தயாரித்த நிதிநிலை அறிக்கை. இது ஒரு தொலைநோக்கு நிதிநிலை அறிக்கை ஆகும். தமிழ்நாடு முன்னேற்றமாக திகழும்.இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை கழக பேச்சாளர் கவிஞர் நன்மாறன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக அதிமுக, பாமக, பாஜக என பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணையன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா ஒன்றிக்குழு தலைவர் சேஷா வெங்கட், ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், வாலாஜா நகர பொருளாளர் தில்லை, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணிதில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
ராணிப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






