என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ஆற்காடு அருகே குடும்ப தகராறில் தந்தையை மகன் வெட்டி கொலை செய்தார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்தவர் இக்பால் (வயது 60). கூலி தொழிலாளி. இவரது மகன் இம்ரான். இக்பால் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய மகனுடன் வசித்து வந்தார். தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இம்ரான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இக்பால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இக்பால் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிப்காட் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 55). இவரது மகள் அம்மு (35).

    இவர்கள் இருவரும் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை கோவிலுக்கு பைக்கில் சென்றனர். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் பைக்கில் மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.

    அப்போது திடீரென்று அம்மு ஓட்டி வந்த பைக் பிரேக் பிடிக்க முடியாமல் நிலைதடுமாறி உள்ளது. இதில் பைக் பின்னால் அமர்ந்து சென்ற சாந்தி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. 

    காயமடைந்த சாந்தியை உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து சிப்காட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாணாவரம் அருகே வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமம் கூட்ரோடு அருகே நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது மதிக்கத்தக்க பெண்மான் பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    விரைந்து வந்த வனத்துறையினர் பெண்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.பிறகு அதே பகுதியில் மானை அடக்கம் செய்தனர்.
    ஆற்காட்டில் வேனில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது ஆற்காடு கணபதி நகர் பகுதியில் மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

    அதில் இரண்டரை டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மற்றும் வேனை வேலூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    நெமிலி அருகே இலவச புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
    நெமிலி:

    தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் ஒராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கலந்துரையாடல் நடத்தினார். அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜ், அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன், நகர செயலாளர் வி.எல்.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு அரக்கோணம் மின் கோட்டத்தில் இருந்து 465 விவசாயிகளுக்கான இலவச புதிய மின் இணைப்புக்கான ஆணையினை வழங்கினர். 

    அப்போது அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் மின் கோட்ட செயற் பொறியாளர் கண்ணன் உதவி செயற்பொறியாளர் புனிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் தொழிற் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது.
    நெமிலி:

    ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

    இங்கு பயிற்சி முடித்த வர்கள் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டடங்கள், புராதான சின்னங்கள் போன்ற வைகளின் பாதுகாப்பு முதன்மை பணி களுக்கு ஈடுபடுத்த படுவர். 

    இந்நிலையில் கடந்த 6 மாதமாக, காவலர்கள், சமையல் காரர்கள், ஸ்வீப்பர், தச்சர், பிளம்பர், எலக்ட்ரிஷியன், பெயிண்டர் உட்பட 8 படைப்பிரிவுகளுக்கான 316 பேர் பயிற்சி பெற்று வந்தனர். அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழிற் பாதுகாப்பு படை டிஐஜி சாந்தி ஜி.ஜெய்தேவ் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். 

    பின்னர், வீரர்களிடையே பேசியே போது நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பங்கு இன்றியமையாதது. 

    எனவே இதில் பணியாற்றும் ஒவ்வொரு வீரரும் தேசத் திற்காக தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். எத்தகைய சூழ்நிலையிலும் எதிர் கொள்ள கூடியவர்களாக இருக்க வேண்டும். என்றார். 

    தொடர்ந்து பயிற்சியின் சிறந்து விளங்கியவர் களுக்கான விருதுகள் இன்டோர் பெஸ்ட்க்கு வெங்கட பிரபாகர், துப்பாக்கி சுடுதல் சௌல்ருலா கிரன், வெளிப்புற சிறந்தமைக்கு குமார் நோட்லா, அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய காவலருக்கு தீபக் ஈஸ்வர் மற்றும் முதன்மை கோப்பை சந்தன் யாதவ் ஆகியோருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். 

    இதனையடுத்து வீரர்களின் வீர சாகசங்கள், யோகா மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அணிவகுப் புக்கான விருந்தினர் கமாண்டன்ட் கவுரவ் தோமர், ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டர் அபினீத் பட்டாச்சார்யா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார், மாநில நிர்வாக அதிகாரிகள் அணிவகுப்பு தளபதி சந்தன் யாதவ், குமார் நோட்லா உள்ளிட்ட அதிகாரிகளும், மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் பலர் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது23), எலக்ட்ரீசியன். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு சுமார் ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடன் சுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த யுவராஜ் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சோளிங்கரில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜெய்பீம் விளையாட்டு குழு சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த பரிசளிப்பு நிகழ்ச்சி உடற்கல்வி ஆசிரியர்கள் தியாகராஜன், தமிழ்வாணன், பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தாலிக்கால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உலகநாதன், மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 2 நாள் பகல் நேர வாலிபர் போட்டியில் ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர், சென்னை, ஆகிய பகுதிகளில் இருந்து 22 அணி கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற வேலூர் ஸ்பைக்கர்ஸ் முதலிடத்தையும் தாளிக்கால் ஜெய்பீம் அணி இரண்டாம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும் நான்காம் இடத்தை சென்னை அணியும் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் கோப்பை வழங்கினார். 

    அப்போது அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர் குமார், குணாநிதி, அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஆற்காடு திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ்குமார் (வயது 23) என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த நந்தியலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேலன். 

    அவரது மகன்கள் பாபு (வயது 19), பரத் (17), பாஸ்கரன் (15). அண்ணன்&தம்பிகள் 3 பேரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர்.

    அப்போது பாபு கால்தவறி குட்டையில் விழுந்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபதாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் மற்றும் ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் இருந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காட்டில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யார் சாலையில் உள்ள 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    முன்னதாக கணபதி ஹோமம், முதல் யாககால பூஜை, 2-வது மற்றும் 3-வது யாக கால பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    விழா கமிட்டி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    ஆற்காடு அருகே பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விடிய, விடிய பற்றி எரிந்த தீயால் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், அண்ணா சாலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தளங்களை கொண்ட இந்த ஜவுளிக்கடையில் தரை தளத்தில் வீட்டு உபயோக பொருட்களும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் ஜவுளி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஜவுளிக்கடையை வழக்கம்போல பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே நள்ளிரவு 10 மணி அளவில் அந்த ஜவுளிக்கடைக்குள் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்தார். அப்போது கடைக்குள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் ஜவுளிக்கடையின் முன்புற ‌ஷட்டர் மற்றும் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீ மளமளவென தரை தளத்தில் இருந்து முதல் மற்றும் 2-ம் தளங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் உள்ளே இருந்த ஜவுளி துணிகள் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் ராணிப்பேட்டை, சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

    கடையின் பக்கவாட்டு சுவரை தீயணைப்பு படைவீரர்கள் உடைத்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். அப்போது 3 தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் திடீரென்று தீர்ந்து போனது. இதனால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    பின்னர் அருகில் உள்ள ஆற்காடு பாலாற்றில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்தும் தண்ணீர் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வாகனங்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.

    ஜவுளிக்கடையில் 10 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி, விடியற்காலை 4 மணி வரை நீடித்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஜவுளிக்கடையில் பற்றி எரிந்த தீயால் கரும்புகை வானுயர எழுந்தது. மேலும் கடையில் விடிய, விடிய பற்றி எரிந்த தீயால் ஆற்காட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்த தீ விபத்தில் ஜவுளிக்கடையில் இருந்த பட்டுச் சேலைகள், ரெடிமேடு துணிகள், பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் தீவிபத்தால் கடையின் கட்டிட சுவர்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.
    ×