என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு `சீல்' வைத்து கலெக்டர் கவிதாராமு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி முதியோர் இல்ல காப்பகங்கள் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்ட முதியோர் இல்லம் மற்றும் ஒத்தக்கடையில் புதிய நமது இல்லத்தில் கலெக்டர் கவிதாராமு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கண்ட காப்பகங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 காப்பகங்களுக்கும் கலெக்டர் `சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன்படி `சீல்' வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து அழியாநிலை முதியோர் காப்பகத்தில் இருந்த 31 ஆண்கள், 37 பெண்கள் என 68 பேரும், ஒத்தக்டை புதிய நமது இல்லத்தில் இருந்த 51 ஆண்கள், 8 பெண்கள் என 59 பேரும் என மொத்தம் 127 பேரையும் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி பழைய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கான தகுந்த சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. அவர்கள் குணமடைந்ததும் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர் கந்தர்வக்கோட்டை வட்டம், அரியானிப்பட்டியில் செயல்படுகிற ரெனிவல் பவுண்டேஷன் என்ற மனநலப் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்து அங்கு தங்கியிருந்த 105 பேரிடம் வழங்கப்படும் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் சொந்த விருப்பத்தின்பேரில் வந்தீர்களா? என்ற விவரத்தையும் கேட்டறிந்தார். இந்த காப்பகமும் உரிய அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டதால் `சீல்' வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 105 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி மனநல சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல வடுகப்பட்டியில் உள்ள வள்ளலார் காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இல்லத்தினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியிருந்த 24 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா? என்பதையும், அடிப்படை வசதிகளான குடிநீர், தங்குமிடம், கழிப்பிடம் ஆகிய வசதிகள் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். மேலும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, வருகைப் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டதோடு, அரசு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்ப சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர்கள் சொர்ணராஜ், அபிநயா, மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    சமையல் எரிவாயு விலை உயர்வால் விறகு அடுப்புக்கு இல்லத்தரசிகள் மாறி வருகிறார்கள்.
    வடகாடு:

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் சமையல் எரிவாயுவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1000-த்தை நெருங்கி விட்டது. இதனால், இல்லத்தரசிகளும் கண்ணை கசக்கி வருகிறார்கள்.

    இந்த விலையேற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற பெண்கள் தான். இவர்கள் அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது எரிவாயு சிலிண்டர் ரூ.1,000-த்தை நெருங்கி விட்டதால் அவ்வளவு விலை கொடுத்து தாங்களால் வாங்க இயலாது என்று வேதனையுடன் தெரிவித்த அவர்கள் இனி பழையபடி விறகு அடுப்புக்கு மாறி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

    இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்து வந்தோம். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறி மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கினர். அதன்படி விறகு அடுப்பை தவிர்த்து சிலிண்டரில் சமைக்க தொடங்கினோம். ஆனால் சமையல் எரிவாயு படிப்படியாக உயர்ந்து ரூ.1,000-த்தை நெருங்கி விட்டது. நாங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். இவ்வளவு விலை கொடுத்து எங்களால் எரிவாயு சிலிண்டர் வாங்க இயலாது. ஆகவே, பழையபடி விறகு அடுப்புக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என்றனர். இதன் காரணமாக நவீன முறையில் உருவாக்கப்பட்ட சிமெண்டு விறகு அடுப்புகளை இல்லத்தரசிகள் வாங்கி செல்கிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 முதியோர் இல்லங்கள் மற்றும் ஒரு மனநல காப்பகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி முதியோர் இல்லங்கள், மனநல காப்பகம் செயல்பட்டு வருவதாக கலெக்டர் கவிதா ராமுவிற்கு புகார் வந்தது.

    இதையடுத்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் கலெக்டர், அறந்தாங்கி, அருகே உள்ள அழியா நிலை, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்தார். இதில் 2 முதியோர் இல்லங்களும் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து அழியாநிலை முதியோர் இல்லத்தில் இருந்து 37ஆண்கள் உட்பட 68 பேரும், ஒத்தக்கடை முதியோர் இல்லத்தில் இருந்து 51ஆண்கள் உள்பட 59 பேர் என மொத்தம் 127 முதியோர்கள் மீட்கப்பட்டனர்.

    மேலும், கந்தர்வக்கோட்டை அருகே அரியாணிப்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகத்தில் தங்கி இருந்த 78 ஆண்கள் உட்பட 105 மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் மனநல சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2 முதியோர் இல்லங்கள் மற்றும் ஒரு மனநல காப்பகத்துக்கு கலெக்டர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஆய்வின்போது, கோட்டாட்சியர்கள் அறந்தாங்கி சொர்ணராஜ், புதுக்கோட்டை அபிநயா, மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர். கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர் குணசீலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த டி.கீழையூர் குமரப்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கு காயத்திரி என்ற மனைவியும் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காயத்திரி கோபித்துக்கொண்டு, குழந்தையுடன் நரியம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷின் மாமனார் ஆறுமுகம், மைத்துனர் சின்ராஜ், காயத்திரியின் தாய்மாமன் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குமரப்பட்டியில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த ரமேஷிடம் தகராறு செய்து கம்புகளால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர்.

    இதில் ரமேஷ் காயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஊரார் முன்னிலையில் தன்னை அடித்து அவமானப்படுத்தியதை தாங்கமுடியாமல் விரக்தியடைந்த ரமேஷ் நேற்று காலை வீட்டின் அருகிலுள்ள தோட்டத்தில் மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், சின்ராஜ், குமார் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    புதுக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் யூசுப் (வயது 38). இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ரூ.100-ஐ கொடுத்து அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு அந்த சிறுமிக்கு, யூசுப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் யூசுப்பை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக யூசுப்புக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண தொகையாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    கறம்பக்குடி பகுதியில் சாலையோரங்களில் தொழிலாளர்களால் நேரடியாக வடிவமைத்து விற்கப்படும் அம்மி, ஆட்டுக்கல்லை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    நாகரிகத்தின் வளர்ச்சி மனிதனிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றம் உலகை உள்ளங்கையில் சுருக்கிவிட்டது. நடை, உடை, பாவனைகள், வாழ்க்கைமுறை போன்றவற்றில் ஏராளமான மாற்றங்கள் உருவாகி உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அம்மி, ஆட்டுக்கல், உரல், திருகை போன்றவை இருக்கும். நெல் குத்தி அரிசியாக்குவது, உணவு பண்டங்களுக்கான மாவுகளை தயார் செய்வது போன்ற பணிகளுக்கு இவை பயன்படுத்தபட்டன. ஆனால் காலமாற்றத்தினாலும், மின்சாதன பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டதாலும் அம்மி, ஆட்டுக்கல்லுக்கான தேவை குறைய தொடங்கியது.

    நகர பகுதிகளில் வசிப்பவர்கள், அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்போர், போன்றவர்கள் இவற்றிற்கான தேவையை உணராதவர்களாகவே இருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், கஜா, வர்தா புயல்களின் தாக்கம் போன்றவற்றால் தொடர்ந்து 5 முதல் 10 நாட்கள் மின்சாரம் இல்லாத போதுதான் உணவு தயார் செய்வதற்கு அம்மி, ஆட்டுகல்லை தேடும் நிலை ஏற்பட்டது. இதனால் இவற்றை பெரு நகரங்களில் வசிப்பவர்களும் வாங்க தொடங்கி உள்ளனர்.

    கறம்பக்குடி பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி சாலையோரங்களில் அம்மி, ஆட்டுக்கல், திருகை போன்றவற்றை வடிவமைத்து விற்பனை செய்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு விரும்பும் வகையில் வடிவமைத்து கொடுப்பதால் இவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    திருகை ரூ.600 முதல் ரூ.750-க்கு விற்பனை ஆகிறது. இதுகுறித்து அம்மி மற்றும் திருகை வாங்க வந்த இளம் தம்பதிகள் கூறுகையில், பணிநிமித்தம் தனி குடித்தனம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இயற்கை உணவு மூலிகை வைத்தியம் போன்றவை குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இவற்றை தயார் செய்ய அம்மி, ஆட்டுக்கல் போன்ற கைவினைபொருட்கள் அவசியம். எந்த சூழலிலும் இவற்றின் மவுசு குறைந்து விடாது என தெரிவித்தனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் புதுக்கோட்டையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதற்கு முன்னதாக பெய்த மழை மற்றும் பருவ மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை ஊராட்சி, மேலக்கொல்லையில் உள்ள பாசனகுளம் நிரம்பியதால் அண்ணா நகர், திருநகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருவதாகவும், மழைநீரில் பாம்பு, விஷ பூச்சிகள் மிதந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    ஆகவே, இப்பகுதியில் உள்ள வரத்து வாரிகளை சரிசெய்து திருநகர்- மேட்டுப்பட்டி சாலையில் பாலம் அமைத்து இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பெரியசாமி தெரிவித்தார்.

    காரையூர் மற்றும் அரசமலை, நல்லூர், மேலத்தானியம், ஒலியமங்களம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒளியமங்களத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் அழகு என்பவரது ஓட்டு வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனை காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகிேயார் பார்வையிட்டனர்..

    பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் மணிமுத்தாறு பாலம் அருகே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக கலிங்கி செல்லும் இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 100 நாள் தொழிலாளர்கள் மூலம் மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் மீனாள்அயோத்தி ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அறந்தாங்கி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மழை தூறியபடி இருந்தது. அறந்தாங்கி சந்தையில் மழையினால் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். வியாபாரிகளும் வேறு வழியின்றி ஓரமாக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி மூக்குடி சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 10 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 569 ஆக உள்ளது. இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 19 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 29 ஆயிரத்து 559 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 414 ஆக உள்ளது.
    திருமயம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள வாலக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர், ஒரு பெண்ணுடன் மாயமான நிலையில், அதுதொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த கூத்தையா (வயது 60), ரவிச்சந்திரன் (56) ஆகிய 2 பேரையும் கைது செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் லெட்சுமியேந்தல் வெள்ளாற்று பகுதியில் நாகுடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டுவண்டியில் மணல் கடத்திய பாண்டிபத்திரம் பகுதியை சேர்ந்த ராம்கி (31), சூர்யா (22), விஜய் (24), ஆகிய 3 பேரையும் கைது செய்து, மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆகும்.
    ×