என் மலர்
பெரம்பலூர்
- டயர் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த நாரணமங்கலத்தில் உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தை சேர்ந்த பழனியின் மகன் கமலஹாசன்(வயது 35) வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி மஞ்சுளாவுடன்(24) சிறுவாச்சூரில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து, வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுநடுவலூரில் மாரியம்மன் கோவில் முன்பு கமலஹாசன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த முருகேசனின் மகன் மனோஜ்குமார்(24), அதே பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் கார்த்திகேயன்(27) ஆகியோர் கமலஹாசனை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;
கடந்த 11-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் கமலஹாசன் வேலையை முடித்துக்கொண்டு தனது நண்பர் அருணின் மோட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பினார். பின்னர் அங்கிருந்து அவர் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மனோஜ் குமாரின் மோட்டார் சைக்கிளில் அவரும், கார்த்திகேயனும் வந்துள்ளனர். அவர்களிடம் கமலஹாசன் 'லிப்ட்' கேட்டுள்ளார்.அப்போது குடிபோதையில் இருந்த மனோஜ்குமாரும், கார்த்திகேயனும், மது குடிப்பதற்கு கமலஹாசனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து கமலஹாசனை அவர்கள் தாக்கி, மோட்டார் சைக்கிளில் அமர வைத்து புதுநடுவலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்ய ரூ.20 ஆயிரம் கேட்டு மீண்டும் அவரை தாக்கி உள்ளனர். அப்போது கமலஹாசன் தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது மனைவியிடம்தான் பணம் உள்ளது என்றும் கூறியதால், அவரது மனைவி மஞ்சுளாவை செல்போனில் தொடர்பு கொண்டு மனோஜ்குமார் பேசியுள்ளார்.
அப்போது மஞ்சுளா தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும், கமலஹாசனை உடனடியாக வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
இதனால் செல்போனை துண்டித்துவிட்டு, 2 பேரும் சேர்ந்து கமலஹாசனை தாக்கியுள்ளனர். பின்னர் புதுநடுவலூர் கிராமத்திற்கு அவரை அழைத்துச்சென்று அங்கே கட்டையால் கமலஹாசனை இருவரும் தாக்கியதில், கமலஹாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
- நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது
- விவசாயத் தொழிலாளர் சங்க ேகாரிக்கை மாநாடு
பெரம்பலூர்:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி, மாவட்ட பொருளாளர் காமராஜ்,மாவட்ட துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, முழுமையான கூலியை வழங்க வேண்டும். நகரப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
- சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இருந்து அருமடல் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடமாக இருந்த சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையால் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு சாலையை பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நல்லுசாமி தலைமை தாங்கினார். தலைவர் அருள்ராஜ், பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேபிள் டி.வி. நிலுவை தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் போலீசார், வருவாய்த்துறையை பயன்படுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளி போல் சித்தரிக்கும் போக்கை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு, தற்போது செயல்படாத செட்டாப் பாக்ஸ்களுக்கும், அவற்றுக்கான கிரயத்தொகையை வழங்க கோருவதை கைவிட வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
- வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது
- சோம வாரத்தை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- அய்யப்ப சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
- மகா உற்சவ விழாவையொட்டி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 56-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழாவையொட்டி நேற்று காலையில் கோவிலில் மூலவர் அய்யப்ப சுவாமிக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் உற்சவர் அய்யப்ப சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இரவு 7 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் தெப்பக்குளத்தில் உற்சவர் அய்யப்ப சுவாமி எழுதருளிய தெப்பம் சுற்றி வந்தது. தெப்பக்குளத்தை சுற்றி நின்ற பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற பக்தி கோஷத்தை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். குளத்தில் தெப்பம் வலம் வந்தபோது பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக்காக குளத்தை சுற்றி வந்தனர்.
- மு.க.ஸ்டாலினுக்கு இணையாக பணியாற்றியவர் உதயநிதி என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
- சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மாணவர்களின் நலன் கருதி இந்த நிதியாண்டில் 69 ஐ.டி.ஐ கட்ட ரூ.264.83 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.அதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசு, ரூ.6.25 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றது. இதற்காக ஆண்டிற்கு ரூ.48 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது போன்ற பணச்சுமைகள் இருந்தாலும், முதல்வரின் நிர்வாக திறமை காரணமாக தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 75 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். குடும்பத்திற்கு ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை முதல்வர் அறிவிப்பார்.
அ.தி.மு.க.வில் நடக்கும் போராட்டத்தில் கட்சி காலப்போக்கில் சுக்கு நூறாக உடைந்துவிடும். உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் செல்ல முடியாத இடங்களுக்கு போக கூடிய வாய்ப்பு அவருக்கு மட்டுமே உள்ளது. திரைப்படத்தின் வாயிலாக மக்களிடையே நல்ல வரவேற்பும் அவருக்கு உள்ளது. அவர் கருத்து சொல்லும் போது மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக தேர்தல் பணிகள் ஆற்றியதால் உதயநிதி ஸ்டாலின் இயக்கத்திற்கு தேவை. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அதிக இடங்களில் வெற்றியை தேடிதந்து அவர் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் சேவை கட்சிக்கும் தமிழகத்துக்கும் அவசியம் தேவை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு உதயநிதி ஸ்டாலின் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
- பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பது குறித்து கேட்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை.
பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும், 69 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த மே மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாய்மார்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை அமைக்கப்படாமல் உள்ளதால் தாய்மார்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அய்யப்பன் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.
- யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தது
பெரம்பலூர்
பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 56-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இரவு பூந்தேரில் மேள வாத்தியத்துடன் அய்யப்ப பக்தர்கள் பஜனையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. பின்னர் அய்ய சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப தேர் திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடந்தது. இதையொட்டி காலையில் 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் உற்சவர் அய்யப்ப சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தது. பின்னர் மாலை 6.30 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அய்யப்பா சேவா சங்கத்தினர், அய்யப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டிட பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பொதுமக்கள் நலன் கருதி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்சீகூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் சமுதாய சுகாதார வளாக கழிப்பறை கட்டிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து அகரம்சீகூர் புதிய காலனி பகுதியில் உள்ள பொது இடத்தில் கட்டப்பட்ட கழிப்பறையின் கட்டுமானப் பணிகளை சிறிது காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அகரம்சீகூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் உள்ளது. இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.
அந்த வழியே செல்லும் பொதுமக்களும் மூக்கை பிடித்துக் கொண்டு சாலையை கடக்க நேரிடும் நிலை உள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பெண்களுக்கு உடல் ரீதியான கிருமிகள் தாக்குதல் அபாயத்திற்கு வழி உள்ளதாகவும் . இயற்கை உபாதைகளை கழிக்க அப்பகுதி பொதுமக்கள் இருள்வரும் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி அகரம்சீகூர் காலனி பகுதியில் கிடப்பில் உள்ள கழிப்பறைகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
- மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலக உதவியாளர் மற்றும் பிற துறைகளில் உள்ள சமையலர், இரவு காவலர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அலுவலக அடிப்படை பணியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். அலுவலக வேலையாக உதவியாளர்கள் வெளியே சென்று வர பயணப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






