என் மலர்
நீலகிரி
- தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது.
- கடந்த 2 நாட்களாக கூடலூரில் மழையில் தாக்கம் அடியோடு குறைந்து விட்டது.
ஊட்டி:
கூடலூர் தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் உடைந்தது. தொடர்ந்து ஏராளமான இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்தது. தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது. இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 80 பேர் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கூடலூரில் மழையில் தாக்கம் அடியோடு குறைந்து விட்டது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 4 குழுக்களாக பிரிந்து ஓவேலி, கூடலூர் நகரம் என பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்றனர்.
ெவட்டி அகற்றம் இதையடுத்து தாசில்தார் சித்தராஜ் தலைமையிலான குழுவினர் கூடலூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் சென்று எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆபத்தான மரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை தளவாட பொருட்களை கொண்டு அறுத்து அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதேபோல் கூடலூர்-ஓவேலி செல்லும் சாலைகளில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் மழை குறைந்துவிட்ட சூழலில் முன்னெச்சரிக்கையாக சாலையோரம் ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழை பெய்தாலும் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
- நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்தது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்பட அணைபகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.தொடர் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த தொடர் மழையால் கூடலூர் வட்டாரத்தில் புஞ்சங்கொல்லி, கூடலூர் நகரம், ராக்வுட், ஊட்டி வட்டாரத்தில் அண்ணா காலனி, மினிட்மந்து, காந்திபேட்டை, கேத்தி பாலாடா, இத்தலார் கிண்ணக்கொரை, மஞ்சூர், குன்னூர் வட்டாரத்தில் சேலாஸ், கோத்தகிரி வட்டாரத்தில் மைனலா மட்டம் உள்ளிட்ட இடங்களில் 79 மின் கம்பங்கள் சேதமானது.மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மழைக்கு 61 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர கூடலூர், பந்தலூர், ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தற்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மாவட்டம் முழுவதும் மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மண்குவியல்களும் அகற்றப்பட்டது.சேதமான மின்கம்ப ங்களை மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. கூடலூர் மங்குழி ஆற்றில் சேதம் அடைந்த பாலம் உள்ள பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்ப டுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலமாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா், ராமசந்திரன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. எதிா்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள சேதங்கள் ஏற்படுவதை தவிா்க்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையின் 80 வீரா்கள் கூடலூா் பகுதிக்கு வரவழைக்க ப்பட்டுள்ளனா். நீலகிரியில் அடுத்த 2 நாள்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினரும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லக்கூடிய 189 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா். தேவைப்படும் பட்சத்தில் கோவை மாவட்டத்திலிருந்தும் பணியாளா்கள் வரவழைக்க–ப்படுவா் என்றார்.
- குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது.
- இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
குன்னூர்
நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் பூங்காவில் உள்ள மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு ரசிப்பர்.
பின்னர் பூங்காவில் உள்ள புல்தரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறியும், குழந்தை களுடன் விளையாடி மகிழ்ந்தும் உற்சாகமாக பொழுதை கழிப்பா்.
குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது. இதையடுத்து புல்தரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பூங்காவில் உள்ள புல்தரை தற்காலிகமாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்து ள்ளனா்.
- மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- சுற்றுலா பயணிகளை தடையை மீறி விடுதி நிர்வாகம் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஊட்டி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி(வயது26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வார விடுமுறையை பொழுதுபோக்குடன் கழிப்பதற்காக மலைப்பிரதேசமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் ஊட்டிக்கு வந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை அவர்கள் கண்டு ரசித்தனர்.
பின்னர் கல்லட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்று அவர்கள் தங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை கட்டா வினிதா சவுத்ரி தனது நண்பர்களுடன் கல்லட்டி ஆற்றை பார்க்க சென்றனர்.
கல்லட்டி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்தபடி ஆற்றின் அழகினையும், தண்ணீர் பாய்ந்து செல்வதையும் கண்டு ரசித்தனர்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டா வினிதா சவுத்ரி கல்லட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கட்டா வினிதா சவுத்ரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்ததும் நண்பர்கள் அதிர்ச்சியாகி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த கல்லட்டி ஆற்றுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இரவு நேரமானதாலும், ஆற்றில் வெள்ளம் அதிகமாக வருவதாலும் தேடும் பணியை போலீசார் நிறுத்தினர்.
இன்று காலை 2-வது நாளாக ஐ.டி. பெண் என்ஜினீயரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து செல்லும் கல்லட்டி ஆறு சீகூர் வனப்பகுதி வழியாக சென்று பவானி சாகர் அணையை அடைகிறது. இதனால் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் 2 குழுவாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு குழுவினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து, ரேய்சன் வேலி வரையிலும், மற்றொரு குழுவினர் பர்சன்வேலியில் இருந்து வாழைத்தோட்டம் பகுதி வரையிலும் ஆற்றுப்பகுதி, கரையோரங்களில் தேடினர்.
இந்த நிலையில் கட்டா வினிதா சவுத்ரி பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டா வினிதா சவுத்ரியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை தடையை மீறி விடுதி நிர்வாகம் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கல்லட்டி சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வந்த நெல்லையை சேர்ந்த ஐ.டி.பெண் ஊழியர் உயிரிழந்தார். இந்தநிலையில் மற்றொரு ஐ.டி. பெண் ஊழியர் ஆற்றுக்குள் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வனவிலங்கு வேட்டைக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.
- வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகள் இருந்தன. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் வனவிலங்கு வேட்டைக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் எல்லமலையில் வசிக்கும் அப்துல் கர்கர் பாவா(33) என்பவர் அடிக்கடி வனவிலங்கு வேட்டைக்கு செல்வதாக நியூ ஹோப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் எல்லமைக்கு சென்று அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, அவரது வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகள் இருந்தன. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர் வனவிலங்கு வேட்டைக்கு செல்வதும், அதற்காக நாட்டு துப்பாக்கி மற்றும் குண்டுகளுடன் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 3 குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
- வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
கூடலூர் :
கூடலூரில் உள்ள கெவிப்பாரா பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக நடமாடி வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேண்ட் தெருவில் காட்டுயானை உலா வந்தது.
அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சாலையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை, தொடர்ந்து தனியார் எஸ்டேட் வழியாக கோக்கால் மலைக்கு சென்றது. இருப்பினும் காட்டுயானை அடிக்கடி அப்பபகுதிக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
- மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை.
- கடந்த பல ஆண்டுகளாக நீலகிரி தேயிலைத்தூளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நீலகிரி தேயிலைத்தூளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் காரணமாக தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டதால், தேயிலைத்தூள் தேவை அதிகரித்து நீலகிரி தேயிலைத்தூளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரையிலான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த பச்சை தேயிலை, கடந்த சில மாதங்களாக அதிகபட்சமாக ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் அசாம் மாநிலத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கியதால், நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கொள்முதல் விலை சற்று வீழ்ச்சியடைந்தது. இந்த மாதத்தில் பச்சை தேயிலை விலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 12 ரூபாய் 68 காசுகள் என்று இந்திய தேயிலை வாரியம் நிர்ணயித்துள்ளது. இருப்பினும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி, பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு அந்த கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே சிறு தேயிலை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கவாத்து செய்யும் பணி கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்துள்ளதால் தேயிலை தோட்டங்களில் கொழுந்துகள் நன்கு வளர்ந்து மகசூல் அதிகரித்து வருகிறது. ஆனால் தேயிலை பறிப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அதிக பரப்பில் தேயிலை தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் மின்மோட்டார் மூலம் இயங்கும் அறுவடை எந்திரம் மற்றும் கை அறுவடை எந்திரங்கள் மூலமாக பச்சை தேயிலையை அறுவடை செய்து வருகின்றனர். மேலும் தற்போது பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பச்சை தேயிலையை பறிக்காமல் விட்டு விட்டதால் அவை கரட்டு இலையாக மாறி உள்ளது. இதனால் செடிகள் பாதிக்காமல் இருக்க பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு அடி கவாத்து செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலை செடிகளின் வேர்ப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். மகசூல் அதிகரிப்பு இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிகாலங்களில் மேல் கவாத்தும் செய்வது சிறந்தது. தற்போது பச்சை தேயிலைக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டங்களில் கவாத்து செய்து வருகிறோம். ஒரு தேயிலை செடியை எந்திரம் மூலம் கவாத்து செய்ய 1 ரூபாய் 50 காசுகள் செலவாகிறது. கவாத்து பணி முடிந்தபிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு, முறையாக பராமரித்து வந்தால், சில மாதங்கள் கழித்து தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை மகசூலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.
- மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் நில நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோா் ஊட்டி வந்தனர்.
வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரனுடன் ஊட்டி மற்றும் கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.
பின்னர் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் நிருப–ர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் மழையால் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் அதிகம் உள்ளதோ அந்த இடங்களில் எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த பின், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
பேரிடா் மீட்புக் குழுவினா் 80 போ் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு வந்துள்ளனா். இவா்களில் 40 போ் உதகையிலும், 40 போ் கூடலூரிலும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு–ள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பேரிடா் மீட்புப் படையினா் வரவழைக்கப்படுவா்.
கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிப்படைந்து முகாம்களில் தங்க–வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சனிக்கிழமைக்குள்(இன்று) இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உடனிருந்தனா்.
- புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு பன்றி மணிமேகலையை முட்டி தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார்.
- வனத்து–றையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சே–ர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி மணிமேகலை(வயது34). தோட்ட தொழிலாளி.
இவர் தினமும் தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்வது வழக்கம். நேற்று காலையும் வழக்கம்போல் தோட்டத்திற்கு தேயிலை பறிக்க சென்றார்.
தோட்டத்தில் தேயிலை பறித்து அதனை மூட்டையாக கட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு பன்றி மணிமேகலையை முட்டி தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மணிமேகலையை மீட்டு கோத்தகிரி அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து வனத்து–றையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொழிலாளிகளை காட்டுப்பன்றி தாக்குவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
- அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளதுடன், காற்றின் வேகமும் அதிகரித்ததால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்களும் முறிந்து விழுவதும் தொடர்கிறது.
நேற்று காலை தொட்டகம்பை கட்லாடா பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையின் மேற்புற பகுதியில் இருந்து மண்குவியலுடன் ராட்சத பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன.
இதனால் மஞ்சூரில் இருந்து பிக்கட்டி வழியாக எமரால்டு, இத்தலார் ஊட்டி போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இத்தலார் முதல் எமரால்டு வரையும் மற்றும் கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலா பகுதி உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் குழந்தை ராஜ் மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஜே.சி.பி.எந்திரங்களின் உதவியுடன் சாலைகளில் விழுந்த மண்சரிவுகள் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மஞ்சூர் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்பவரின் வீடும் இடிந்தது. இதைதொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் இடிந்த வீட்டை பார்வையிட்டு அவருக்கு நிவாரண தொகைகளை வழங்கினர்.
குந்தா அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் ஊட்டி-கெந்தரை சாலை, சின்கோனா, தாவரவியல் பூங்கா உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தொடர்மழையால் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்து விழுந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. கூடலூர் தொரப்பள்ளி அருகே இருவயல் ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 குடும்பத்தை சேர்ந்த 25 பேரை தாசில்தார் சித்தராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவர்களை மீட்டு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைத்தனர்.
கூடலூரில் இருந்து ஆரோட்டு பாறைக்கு செல்லும் சாலையல் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தேவலா அட்டியில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து பாலம் உடைந்தது. பந்தலுர் அருகே செம்மன்வயல் ஆதிவாசி கிராமத்தில் வெள்ளம் புகுந்தது.
- சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55).
- தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார்.
அரவேணு:
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55). கட்டுமானத் தொழிலாளி.
இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி வந்தார்.அங்கு பல இடங்களில் வேலைத் தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.
இதையடுத்து தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பஸ்சை நிறுத்துமாறு கூறி முள்ளூர் கிராமத்தில் இறங்கினார்.
பின்னர் அவர் அங்குள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தம்பிதுரை பாலத்தில் இருந்து தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். அப்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பிதுரை இறந்தது குறித்து சேலத்தில் உள்ள அவரது மனைவி, மகன் உறவினர்களுக்கு தகவல் அளிக்கபட்டது. அவர்கள் இங்கு வந்து தம்பிதுரையின் உடலை வாங்கி சென்றனர்.
- தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
- மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினமும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை) சில பகுதிகளில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் (மலைப்பகுதிகளில்) சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்பட கூடிய 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.






