என் மலர்
நீலகிரி
- கன்றுக்குட்டி குறுக்கே வந்ததால் விபத்து.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). அவர் சந்திரசேகர் (52) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ் கோத்தகிரி பகுதிக்கு வந்தார்.
அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டி ஒன்று குறுக்கே வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் திடீரென பிரேக் பிடித்தார். மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த சந்திரசேகர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னிய தாவரங்களை முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திலும் மாவட்ட பசுமைக்குழு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த மாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் அன்னிய தாவரங்கள் குறித்து, வனத்துறையால் அன்னிய தாவரங்களின் படங்களுடன் விரிவான முறையில் குழு உறுப்பி னர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும் அந்நிய தாவரங்களுக்கு மாற்றாக, நீலகிரி மாவட்ட சீதோஷ்ண நிலையில் நன்கு வளரக்கூடிய சோலை நாற்றுகளின் விவரங்களும் படங்களுடன் எடுத்து கூறப்பட்டன. ஒவ்வொரு அரசு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர்களால் விளக்கப்பட்டது. பின்னர் இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வளர்ந்துள்ள அன்னிய தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றை படிப்படியாக அகற்ற அனைத்து துறைகளும் கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு அன்னிய தாவரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், சோலை மரக்கன்று மட்டுமே நடப்பட வேண்டும். நடப்பட்ட மரங்கன்றுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் பராமரிக்கப்படும் நர்சரிகளில், தேவைக்கேற்ப சோலை நாற்றுகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
அன்னிய தாவரங்கள் அரசு நிலங்களில் மட்டும் அல்லாமல், தனியார் பட்டா நிலங்களிலும் காணப்படுவதால், பொதுமக்களும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி, அன்னிய தாவரங்களை இந்த மாவட்டத்தில் இருந்து முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்கள் சச்சின் போஸ்லே தூக்காராம், கொம்மு ஓம்காரம், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் (கூடலூ ர்), நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து காய்கறிகளை வண்டிகளில் ஏற்றி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட புதுமந்து பகுதியை அடுத்து முருகன் கோவில் மேடு பகுதி உள்ளது. இங்கு சுமார் 37 குடும்பங்கள் வசித்து வருகின்றன, எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் தினமும் அப்பகுதி மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி தலைவரும், வார்டு கவுன்சிலரும், 4 ஆண்டு காலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மெயின் ரோட்டில் இருந்து முருகன் கோவில் மேடு பகுதிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும். சாலை வசதி கிடையாது, தண்ணீர் வசதி கிடையாது, ஓரு சில வீடுகளில் மட்டும் மின்சாரம் வசதிகள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகளும் இந்த வழியாக பயணிப்பதால் பெரும் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் விவசாயம் செய்து வருகின்றன.மற்றும் காய்கறிகளை தோட்டத்தில் இருந்து தலை சுமையாக 1 கிலோ மீட்டர் தூரம் வரை சுமர்ந்து வந்து வண்டிகளில் ஏற்றி வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தொட்டபெட்டா ஊராட்சியும் இதனைகண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- குழந்தைகளை துன்புறுத்தினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஊட்டி,
பந்தலூர் அருகே உள்ள அம்பலமூலாவில் ஆதிவாசி மக்களுக்கு போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை ஆகியவை குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன் தலைமை தாங்கினார். தொடர்து 212 ஆதிவாசி மக்களுக்கு தண்ணீர் தொட்டிகள், போர்வை, துணி வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, ஆதிவாசி மக்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்கள் அரசு வேலைகளில் சேர்ந்து உயர் பதவிகள் வகிக்க வேண்டும். பெண் குழந்தைகளை சிறுவயதில் திருமணம் செய்து கொடுத்தால் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளை யாராவது பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைபொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், மரக்கார், தனிப்படை போலீஸ் ஏட்டுகள் சித்துராஜ், சுரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
- அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
ஊட்டி,
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: -
ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். இந்த நாளில் வண்ணவண்ண மத்தாப்புகளை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன், ஒலி எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்படவும், நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் புகையால், காற்று மாசு ஏற்படவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்த மாவட்டமும் உயிா்கோளப் பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலை கொண்டப் பகுதியாகும். பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.
இச்சூழலில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின், அது மாவட்டத்தின் மென்மையான சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அவற்றைத் தவிா்த்து, வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.
மேலும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை எழுப்பக்கூடிய தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.
இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளா்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறும் விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
- வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வனத்துறையினர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சொக்கநல்லி கிராம மக்களுக்கு வனத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் மசினகுடி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி தலைவர் மாதேவி மோகன், செயலர் கிரண் மற்றும் பணியாளர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மசினகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். அங்கு விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது. ஒலிபெருக்கி மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும். அவை இடம் பெயர்ந்து ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளிைய கொண்டாட வேண்டும். மேலும் வனத்துறையின் உத்தரவை பின்பற்ற வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
- போக்குவரத்து கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
- தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கபட்டுள்ளன.
கோத்தகிரி,
தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இருந்து விடுமுறைக்காக மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் அதிக பயணிகள் செல்ல கூடும் என்பதால் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்க பட்டுள்ளன.
இதில் விடுமுறைக்காக கோத்தகிரி பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்க்காக உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்போது 5 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கோத்தகிரி போக்குவரத்து கிளை மேலாளர் ஞானபிரகாஷம் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளியன்று பயணிகள் அதிக அளவு பயணம் செய்ய நேரிட்டால் உடனடியாக இயக்க மேலும் சில பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
- சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன.
- புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்களும் வளருவதற்கான இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி விதைகள் கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.'டித்தோனியா டிவர்சிபோலியா' என்ற தாவர இனத்தை சேர்ந்த இந்த செடி அடர்த்தியாக வளர்கிறது. வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களால், மண்ணின் உறுதித் தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி பூக்கள் இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூக்கத் தொடங்கியுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலையில் ஓரங்களிலும், தேயிலை தோட்ட சரிவுகளிலும் கொத்துக்கொத்தாக இந்த மலர்கள் பரவலாக பூத்துள்ளன. வாசமில்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி காண்போரை வசீகரிக்கிறது. இதே போல பிளேம் ஆப் பாரஸ்ட் என்ற செங்காந்தள் மலர்களும், சேவல் கொண்டை மலர்களும் ஏராளமாக பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் இயக்குனரின் உத்தரவின்படி வட்டார அளவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி டாக்டர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளை கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் 100, 200 மீட்டர் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இறகு பந்து, சதுரங்கம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலம், பாட்டு, நடன போட்டிகள் புயல் நிவாரண கூட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் பேரணி நடந்தது.
- சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் இன்று ஐ.ஜி.இ.என் கிளப்புடன் இணைந்து மாரத்தான் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் பி.டி.அருமைராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரியும், தண்ணீர் மற்றும் உணவு வீணாவதை தடுப்பதை வலியுறுத்தியும் எல்லநள்ளியில் இருந்து கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
- வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
- 89 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது.
ஊட்டி,
ஊட்டியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், ஊட்டி லவ்டேல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டாா்.
இந்த வாகன சோதனையின்போது தனியாா் வேன், பஸ் உள்பட 20 வாகனங்களிலிருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் கூறியதாவது:
மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி 89 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல தேவையில்லாத இடங்களில் ஹாரன் அடிக்க கூடாது. இந்த விதிகளை மீறிய 20 வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு ள்ளது என்றாா்.
- கைதான கணவர் வாக்குமூலம்.
- உடலை சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசினேன்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர் வயலை சேர்ந்தவர் மோகன்(வயது59). விவசாயி. இவரது மனைவி உஷா(53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 19-ந் தேதி உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு உஷா சென்றார். அதன் பின்னர் அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து உஷாவின் தம்பி சத்யன்கூடலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வந்தனர்.
சுவற்றில் ரத்தக்கறை
இந்த நிலையில் போலீசாருக்கு உஷாவின் கணவர் மோகனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரிக்கவே அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் உள்ள சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதுகுறித்து விசாரித்த போது மனைவியை கொலை செய்து, உடலை புதரில் வீசியதை மோகன் ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது-
எனக்கும், எனது மனைவிக்கு அடிக்கடி சண்டை வரும். பின்னர் சமாதானமாகி விடுவோம். கடந்த 19-ந் தேதி எனது மனைவி உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கிருந்து வீட்டிற்கு தாமதமாக வந்தார்.
இதுகுறித்துகேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை தள்ளி விட்டேன். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததால் மாட்டிகொள்வேன் என நினைத்த நான் அதனை மறைப்பதற்காக உடலை சாக்குமூட்டையில் கட்டி காரில் ெகாண்டு ெசன்று தேவர்சோலை பாடந்துரையில் ஒரு புதரில் வீசினேன். அங்கு கோழிக்கழிவுகள் கிடப்பதால் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் தப்பி விடலாம் என நினைத்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் மனைவி மாயமானதாக மனைவியின் சகோதரருடன் ெசன்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கைது
இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.தொடர்ந்து உடல் வீசப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்து சென்று இறந்து கிடந்த உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






