என் மலர்
நீலகிரி
- விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது.
- நன்மைகள் குறித்து விளக்கினார்
குன்னூர்,
குன்னூர் தோட்டக்கலைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர்மட்டம் கிராமத்தில் விவசாய சூழல் அமைப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் குறித்து மேரக்காய் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி தொடங்கப்பட்டது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி தலைமை தாங்கினார். இயற்கை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகள் சொந்தமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயார் செய்வதற்கு செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில் தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே செம்மனாரை ஆதிவாசி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில், தன் சுத்தம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், சங்கத்தின் பொறியாளர், கிராம வளர்ச்சி அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு நோய்கள் வராமல் பாதுகாக்க சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம் என்று விளக்கினர். மேலும் முறையாக கை கழுவுதல், சுயமாக தன்னை எவ்வாறு நோய்களில் இருந்து காத்துக் கொள்வது, இதற்கு தன் சுத்தம் முக்கியம் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- குட்காவை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- குட்காவை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பெட்டிக் கடையில் குட்காவை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.
- அனைத்து திட்டங்களைப் பற்றி விளக்கப்பட்டது.
- கிராமமாக வளர்ச்சி அடைய செய்வதை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஊட்டி,
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒன்றான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தனது திட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் செயல்படுத்தி ஒரு தன்னிறைவு பெற்ற கிராமமாக வளர்ச்சி அடைய செய்வதை இத்திட்டத்தின் நோக்கமாகும். குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்லியார் வருவாய் கிராமம் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமமாகும். மேலும் தோட்டக்கலைத்துறை, ஊராட்சித் துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம் மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் பர்லியார் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோடமலை கிராமத்தில் மக்கள் கருத்தரங்கு நடத்தப்பட்டு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களைப் பற்றி விளக்கப்பட்டது.
- வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
- பசுமாட்டை, புலி தாக்கி கொன்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது.
சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனை செய்ததில், நாயை, சிறுத்தை கவ்வி சென்றது தெரியவந்தது.
இதனை தெரிந்த அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
கடந்த 6 மாதமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பலர் நேரிலும் பார்த்து உள்ளார். எனவே, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த நிலையில் ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை, புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் எச்.பி.எப். பகுதியில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- குடியிருப்புகள், பள்ளிவாசல், ஆலயங்கள் உள்ளது.
- மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் மவுண்ட் ரோடு பகுதி முக்கியமான சாலை ஆகும். இது மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை. இந்த சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
அந்தப் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட நகராட்சி மார்க்கெட் கடைகள், 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிவாசல், ஆலயங்கள் உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், வியாபாரிகள் தினதோறும் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடிபோதையில் நடைபாதையில் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் நடந்து செல்லும் மக்கள் முகத்தை சுளித்து கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் பல்வேறு விதங்களில், பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஆனால் டாஸ்மார்க் கடை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்னூர் தாசில்தாரான சிவக்குமாருக்கு டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர் அதிரடியாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதனால் மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த த.மு.மு.க, ம.ம.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சென்று தாசில்தார் சிவகுமாரை சந்தித்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
- ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது.
- நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. சமீப நாட்களாக இங்கு குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை அலேக்காக கவ்வி சென்றது. சத்தம் கேட்டு எழுந்து வந்த வீட்டின் உரிமையாளர், வளர்ப்பு நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
நாயை சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி எச்.பி.எப் பகுதியில் பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க, 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து கடிதம் வழங்கப்பட்டது.
- தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, ஏஐடியுசி, ஐ.என்.டியு.சி, சி.ஐ.டி.யு ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து, கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர். அப்போது, தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ெதரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க துணை பொது செயலாளர் மாடசாமி, நிர்வாகிகள் சந்திரன், அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, குமார், அன்பழகன், சி.ஐ.டி.யு சந்திரகுமார், ஐ.என்.டியு.சி யோகநாதன், ஏஐடியுசி பெரியசாமி, கூடலூர் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் லியாகத் அலி, பாபு, சிவானந்தராஜா, சேகரன், சின்னவர், சுப்பிரமணி, உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
- சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார்.
ஊட்டி,
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
இதில் சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார். பிரஜித் 32 கிலோ எடை பிரிவிலும், பிரனீத் 34 கிலோ எடை பிரிவிலும், யுதை 36 கிலோ எடை பிரிவிலும், மாணவிகள் பிருந்தா 44 கிலோ எடை பிரிவிலும், பிரதயா 40 கிலோ எடை பிரிவிலும், கீர்த்தி லட்சுமி 42 கிலோ எடை பிரிவிலும்,கனிஷ்கா 56 கிலோ எடை பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
இதேபோல் ஹரிஹரன் 38 கிலோ எடை பிரிவிலும், பிரதிஷ்கா 44 கிலோ எடை பிரிவிலும், வீணா 32 கிலோ எடை பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் எடை பிரிவிற்கான 3 வது இடத்தை பெற்று அதற்கான கோப்பையையும் பெற்றனர்.
இவர்களைப் பாராட்டும் விதமாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் சந்திரன், பள்ளி முதல்வர் எஸ்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை பாராட்டி பேசினர். அர்ஜுன் டேக்வாண்டோ பயிற்சியாளர், ஜெகநாதன் உடல் கல்வி ஆசிரியர், ராஜேஸ்வரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டினர்.
- அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடிமை பொருள் வழங்கல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து பணியாற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு எற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.மேலும் அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இயற்கை இடர்பாடுகளினால் சாலைகளில் மரம் விழுந்தால், உடனடியாக அகற்ற பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.
ேமலும் உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குன்னூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கண்ணன், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் மற்றும் அரசுத்துறை பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
ஊட்டி,
நீலகிரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்சச் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.இதனால் ஊட்டி-குன்னூர் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- நீலகிரியில், 283 இடங்கள் பேரிடர் அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
- தீயணைப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
ஊட்டி,
நீலகிரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு வாரம் தங்கி பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரியில், 283 இடங்கள் பேரிடர் அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில், 44 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 483 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.
மேலும், அரக்கோணத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் ஹரிதேவ் பண்டார், அருண்ரத்தோர் ஆகியோர் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஊட்டி வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியாவை சந்தித்தனர்.
இப்படையினர் இரு வாரம் தங்கி ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில் பொதுமக்களிடையே சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பேரிடர் பகுதிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் கூறுகையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விழிப்புணர்வு ஏற்ப டுத்துகின்றனர் என்றார்.






