என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மலை ரெயிலுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
    • ரெயிலில் பயணிப்பது குதூகலமாக உள்ளது என்றனர்.

    குன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரெயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீர்வீழ்ச்சிகள், குகைகள், அடர்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மலை ரெயிலில் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பனிமூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இந்தநிலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குன்னூர் ரெயில் நிலையத்தில் மலை ரெயிலுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும் வந்தனர். பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் வந்தது. அந்த ரெயிலில் ஏறி சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மாறுபட்ட காலநிலையில் மலை ரெயிலில் பயணிப்பது குதூகலமாக உள்ளது என்றனர்.

    • தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி சார்பில், மக்களுக்கான தூய்மை இயக்கத்தின் படி மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் நகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்களில் தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர். ஊட்டி நகராட்சி மார்க்கெட், பிங்கர்போஸ்ட், கோடப்பமந்து, அப்பர் பஜார், லோயர் பஜார் உள்பட பல இடங்களிலும் நடந்தது. முன்னதாக பணியாளர்கள் தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சுவர்களில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கரிக்கையூா் கிராமத்தில் இருளா் பழங்குடியினா் அதிகளவில் வசித்து வருகின்றனா்.
    • உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கரிக்கையூா் கிராமத்தில் இருளா் பழங்குடியினா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இந்த பழங்குடியின மாணவா்கள் பயன்பெறும் வகையில் காவல் துறை சாா்பில் நோட்டு புத்தகங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காவல் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினா் மேம்பாட்டு மையத்தை மாவட்ட திட்ட இயக்குநா் மோனிகாராணா திறந்து வைத்தாா். ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை பாா்வையிட கரிக்கையூா் அரசு பள்ளியில் இருந்து தோ்வான 10ம் வகுப்பு மாணவா் ராஜு மற்றும் ரேவதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வனத்துறை அலுவலா் ராஜ்குமாா், கன்டோண்மென்ட் தலைமை அலுவலா் முகமது அலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
    • தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்த கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் விளை நிலங்களில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

    மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகளால் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

    சம்பவத்தன்று மஞ்சூர் அருகே மேல்குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    இதை கண்ட தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை விட்டு விட்டு தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதேபோல் நேற்று மஞ்சூர் ஊட்டி சாலையில் நுந்தளா மட்டம் பகுதியில் 3 காட்டெருமைகள் சாலையோரத்தில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்தனர்.

    மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • திருமண தரகர்கள் 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
    • தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா்.

    பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சிவகுமாா் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தினாா்.

    இதை பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த ஊட்டி புறநகர் போலீசார் தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
    • கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகர தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் செய்திருந்தார்.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், கே.ஏ. முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, பி.ரவி, ஏ.ரவி, நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, நகர துணை செயலாளர் இச்சுபாய், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், கார்த்திகேயன், தம்பி இஸ்மாயில், நகர பொருளாளர் அணில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு நாளை ஒட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

    எதிர்வரும் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பாக முகவர்கள் ஆலோசனை குறித்து தீர்மானிப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கவும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், ரகுபதி, விஷ்ணு பிரபு, ரமேஷ், கீதா, வனிதா, பிரியா, மேரி பிளோரினா, ஃப்ளோரினா புஷ்பராஜ், மீனா தியாகராஜன், அனிதா லட்சுமி மற்றும் கிளை செயலாளர்கள், தி.மு.க நிர்வாகிகள் ரவீந்திரன், மஞ்சு குமார், சுரேஷ், முத்துராமன், புஷ்பராஜ், ரமேஷ், எஸ். கே.ஸ்டான்லி, நவ்ஷாத், மோகன், ரவி, மேத்யூஸ், செல்வராஜ், மணிகண்டன், காந்தள் சம்பத், கே.ரவி, பாரதிராஜா, ராஜன், ஜெர்ரி, சந்திரசேகர், தாவீது ராஜா, என்.ராஜன், சசிகுமார், கே.சங்கர், முஜிபுர், ராஜா, ரவி, பாபு, வெங்கடேஷ், பெரியசாமி, வீரய்யா, ரமேஷ், ஆனந்த், சர்தார், திருஞானம், வில்லியம், அமலநாதன், சுரேஷ்குமார், சதாசிவம், ஸ்டீபன், ஏ.டி.சி ராஜன், பிரதாப், வரதன், முஸ்தபா, சீனிவாசன், நீல் ஆம்ஸ்ட்ராங், தியாகராஜன், ரங்கநாதன், ராஜ்குமார், சுப்பிரமணி, சத்யராஜ், மகளிர் அணியை சேர்ந்த லூயிசா, பிருந்தா, ஷோபா, பிரேமா, ஜாய்ஸ், நிர்மலா, சாந்தி, கீதா, ஜெய சக்தி, விமலா, ரெஜினா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
    • பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது.

    ஊட்டி,

    தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை பாதுகாப்பு விழா நடந்தது. விழாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தாா்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். வளைவு, குறுகிய சாலை, பாலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ள இடங்களில் கவனமுடன் செல்ல வேண்டும்.

    போக்குவரத்து சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தாலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும்.

    மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    அந்த பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்களும் அமைக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறையினர் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கலெக்டர் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், 30 பேருக்கு இலவச ஹெல்மெட்டும் வழங்கினார்.

    இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், திட்ட மேலாண்மை இயக்குநா் மோனிகா ராணா, டேன் டீ பொதுமேலாளர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வெலிங்டன் பாளையவாரிய முதன்மை செயல் அலுவலர் அலி உள்பட பலர்் கலந்து கொண்டனா்.

    • டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் நடைபெற்றது.
    • நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் இணைந்து ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் "மாற்றுத் திறனாளி பெண்களின் உரிமைகள்" குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் தனபால், வேலூர் தொழில்நுட்ப நிறுவன பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான சந்திரசேகரன், நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி, மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கோமதி சுவாமிநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இணை பேராசிரியை டாக்டர் கவுரம்மா அனைவரையும் வரவேற்றார். துறையின் தலைவர் காளிராஜன் மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் கமலா வேணி, முன்னாள் பெண்கள் பாதுகாப்பு அலுவலரும், வக்கீலுமான மரகதவல்லி, ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியை மற்றும் தலைவர் டாக்டர் கனகாம்பாள், முன்னாள் சிறப்பு அரசு வக்கீல் மாலினி பிரபாகரன், மருந்துபகுப்பாய்வு துறை இணைபேராசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், 45 பிற பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கல்லூரியின் மருந்தியல் வேதியியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் ஜூபி முடிவில் நன்றி கூறினார்.

    • விசாரணையில் மோகன கிருஷ்ணன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
    • கைது செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன்(வயது51).

    இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கே.பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் 38 வயது இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் ஒரு புகார் அளித்தார்.

    அதில், மோகன கிருஷ்ணன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். நான் எச்சரித்தும், அவா் தொடா்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதற்காக கூடுதல் எஸ்.பி.மோகன் நவாஸ் தலைமையில் நிர்வாக அலுவலர் பத்மா அடங்கிய பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் அவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து மேற்பார்வையாளர் மோகனகிருஷ்ணன் மீது ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அவர் இது போன்று வேறு யாருக்காவது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாகா கமிட்டியினர் விசாரித்தனர்.

    அப்போது அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்த மேலும் சில பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, மோகனகிருஷ்ணன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாகவே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். உயர் அலுவலர் என்பதால் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதியாக இருந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் தொந்தரவு செய்வதை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் எஸ்.பி.ஆஷிஷ்ராவத் பாலியல் புகார் உள்பட அனைத்து வகையான புகார்கள் மீதும் எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுத்து வந்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் மோகனகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது.
    • தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியது. நாள் முழுவதும் லேசான சாரல் மழையும் பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் காலநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 73 சதவீதமாக இருந்தது.

    மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

    மேலும் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குளிரை போக்க கம்பளி ஆடைகள் அணிந்தும், மழையில் நனையாமல் இருக்க குடைகள் பிடித்தபடியும் சென்றனர்.

    ஊட்டி, குன்னூரில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சாலையில் முன்னால் சென்ற வாகனங்கள் தெரியவில்லை.

    இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதேபோல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஊட்டி படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்பு படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

    கோத்தகிரி பகுதியில் நேற்று காலை முதலே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. பள்ளி சென்று திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். கடுங்குளிரில் இருந்து தப்பிக்க ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடுங்குளிர் மற்றும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    • ராமு தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்
    • அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    ஊட்டி

    ஊட்டியில் உள்ள அழகர்மலையை சேர்ந்தவர் ராமு. தலைக்குந்தா பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அஜர்வால்(வயது 9). எச்.பி.எப். பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அஜர்வால் சம்பவத்தன்று பள்ளி முடிந்து ஏ.சி.எஸ். பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு மினி பஸ் மூலம் சென்றான். பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயற்சி செய்தான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அஜர்வால் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எம்பாலாடாவை சேர்ந்த பஸ் டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • எருமாடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார், பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வேலுசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 50), அப்துல் வக்பு(66) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனையிட்டதில், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×