என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும்.
    • சான்று பெற்ற விதைக் கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என 2 அட்டைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயத்தின் தொடக்கம் விதை. அவ்விதையானது விதைச் சான்றளிப்புத் துறை மூலம் சான்று செய்யப்பட்ட விதையாக இருப்பின், அது மரபு தன்மை மாறாமல் தரம் வாய்ந்ததாகவும், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் அதிக உற்பத்தி திறனையும் கொண்டிருக்கும்.

    சான்று பெற்ற விதைக் கொள்கலன்களில் விதை உற்பத்தியாளர் அட்டை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றட்டை என 2 அட்டைகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

    சான்றட்டையில் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

    உற்பத்தியாளர் அட்டையில் விதை விபரம் மற்றும் பகுப்பாய்வு விபரங்கள் (புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம்) அச்சிடப்பட்டிருக்கும். அனைத்துப் பயிர்களுக்கும் தரமான சான்று விதையின் இனத்தூய்மை குறைந்தபட்சம் ஆதாரநிலை விதைக்கு 99 சதவீதம், சான்று நிலை விதைக்கு 98 சதவீதம் இருத்தல் அவசியம்.

    அதே போன்று அனைத்து சான்று பெற்ற விதைகளின் புறத்தூய்மை குறைந்தபட்சம் 98 சதவீதம் இருத்தல் அவசியம். தரமான சான்று விதைகளின் ஈரப்பதம் தானிய வகைக்கு 10-13 சதவீதம், பயறு வகைக்கு 7-9 சதவீதம் எண்ணெய் வித்துப்பயிறுக்கு 6-9 சதவீதம் இருத்தல் அவசியம்.

    தனியார் விதை உற்பத்தி நிலையங்களில் இருந்து விதைகளை வாங்கி பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் மேற்குறிப்பிட்ட விபரங்களை கவனித்து தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்தவும். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் சான்று விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

        பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தியம் பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர்பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

    • பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 7 பேருக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
    • பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது மாநிலங்களவை உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ் குமார் பரிந்துரை அடிப் படையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இதய வால்வு பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை ரத்த புற்றுநோய், மூச்சு குழாய் ஆஸ்துமா, வலிப்பு நோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கான சிகிச்சைகளுக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 7 பேருக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 மாதங்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூரை சேர்ந்த வளர்மதி (வயது 51) என்பவருக்கு அறுவை சிகிச்சைக்காக ரூ.3 லட்சமும், நாமக்கல் முதலைப்பட்டியை சேர்ந்த லஷ்யா (6) என்பவருக்கு மூச்சு குழல் பாதிப்பு சரி செய்ய ரூ.50 ஆயிரம், திருச்செங்கோடு வட்டம் இலுப்புலி கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (45) என்பவருக்கு வலிப்பு நோய் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம், சேலம் பஞ்சதாங்கி ஏரியை சேர்ந்த மூதாட்டி லட்சுமிக்கு ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.2.70 லட்சம், ராசிபுரம் மங்களபுரத்தைச் சேர்ந்த வருண் (10) என்ற சிறுவனுக்கு சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்காக ரூ.3 லட்சம், சேந்தமங்கலத்தை சேர்ந்த பார்த்திபன் (52) என்பவருக்கு ரூ.3லட்சம், சேலம் சொர்ணபுரியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (52) என்பவருக்கு மருத்துவ உதவிக்காக ரூ.50 ஆயிரம் என பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது மாநிலங்களவை உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).
    • எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் அருகில் உள்ள அகரம் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்தான் (வயது 90).

    இவர் தனது மனைவி பாவாயியுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மனு கொடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    திருச்செங்கோடு வட்டம், அகரம் கிராமம், ஓலப்பாளையம் அருந்ததியர் தெருவில் குடியிருந்து வருகிறேன். எனது மகன் நடேசன் கடந்த 23.02.2016-ல் இறந்து விட்டார். இந்த நிலையில், எனது தந்தை கந்தன் எனக்காக கொடுத்த பூர்வீக சொத்தை, மகன் நடேசன் இறந்த பிறகு, என் பேரன் சிதம்பரம், எனது மருமகள் சாந்தி ஆகியோர் என்னை ஏமாற்றி, என்னிடம் கையொப்பம் பெற்று அபகரித்து விட்டனர்.

    மேலும் எனது கையிலிருந்த ரொக்கம் இருப்பு ரூ.7 லட்சத்தையும் எனது பேரன் சிதம்பரம், மருமகள் சாந்தி ஆகியோர் வாங்கிக் கொண்டார்கள். இப்போது எனது பேரன் சிதம்பரமும் இறந்து விட்டார். எனது மருமகள் சாந்தி, பூர்வீக சொத்தான 76 சென்ட் நிலத்தை ரூ.1.50 கோடிக்கு விற்று விட்டார்.

    எனவே என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக் கொண்டு, எங்களது சொத்தை அபகரித்து மோசடி செய்த எனது மருமகள் சாந்தியை அழைத்து விசாரணை செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் நான் கொடுத்த ரூ.7 லட்சம் பணமும், கண்தெரியாமல், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் எனக்கும், எனது மனைவிக்கும் உயிர் உள்ள வரை சாப்பாட்டிற்கும், மருத்துவ செலவிற்கும், இறந்துவிட்டால் இறப்பு செலவிற்கும் என ரூ.20 லட்சத்தை எனது மருமகள் சாந்தியிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 287 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி னார்கள்.

    கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து, உரிய துறை அலு வலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டுமென அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முட்டை விலை 410 காசுகளாக நீடிப்பதால், தீவனப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.
    • ரூ.72 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.77 ஆக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை 410 காசுகளாக நீடிப்பதால், தீவனப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் மைனஸ் 40 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு எவரேனும் 40 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    அனைத்து பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மைனஸ் என்ற விரும்பத்தகாத ஒன்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் கிழக்கு கடற்கரை மீன்பிடித் தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஏற்படும் மீன் தட்டுப்பாடு காரணமாக முட்டை விற்பனை அதிகரித்து, வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளது.

    வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து, அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மட்டுமே முட்டைகளை விற்று பயனடையலாம் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே ரூ.72 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.77 ஆக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. கறிக்கோழி விலை 105 ரூபாயாக நீடிக்கிறது.

    • நாமக்கல் கோட்டை பகுதியில் நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெறும்.

    இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளை தாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    நேற்று, சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கானகாபிசேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரையி டப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் இளைய ராஜா செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதி களில் சாலையோரம் காலாவதியான உணவுப்பொருட்களை கொட்டுவதால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • காலா வதியான குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் திண்பண்டங் களை சாலையோரம் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதி களில் சாலையோரம் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், நூடுல்ஸ் பாக்கெட்டுகள், குளிர்பான பாக்கெட்டுகளை கொட்டுவதால், அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, இச்சாலை வழியாக வரும் பள்ளி குழந்தைகள் இவற்றை எடுத்து சாப்பிடும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பரமத்திவேலூர் மட்டு மன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலா வதியான குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் திண்பண்டங் களை சாலையோரம் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிள்ளைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் சுமார் 10-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
    • குளத்தில் தேங்கி உள்ள நீரின் அளவு குறைந்து வருவதால் மற்றும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமானதால் குளத்தில் உள்ள நீர் சூடாகி குளத்தில் இருந்த பெரும்பாலான மீன்கள் செத்து மிதக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் சுமார் 10-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.

    கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக பரமத்தி பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியது. அதே போல் மேட்டுப்பாளையத்தில் உள்ள குளமும் நிரம்பியது. இதில் ஏராளமான மீன்கள் உற்பத்தியாகி இருந்தது. இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள நீரின் அளவு குறைந்து வருவதால் மற்றும் கடந்த சில நாட்க ளாக வெயிலின் தாக்கம் அதிகமானதால் குளத்தில் உள்ள நீர் சூடாகி குளத்தில் இருந்த பெரும்பாலான மீன்கள் செத்து மிதக்கிறது.

    இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்ப டுத்தவும், உயிருடன் இருக்கும் மீன்களை பாது காக்கவும் துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
    • ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன்கள் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர், ஏப்.17-

    நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன்கள் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சாரந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார்.
    • பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    நாமக்கல், ஏப்.17-

    நாமக்கல் ரெட்டிப்பட்டி சாலபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தீபா (வயது 30). இவர்களுக்கு கதிர் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த தீபா தனது 3 வயது மகனுடன் வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபா மற்றும் அவரது மகன் கதிர் ஆகியோரை தேடி வருகிறார்கள். 

    • நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.
    • நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலை, அம்மா உணவகம் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடங்கியது. நாமக்கல் பஸ் நிலையம், மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் ரோடு, பி.எஸ்.என்.எல். சாலை, மோகனூர் சாலை, அய்யப்பன் கோவில் வழியாக பரமத்தி சாலை எம்.ஜி.ஆர் சிலை, காந்தி சிலை, உழவர் சந்தை வழியாக மீண்டும் பூங்கா சாலையை அடைந்தது.

    அம்மா உணவகத்தின் முன்பு நிகழ்ச்சி முடிந்தது. அங்கு அணிவகுப்பு மரியாதை செய்து சொற்பொழிவாற்றி நிகழ்ச்சியை முடித்தனர். இதையொட்டி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கி இருந்தனர்.

    ×