என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
- நாமக்கல் கோட்டை பகுதியில் நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை பகுதியில் நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெறும்.
இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளை தாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
நேற்று, சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்று கானகாபிசேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரையி டப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் இளைய ராஜா செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.






