என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் குட்டியாண்டவர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குட்டியாண்டவர் கோவில் நடையும் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் தினமும் ஒருகால பூஜை மட்டும் நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை.

    இந்தநிலையில் பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பழனிவேல் (வயது 28) என்பவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட கோவில் உண்டியல் சில மாதங்களாக திறக்கப்படாததால், அதில் பல ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமனார் வீட்டில் தங்களது மகன் தங்கியதால் மனம் உடைந்த தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் பெரிய வடக்குவெளி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 55). இவரது மனைவி நாகம்மாள்(50). இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், இளமதி என்ற மகளும் உள்ளனர். இதில் சுதாகருக்கு திருமணமாகி தாய், தந்தையருடன் வசித்து வந்தார். அதேபோல் மகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சுதாகருடைய மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மாமனார் வீட்டிலேயே தங்கி சுதாகரும், அவரது மனைவியும் கவனித்து வந்துள்ளனர். மேலும் சுதாகர் தனது வீட்டுக்கு அவ்வப்போது சென்று தனது தாய்-தந்தையை பார்த்து வந்துள்ளார்.

    ஆனாலும் வயதான காலத்தில் தங்கள் மகன் அருகில் இருந்து தங்களை பார்த்துக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம் துரைசாமியிடம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான தனது ஏக்கத்தை துரைசாமி அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார். இதனால் தனிமையில் இருந்த துரைசாமியும், அவரது மனைவியும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் வாடி வந்தனர்.

    இந்தநிலையில் துரைசாமியும், அவரது மனைவி நாகம்மாளும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    பாலையூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோமல், பாலையூர், மாந்தை, இடைக்கியம், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி தலைமை தாங்கினார். கிராம தன்னார்வலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். எந்த ஒரு இடத்திலும் மத சம்பந்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளிநபர்கள் ஊருக்குள் வந்து தங்கி இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அத்தியாவசிய தேவைக்காக ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் போலீசாரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். சாராயம் விற்பதற்கும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் அனுமதிக்கக் கூடாது. இதனை மீறினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், போலீசார், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    கோடிக்கரை கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் பழைய லைட் ஹவுஸ் கீச்சான் ஓடை இடையே கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது.

    இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலோர காவல் போலீசார் உருளையை கைப்பற்றி சோதனை செய்ததில் அந்த சிலிண்டர் 2 அடி உயரம் கொண்டதும், சிலிண்டர் கப்பலில் தீ அணைக்க பயன்படுத்துவதும் என போலீசார் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவை கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 313 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 200 மோட்டார் சைக்கிள்கள், 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,303 மோட்டார் சைக்கிள்களும், 74 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் மது குற்றங்களை தடுக்கும் வகையில் இதுவரை 513 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீர்காழி:

    தமிழ்நாடு திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலசுப்பிரணியன் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

    இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.ஆயிரம் பணம் மற்றும் ரே‌ஷன் பொருட்களை வழங்கியது.

    வரும் மாதத்திற்கான ரே‌ஷன் பொருட்களையும் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் அரிசி வாங்க கூடிய ஒரு கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 328 ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு பணம் மற்றும் ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் 45 சதவீதம் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி பணிபுரிந்து வருபவர்களும், 55 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தினக்கூலி தொழிலாளர்களும் பெறுகின்றனர்.

    எனவே அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் 30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்ற வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களை தவிர்த்து வேலை இழந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள 55 சதவீத ஏழை, எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கிராம கோவில் பூசாரிகள் ஆகியோரை கணக்கிட்டு அவர்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்தை உயர்த்தி மாதம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த ஆளில்லா குட்டி விமானம் மீது கல்வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் ஆளில்லா குட்டி விமானம்(டிரோன்) மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தில் வயல் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர் களை போலீசார் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு கண்டுபிடித்து விரட்டினர். அப்போது ஒரு இளைஞர், அதன் மீது கல்வீசி தாக்கினார். இந்த காட்சி அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து சீர்காழி போலீசார் கிரிக்கெட் விளையாடிய 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆளில்லா குட்டி விமானம் மீது கல்வீசி தாக்கியவர் எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

    மேலும் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் முன்பு நிற்க வைத்து ‘விழித்திரு.. தனித்திரு... கிரிக்கெட் விளையாடாமல் வீட்டில் இரு....’ என்ற வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்க செய்தனர்.
    சீர்காழி பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லோகநாதன் ஆகியோர் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா ஏற்படாமல் தடுக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த அகணி ஊராட்சியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லோகநாதன் ஆகியோர் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா ஏற்படாமல் தடுக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது.

    ஊரடங்கு உத்தரவினை பின்பற்றி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாரத்திற்கு 2 தினங்கள் மட்டும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் வெளியே சென்று பொருட்கள் வாங்கவும், வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசத்தினை அணிந்தும், மீண்டும் வீடு திரும்பும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதேபோல் திட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சீர்காழி காவல்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றை இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழங்கினார்.
    மகாராஷ்டிராவில் இருந்து சரக்கு லாரியில் நாகைக்கு வந்த வாலிபருக்கு மருத்துவக்குழுனர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் குணவேலன் (வயது 20). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாகையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த தனியார் கம்பெனி மூடப்பட்டது. இதையடுத்து குணவேலன் ஊருக்கு திரும்ப முயன்றார். தற்போது ஊரடங்கால் பஸ், ரெயில் இயங்காததால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒரு சரக்கு லாரியில் ஏறி திருச்சிக்கு வந்தார். பின்னர் மற்றொரு லாரியில் மேலும் சிலருடன் ஏறி கும்பகோணம் வழியாக நாகைக்கு வந்தார். மற்றவர்கள் கும்பகோணத்தில் இறங்கி விட்டனர்.

    இதையடுத்து வாஞ்சூர் சோதனை சாவடியில் இருந்த போலீசார் குணவேலனை அழைத்து சென்று அங்கிருந்த மருத்துவ குழுவினரிடம் சோதனை நடத்தினர். இதன் பின்னர் அவர் மேல்சோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சோதனை நடந்து வருகிறது.
    வேதாரண்யத்தில் தடையை மீறி அடையாள அட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தல், சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களை கிருமிநாசினி தெளித்தல், கொரோனா படம் வரைந்து விழிப்புணர்வு என பல்வேறு கட்டங்களாக தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நகராட்சி பகுதிக்குள் வருவதற்கு 3 விதமான நிறங்களை கொண்ட வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே குடும்பத்தில் இருந்து ஒருவர் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேதாரண்யம் டி.எஸ்.பி. சபிபுல்லா, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் அடையாள அட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு கவசங்களையும் வழங்கினார்.

    ஊரடங்கு உத்தரவால் வேதாரண்யத்தில் ஒரு லட்சம் உப்பு மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கி போய் இருக்கின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக் காவில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரி மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது. இதனால் உப்பள பகுதியில் வேலை பார்த்து வந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடுகளிலேயே முடங்கி போய் இருக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருளான உப்பை உற்பத்தி செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தற்போது சுமார் 800 உப்பளத் தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு உப்பள பகுதியில் உப்பு எடுத்து வருகின்றனர்.

    தற்போது நாள்தோறும் சிறு வேன்களில் உப்பு ஏற்றுமதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடும் வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி கூடுதலான நிலையில் நாள் ஒன்றுக்கு 100 லாரிகளில் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.

    ஆனால் அரசின் தடை உத்தரவால் தற்போது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் 10 லாரிகளில் மட்டுமே நாள்தோறும் உப்பு ஏற்றுமதியாகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் உப்பு முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    உப்பு ஏற்றுமதி இல்லாததால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசின் தடை உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பி உப்பு ஏற்றுமதி எப்போது வரும் என உப்பளத் தொழிலாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

    சீர்காழியில் ஊர்காவல் படையினருக்கு போலீசார் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
     சீர்காழி:

    சீர்காழி டிஎஸ்பி. வந்தனா அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஊர் காவல் படையினர், காவலர்கள் நண்பர்கள் குழுவினர், கொரோனா தடுப்பு பணியில் காவலர்களுடன் உதவி வரும் தன்னார்வலர்கள் என 115 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகியவற்றை வழங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    ×