என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சீர்காழி:
சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் குட்டியாண்டவர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குட்டியாண்டவர் கோவில் நடையும் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் தினமும் ஒருகால பூஜை மட்டும் நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை.
இந்தநிலையில் பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா பழனிவேல் (வயது 28) என்பவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட கோவில் உண்டியல் சில மாதங்களாக திறக்கப்படாததால், அதில் பல ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






