என் மலர்
நாகப்பட்டினம்
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிப்பாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை.
மேலும் வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந் தேதி(புதன்கிழமை) ஆடிப்பூரத்தை முன்னிட்டும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட 31-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை, முயல், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தில் கோடியக்கரை போஸ்ட்மேன் தெருவில் கேபிள் கம்பி வைத்து சுருக்கு வைத்து புள்ளிமானை பிடித்துள்ளனர் சுருக்கில் மாட்டிய புள்ளிமான் இறந்துவிட்டது.
தகவலறிந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் இறந்த ஆண் புள்ளிமானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரித்தார். விசாரணையில் மானை சுருக்கு வைத்து பிடித்த கோடியக்கரை ஆதிவாசி காலனியைச் சேர்ந்த கார்த்தி (வயசு 29), பொதுவிடைசெல்வன் (25), சலீம் (25) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இவர்களை பிடித்து விசாரித்து சுருக்கு வைத்து மானை பிடித்ததற்காக தஞ்சை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதித்தாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளின் உத்தரவை மீறி நாகை சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வதுடன், அதிவேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதை தொடர்ந்து தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி, நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் மோட்டார் ஆய்வாளர் பிரபு உள்பட அலுவலர்கள் நாகை பகுதிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் ஷேர்ஆட்டோக்களை சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற 18 ஷேர் ஆட்டோக்களுக்கு ரூ.200 ஆயிரம் வீதம் ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.போக்குவரத்து துறை நடைமுறை சட்டத்தை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிப்பது மற்றும், வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்தவர்கள் காரில் தங்களது பணப்பை உள்ளிட்ட உடைமைகளை வைத்துவிட்டு கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த நாகை மாவட்டம் பணங்குடி பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் அரவிந்த் என்பவர், அவர்களின் பணப்பை உள்ளிட்ட உடைமைகளை தனது இருசக்கர வாகனத்தில் மாட்டி கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவரை மறித்து வாக்குவாதம் செய்ததுடன், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ காட்சியால் நாகை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொது மக்களின் உடைமைகளை ஊர்க்காவல் படை வீரர் எடுத்துக் கொண்டு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினர் அத்துமீறி தாக்குவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதில் பல நேரங்களில் உயிர்ச்சேதங்களும், அதிக பொருட் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே ஆழ்கடலில் மீன்படித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக இன்று(திங்கட்க்கிழமை) இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதன்விபரம் வருமாறு:-
நாகப்பட்டிணம் நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீச்சாங்குப்பம் மீன்படி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி அக்கரை பேட்டை கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைபேட்டையை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 33), தீபன்ராஜ்(32), ஜீவா(32), மாறன்(55), அரசமணி(31), முருகானந்தம் (35) மோகன் (40), ராமச்சந்திரன்(47), ஆனந்த்(30) உள்ளிட்ட 10 பேர் ஆழ் கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தகதாக கூறி படகில் இருந்த மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் கொடூரமாக சுட்டனர்.
இதில் கலைக்செல்வனின் இடதுபக்க தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அடுத்த நொடி அவர் ரத்த வெள்ளத்தில் படகில் சாய்ந்தார். அதிர்ஷ்டவசமாக மற்ற 9 மீனவர்களும் காயமின்றி தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே நாகைக்கு அதே படகில் காயமடைந்த கலைச்செல்வனை அழைத்துக்கொண்டு கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்தனர். பின்னர் ஒரு ஆட்டோ மூலம் நாகப்பட்டிணம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி வேதாரண்யம் கடற்படை காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, தாங்கள் மீன்பிடித்த பகுதி தமிழக கடற்பகுதியாகும். இலங்கை கடற்படை அத்துமீறி எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினோம் என பீதியுடன் தெரிவித்தனர்.
வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 70). இவரது மனைவி நாகலட்சுமி (68). இவர் உடல்நிலை குறைவால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதே அரசு மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி (32) என்பவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகலட்சுமிக்கு பக்கத்தில் உள்ள படுக்கையில் பிரியதர்ஷினி இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுத்து அதில் உள்ள இரண்டு தாலி, குண்டுகளையும் எடுத்து பிரியதர்ஷினி மறைத்து வைத்துள்ளார்.
இதுகுறித்து ஜெகதீசன் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரியதர்ஷினி டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டார். அப்போது அவர் திருடிய தங்க செயினை ஒரு அடகு கடையில் விற்க முற்பட்டபோது போலீசார் பிரியதர்ஷினியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நாகை 2-வது கடற்கரை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு கார் நிற்பதை பார்த்து அருகில் சென்று சோதனை செய்தனர். காரில் சுவாமி படங்கள் அதிகம் இருந்தது. சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் சுவாமி படங்களை எடுத்து பிரித்து பார்த்த போது அதன் உள்ளே ரூ.60 லட்சம் மதிப்பில் 150 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த 8 பேரை பிடித்து நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் கஞ்சாவை வாங்கி அதை சிறிய பொட்டலமாக போட்டு போலீசாருக்கு சந்தேகம் வராதபடி சுவாமி படங்கள் விற்பனை செய்வது போல் உள்ளே வைத்து காரில் நாகை கொண்டு வந்து அதன் பின்னர் படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.
மேலும் 8 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நாகை கீச்சாங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த வீராகுமார் (22), வெளிப்பாளையம் சுப்ரமணிய பத்தர் காலனியை சேர்ந்த முகேஷ் (24), புதுப் பள்ளி மேற்கு வேட்டைகாரனிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நிவாஸ் (26), விழுந்த மாவடி தம்பிரான்குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருண் (23 ), காரைக்கால் டி.ஆர் பட்டினத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (26), ஆழியூர் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் (42), அந்தன பேட்டை புடவைகார தெருவை சேர்ந்த ஜெகபர் சாதிக் (36), சிக்கல் மேலவீதியை சேர்ந்த தியாகராஜன் (42) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 8 பேரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தியது தொடர்பாக மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
நாகை, வேதாரண்யம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடலோர காவல் குழும போலீசார் சோதனையும் மீறி கஞ்சா கடத்தப்பட்தாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி (வயது 27), சங்கர் (23) என்பதும் , அவர்கள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேனாதிபதி, சங்கர் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






