என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    அந்த வழியில் செண்பகராயநல்லூர்- மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை அங்கு வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. 

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அங்கு சுரங்கபாதை அமைக்க பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.

    இங்கு சுரங்க பாதை அமைக்கப்படாவிட்டால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

    கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அகல ரயில்பாதை திட்ட பணி முடிவடையும் நிலையில் இப்பகுதிக்கு சுரங்கபாதை அமைத்து தரவேண்டும்.

    இல்லையென்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வேதாரண்யம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் விரைவில் நடத்த உள்ளோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
    நாகையில் மருத்துவர்கள் அனுமதியின்றி விற்ற கருக்கலைப்பு மாத்திரைகளை சுகாதார துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகப்பட்டினம் புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து வாங்குவது போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, ரூ.390 மதிப்புள்ள கருக் கலைப்பு மாத்திரைகளை ரூ-.2500&க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார். 

    அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மருந்து வாங்குவது போல சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேளாங்கண்டி அருகே வேப்பமரத்தில் பொங்கி வடியும் பாலை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். 

    இவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் போன்ற திரவம் நுரையுடன் பொங்கி வழிந்து வருகிறது. இது இனிப்புச்சுவையுடன் உள்ளது.

    இதனை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி முதியவர்கள் கூறும் போது, 50 ஆண்டுகளுக்கு மேலான மரங்களில் பால் போன்ற திரவம் எப்போதாவது வடியும். 

    ஆனால், 2 ஆண்டுகளே ஆன சிறிய மரத்தில் பால் வடிவது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.
    கரியாப்பட்டினம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் தீயில் கருகி 4 ஆடுகள் பலியாகின.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் அருகே உள்ள மருதூர் வடக்கு கிராமம் குட்டியாபிள்ளைக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். மாற்றுத் திறனாளியான இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் கிராமத்தில் உள்ள இவரது கூரை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 4 ஆட்டு கிடா தீயில் கருகி பலியானது. 

    தீ மளமளவென பரவி அருகில் இருந்த வைக்கோல் போரில் பிடித்து முழுவதும் எரிந்த நிலையில் இரண்டு மாடுகள் தீக்காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    தகவல் அறிந்து வந்த வாய்மேடு தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

    இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட வருவாய் துறையினர் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.
    வேதாரண்யத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது கருப்பம்புலம் கிராமம், திரௌபதையம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது போலீசாரை கண்டதும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் அங்கிருந்த கருப்பம்புலத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 35), சரவணன் (38), பாரதிகுமார் (35), அருள்முருகன் (35) ஆகிய 4 பேரை கைது செய்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.23 ஆயிரம் ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள் மற்றும் சீட்டுகளை கைப்பற்றினர். 

    கைது செய்யப்பட்ட 4 பேரையும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    மேலும் தப்பியோடிய மருதூரைச் சேர்ந்த உத்திராபதி, வீரையன், கருப்பம்புலத்தைச் சேர்ந்த முத்து, தென்னம்புலத்தைச் சேர்ந்த லெனின் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை செய்து வழிப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி பசுபதி செட்டியார் தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம் 3 நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்து சிறப்புற்று விளங்குகிறது.
     
    இவ்வாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு சிவ வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வந்திருந்த 508 பெண்களுக்கு அவர்களது பூஜையுடன் ருத்ராட்சம் மற்றும் ப்ருத்வி லிங்கமும் கொடுக்கப்பட்டு அவர்களது கையால் பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் முதலில் விளக்கேற்றி கணபதி பூஜை தொடங்கி உலக அமைதிக்காகவும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மா சாந்தி அடையும் இந்திய மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி இந்தியா திரும்பவும் விவசாயம் செழிக்க வேண்டியும் அப்போது ப்ருத்வி லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் பெண்கள் மனமுருக பிரார்த்தனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை அதில் கலந்து கொண்ட பெண்கள் அவர்களது கையாலேயே ஆலயத்தின் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசர்ஜனம் செய்தனர். இதில் நாகை, நாகூர், தெத்தி, பால்பண்ணைசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 508 பெண்கள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ப்ருத்வி சிவலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
    நாகை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி, வேட்டைக்காரன் இருப்பு, விழுந்தமாவடி, காமேஷ்வரம், பூவைத்தேடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன.

    கஜா புயல் தாக்கத்தின் போது லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் அழிந்து போன நிலையில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களே மிஞ்சின.

    புயலுக்கு பிறகு மிஞ்சிய ஒரு சில தென்னை மரங்களையும் வண்டு தாக்கி கடுமையாக பாதித்தது. தற்போது தென்னை மரங்களில் வெள்ளை நோய் தாக்கியுள்ளது. வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கருக தொடங்கி விட்டன. மேலும் தென்னை மரங்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதால் தரம் குறைந்து தென்னை ஓலைகள் விழுந்து மரமும் பட்டுப்போய் விடுகிறது. தென்னை கீற்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
    வெள்ளை நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    எனவே வேளாண் துறை அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலையில் நடைபெற்றது. 

    இதில் பங்கேற்ற ஏராளமான கிறிஸ்தவர்களுக்கு அருட் தந்தைகள் நெற்றியில் விபூதி பூசினர். இந்த சிறப்பு திருப்பலியில் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து நாட்டு மக்கள் அமைதியாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 பள்ளி வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆணைப்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படியும் தஞ்சை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி அனுமதி சீட்டு தகுதிச் சான்று இன்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்களையும், அனுமதிக்கு புறம்பாக புதிய நபர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களில் சோதனை நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு 2 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையில் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    செண்பகராயநல்லூரில் ரெயில் சுரங்கபாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வழியில் செண்பக ராயநல்லூர் சனிசந்தை &மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. 

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. 

    இதனை கண்டித்து கரியாப் பட்டினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ராஜசிம்மன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கரியாப்பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கப் படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    நாகை அக்கரைப்பேட்டையில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்ட கடல் அட்டைகள், கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பழைய கட்டிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆனந்தம் (வயது 51) என்பவர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் நேரடி பார்வையில் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த வடிவேல், இளங்கோவன், வெங்கடேஷ் மற்றும் முதன்மை காவலர்கள் சுந்தரேசன், ஏங்கெல்ஸ், சசிகுமார், பாலு ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடை உள்ள சுறா மீனின் இறக்கைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை ஆகியவற்றையும் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.20 லட்சம் மதிப்பு பொருட்களை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    வேதாரண்யம் அருகே சாலை ஓரம் அம்மன் சிலையை யாரா வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்  தூண்டி காரன் கோவில் எதிரே சாலையின் தென்புறம் உள்ள குதிரை சிலையின் கீழே சுமார் அரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தினால் ஆன மாரியம்மன் சிலை ஒன்று இருந்தது. 

    இந்த அம்மன் சிலையை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை. வேதாரண்யம் இன்ஸ்பெக்டர்  சுப்ரியா  விசாரணை செய்தார்  பின்பு சிலையினை தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபால கிருஷ்ணன் எடுத்துச் சென்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைத்துள்ளார்.
    ×