என் மலர்
நாகப்பட்டினம்
வீட்டிற்கு செல்ல நடைபாதை வேண்டி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தம்பதியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் தாலுக்கா, தேவூர் கிராமத்தில் சுரேஷ்&அமுதா தம்பதியினர் தனது 2 குழந்தைகளோடு வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனிடையே, அப்பகுதியில் வசிக்கும் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய உறவினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் சுரேஷ் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையம், அறநிலையத் துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்து வந்துள்ளனர்.
ஆனால், புகார்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செந்தமிழ்செல்வி, நேற்று காலை அதே பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை ஆக்கிரமித்து கொட்டகை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, அக்குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்ட கலெக்டர், சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வேதாரண்யத்தில் பசுமாடு திடீரென இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் குமார் (51). இவர் கடற்கரையில் சாலையில் உள்ள தனது கொட்டகையில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 4ம் தேதி இரவு அங்கு பசுமாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று அதிகாலை மாட்டுக் கொட்டகைக்கு சென்று பார்த்த போது மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து குமார் வேதாரண்யம் போலீசில் புகா£¢ செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இறந்த மாட்டின் விலை ரூ.40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
வேதாரண்யத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்ட முதலியார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (53) என்பவர் இந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினாராம். இது பற்றி சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் போல் வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி வழக்கு பதிவு செய்து அசோகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்.
வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது.
பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனமுடைந்த பிரியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் பலத்த தீக்காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். புகாரின் பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நாகை ஆர்.டி.ஓ தனி விசாரணை செய்து வருகிறார்.
வேதாரண்யத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்படவுள்ள இடத்தில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு நடத்தினார்.
வேதாரண்யம்:
தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமையவுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசின் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை அனைத்து அடிப்படை வசதிகளுடன் நகர பகுதியில் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இத்தகவல் அறிந்த தமிழக முதல்வர் வேதாரண்யம் நகர பகுதியில் மூன்றடுக்கு கொண்ட கட்டிடத்தில் தங்கும் விடுதி, படிப்பகம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டுமான பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இவ்விடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் மாநில திமுக விவசாய அணி செயலாளருமான மதிவாணன் ஆய்வு செய்தார். ஆய்வுவின் போது வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர் ரம்யா, வழக்கறிஞர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அரசின் ஆதிதிராவிட மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ஆதிதிராவிட மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.
வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் இன்று 3-&வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றமாக இருப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி உள்ளனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலம். இங்கு அகத்திய மாமுனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். இங்கு வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.
இங்கு ருத்ரா அபிஷேகத்தை யொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு திரவியங்கள், பழவகைகள் வைத்தும், குடங்கள் வைத்தும் வேதமந்திரங்கள் ஓதப்பட்டது.
பின்பு குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நாகையில் சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலியானார்
நாகப்பட்டினம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியை சேர்ந்த ராமஜெயம் என்பவரது மகன் அருள்மொழி (வயது 35). அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் நாகை, திட்டச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அருள்மொழி, தனது மோட்டார் சைக்கிளில் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து திட்டச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
பாலையூர் அருகே எதிரே காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள், அருள்மொழி மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில் சாராய மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. சாராயம் கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அருள்மொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அருள்மொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்தி வந்து விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேரடி நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என நாகை மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் அவசரகதியில் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை, சுந்தர பாண்டியம், வாழக்கரை, மீனம்ப நல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் வெகுவாக முடங்கியுள்ளன.
வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அறுவடை எந்திரங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் கடந்த 2&ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட 186 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப் படாமல், நெல் மூட்டைகள் அனைத்தும் தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நிலவி வருகிறது.
கனமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இன்று 4&வது நாளாக கொள்முதல் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது.
மழை பாதிப்பு கருத்திற் கொண்டு அரசு கொள்முதல் நிலையங்களில் பணியை தொடங்கும் பொழுது தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முதலாவதாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும் மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தாளடி நெற்பயிர்கள் சாய தொடங்கி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கள்ளன் என படத்திற்கு பெயரிட்டு சமுதாய மக்களை இயக்குநர் கரு.பழனியப்பன் சீண்டுகிறார் என்று கூறி அவருக்கு முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் கூறியிருப்பதாவது:-
திரைப்பட இயக்குனரும், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ள கரு.பழனியப்பன் நடிப்பில் கள்ளன் என்ற பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் 4 குற்றவாளிகள் காவல்துறையால் கைகட்டி உட்கார வைக்கப்பட்டுள்ளதாக காட்சியமைக்கப்பட்டு, அந்த படத்துக்கு தமிழகத்தின் போர்க்குடி சமூகமாகவும், பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றாகவும் விளங்குகிற கள்ளர் இன மக்களின் சாதிப்பெயரை குறிக்கும் வகையில் கள்ளன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டு சாதிக்கலவரத்தை, வன்முறையை தூண்டும் வகையில் படக்குழுவினர் உள்நோக்கத்துடன் பெயர் வைத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தலைப்பை வைத்து பிரச்சினைகளை தூண்டி அதனால் வரும் நெகட்டிவ் பப்ளிசிட்டியால் படத்துக்கு விளம்பரம் தேடும் மலிவான செயல் திரைத்துறையில் சமீபத்தில் நடந்து வருகிறது.
இதற்காக கள்ளர் சமுதாய மக்களை சீண்டினால் அதற்கான எதிர்விளைவுகளை படக்குழுவினர் சந்திக்க நேரிடும். இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த படத்தின் தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என்று இந்த படக்குழுவினரை வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.
அன்னப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகா¤ல் அமைந்துள்ளது பூர்ண புஷ்கலம்பா சமேத அன்னப்ப சுவாமி கோயில். இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.
மாசி மாத அமாவாசையையொட்டி அன்னப்ப சுவாமிக்கு பால், சந்தனம், திரவியங்கள், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனைதொடர்ந்து நாகை மாவட்ட விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.
அறுவடை செய்து உளர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மதியம் நாகை மாவட்டத்தில் லேசான மழை பெய்ய தொடங்கி உள்ளது.






