என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொரோனா ஊரடங்கால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    பொறையாறு:

    தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை யொட்டி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான தடை காலம் அமலில் உள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோவில், தாழம்பேட்டை ஆகிய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது 118 விசை மற்றும் இழுவை படகுகளை பராமரிப்பு பணி செய்ய நாகப்பட்டினம், காரைக்கால், ஜெகதாபட்டினம் ஆகிய துறைமுகம் பகுதிகளுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். தற்போது வலை, பைபர் படகு என்ஜின்களை பழுது நீக்கம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கரை பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சென்று மத்தி, வாலை, கானாங்கெளுத்தி உள்ளிட்ட சிறிய வகை மீன்களை பிடித்துவந்து விற்பனை செய்து வந்தனர். தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது.

    சரக்கு வாகனங்களுக்கு மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை செய்யப்பட்டு இருப்பதால் கேரளா பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து மத்தி மீன்களை வாங்கி செல்வர். ஊரடங்கால் கேரளா வியாபாரிகள் வருவது இல்லை. இதனால் தரங்கம்பாடி, சந்திரபாடி பகுதி மீனவர்கள் மத்தி மீன்களை பிடிக்க கடலுக்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.

    இதனால் தினந்தோறும் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

    தொடர்ந்து அமலில் இருக்கும் ஊரடங்கு மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் தரங்கம்பாடி தாலுகா பகுதி மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேதனையில் உள்ளனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசார நிகழ்ச்சி நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியின் செயல் அலுவலர் குகன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியையொட்டி இளநிலை உதவியாளர் பாமா தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்தனர். வரிதண்டலர் அமுதா தலைமையில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஊசி மற்றும் தடுப்பூசி மருந்து குப்பி, பிரத்யேக பிரசார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை டிரைவர் மணிவண்ணன், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மயிலாடுதுறை நகரில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிவன் மற்றும் எமதர்மன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது சாலையில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சிலரை நிறுத்தி அவர்கள் கழுத்தில் எமதர்மன் சுருக்குகயிறு வீசுவது போன்று சுருக்கு கயிறு அணிவித்து கொரோனா பரவலால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து பேசியதோடு நடித்தும் காண்பித்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டுமானால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியில் சுற்றக் கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசங்களையும் போலீசார் வழங்கினர். இதேபோல பட்டமங்கலத்தெரு, பெரிய கடைத்தெரு சந்திப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த கலை நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்தர் தலைமை தாங்கினார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 180 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதேபோல தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த 2 முகாம்களிலும் சேர்த்து 350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டன. முகாமில் டாக்டர்கள் நந்தினி, யமுனா மற்றும் மருந்தாளுனர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு பணியாற்றினர்.

    இதற்கான ஏற்பாடுகள் வட்டார மருத்துவ அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
    திருவெண்காடு அருகே திருக்காட்டுப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா கண்டறியும் முகாம் நடந்தது.
    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே திருக்காட்டுப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா கண்டறியும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார். சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 96 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
    முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் பொறையாறு, தரங்கம்பாடி ஆகிய பகுதி கடைத்தெருவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பலர் முககவசம் அணியாமல் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தனர். .அவர்கள் காய்கனி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள், முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    சென்ற வருடம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் செண்டு பூ பயிரிடப்பட்டு இருந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், கீரங்குடி, சோதியகுடி, முதலை மேடுதிட்டு, மாதிரவேளூர், நாணல்படுகை, திட்டுபடுகை, சந்தப்படுகை ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் செண்டு பூ பயிரிட்டுள்ளனர்.

    பயிரிட்ட 45-வது நாள் முதல் அறுவடைக்கு தயாராகி 90-வது நாள் வரை தினந்தோறும் ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிலோ வீதம் விவசாயிகளுக்கு மகசூல் கொடுத்து வரும் இந்த செண்டு பூ இந்த வருடம் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விவசாயிகள் இந்த செண்டு பூவை தினந்தோறும் அறுவடை செய்து சீர்காழி, சிதம்பரம், கடலூர் புவனகிரி, மயிலாடுதுறை செம்பனார்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த வருடம் ஊரடங்கு காரணமாக செண்டு பூ விற்பனை பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பூக்களை அதிக அளவில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த செண்டு பூ தற்போது உள்ளூர் பகுதியில் ஒரு கிலோ ரூ.20-க்கு வாங்கவே மறுத்து வருகின்றனர்.

    இதனால் அறுவடை செய்த இந்த பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த செண்டு பூ விவசாயி விக்னேஸ்வரன் கூறுகையில், சென்ற வருடம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் செண்டு பூ பயிரிடப்பட்டு இருந்தது. சென்ற வருட கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் இந்த வருடம் அச்சத்தில்  வெறும் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள சில கிராமங்களில் மட்டுமே செண்டு பூ பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் இந்த செண்டு பூக்களை வியாபாரிகளிடம் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தினந்தோறும் அறுவடை செய்யப்பட்டு வரும் பூக்களை விவசாயிகள் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல இருசக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் தேவைப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் இ-பாஸ் பெற்று விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செண்டு பூ எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு இருசக்கர வாகனங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.

    அப்படி செய்தால்தான் செண்டு பூக்களை வெளியூர்களுக்கு எடுத்துச்சென்று ஓரளவுக்காவது விற்பனை செய்யும் முடியும். எனவே செண்டு பூ விவசாயிகளின் நலன் கருதி தோட்டக் கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விதி விலக்கு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.

    6 கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின் பேரிலும், கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் பரிந்துரையின் பேரிலும், கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த நல்லவிநாயகபுரம், எருக்கூர், உமையாள்பதி, மாதிரவேளூர், அரசூர், திருமுல்லைவாசல் ஆகிய 6 கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ஆறு கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. எனவே ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் சேராதபடி தூய்மைப்படுத்தவும், அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தெளித்தல், ஹைட்ரோ குளோரைடு கரைசல் தெளித்தல் என்பன உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களை 100 சதவீதம் முக கவசங்கள் அணிந்திட வலியுறுத்தி, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்திட வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட 6 கிராமங்களில் தடுப்பு சுவர் அமைத்து எச்சரிக்கை பதாகை அமைக்க வேண்டும். முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி, கண்காணித்து மக்கள் சேவை ஆற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட 6 கிராமங்களில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொரோனா நோய் தடுக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார்.
    திருவெண்காடு:

    சீர்காழி தாசில்தார் ஹரிதரன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிரு‌‌ஷ்ணன், மணிமாறன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் போலீசாருடன் இணைந்து நேற்று திருவெண்காட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்து கூறினார். சீர்காழி தாலுகா முழுவதும் முக கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    திருக்கடையூர் அருகே குடும்ப பிரச்சினையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் மடப்புரம் மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). விவசாயியான இவரது மனைவி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அபிதா கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் மனமுடைந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களில் டீ விற்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும், நடந்தும் சென்றும் டீ விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

    அதன்படி மயிலாடுதுறை நகரத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் சென்று டீ விற்பனையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் உள்பட 16 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கொரோனா விதிமுறையை மீறியதற்கான அபராத தொகையை செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், பெரம்பூர், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களி்லும், நடந்து சென்றும் டீ விற்பனையில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள் உள்பட 23 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஆக மொத்தம் ெகாரோனா விதிமுறைகளை மீறி டீ விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குத்தாலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.முருகப்பா தலைமை தாங்கினார். முகாமை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மதன்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்தும், நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராவிஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×