என் மலர்
செய்திகள்

கொள்ளிடம் பகுதியில் செண்டு பூக்கள் விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், கீரங்குடி, சோதியகுடி, முதலை மேடுதிட்டு, மாதிரவேளூர், நாணல்படுகை, திட்டுபடுகை, சந்தப்படுகை ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் செண்டு பூ பயிரிட்டுள்ளனர்.
பயிரிட்ட 45-வது நாள் முதல் அறுவடைக்கு தயாராகி 90-வது நாள் வரை தினந்தோறும் ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிலோ வீதம் விவசாயிகளுக்கு மகசூல் கொடுத்து வரும் இந்த செண்டு பூ இந்த வருடம் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் இந்த செண்டு பூவை தினந்தோறும் அறுவடை செய்து சீர்காழி, சிதம்பரம், கடலூர் புவனகிரி, மயிலாடுதுறை செம்பனார்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த வருடம் ஊரடங்கு காரணமாக செண்டு பூ விற்பனை பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பூக்களை அதிக அளவில் வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த செண்டு பூ தற்போது உள்ளூர் பகுதியில் ஒரு கிலோ ரூ.20-க்கு வாங்கவே மறுத்து வருகின்றனர்.
இதனால் அறுவடை செய்த இந்த பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த செண்டு பூ விவசாயி விக்னேஸ்வரன் கூறுகையில், சென்ற வருடம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் செண்டு பூ பயிரிடப்பட்டு இருந்தது. சென்ற வருட கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் இந்த வருடம் அச்சத்தில் வெறும் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள சில கிராமங்களில் மட்டுமே செண்டு பூ பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் இந்த செண்டு பூக்களை வியாபாரிகளிடம் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் அறுவடை செய்யப்பட்டு வரும் பூக்களை விவசாயிகள் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல இருசக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் தேவைப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் இ-பாஸ் பெற்று விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செண்டு பூ எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு இருசக்கர வாகனங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
அப்படி செய்தால்தான் செண்டு பூக்களை வெளியூர்களுக்கு எடுத்துச்சென்று ஓரளவுக்காவது விற்பனை செய்யும் முடியும். எனவே செண்டு பூ விவசாயிகளின் நலன் கருதி தோட்டக் கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விதி விலக்கு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்.






