என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொரோனா வைரஸ் தொற்றால் ரேஷன் கடை ஊழியர் மற்றும் அவரது மனைவி பலியான சம்பவம் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தென்னலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). இவர், திருவெண்காடு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தரமூர்த்தியின் மனைவி கார்த்திகாவும்(38) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதியருக்கு 13 வயதில் பிரியங்கா என்ற மகளும், 10 வயதில் நந்தகுமார் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட சித்தர்காடு பகுதியை சேர்ந்த இளையராஜா மனைவி ராஜகுமாரி(வயது23) தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததாக சி.பி.ஐ (எம்.எல்) கட்சியினர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாவட்ட செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் வீரசெல்வம், மகாலிங்கம், சிலம்பரசன், ஆனந்தன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
    சீர்காழி:

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகின்றது, இதில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் ஓவியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. மேலும் சாலைகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்பட்டன, இதனை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பார்வையிட்டு கடும் வெயிலிலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஓவியம் வரையும் ஓவியர்களை பாராட்டினார்.
    கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பனங்காட்டான்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 2 டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டு 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மறித்து மணல் ஏற்றி வந்த 2 பேரை பிடித்து டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மணல்மேடு, குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையன் மகன் சிலம்பரசன் (வயது 27) மற்றும் சீர்காழி வள்ளுவக்குடி கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரவின் (21) என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வீதிகளில் கொண்டு வரப்படும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளிடம் பெற்று கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மீன்கடையில் மறைத்து வைத்து மீன் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடை உரிமையாளர் கடையின் பின்புறம் மறைத்து வைத்து மீன் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்ட மீன்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
    மயிலாடுதுறை அருகே கள்ள சாராயம் குடித்த 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியது யார்? அது வி‌ஷ சாராயமா? அல்லது வேறு ஏதுமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வள்ளாலகரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 38), குப்பன்குளத்தை சேர்ந்தவர் கந்தசெல்வம் (42).

    தற்போது ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் இவர்களால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் திருட்டுதனமாக காய்ச்சப்பட்ட கள்ள சாராயத்தை குடித்தனர். இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர், கருப்பன், வீரமணி ஆகியோரும் சாராயம் குடித்தனர்.

    இந்நிலையில் பிரபு, கந்தமுருகனுக்கு திடீரென கண் பார்வை மங்கியது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் இறந்தனர். மேலும் அவர்களுடன் சாராயம் குடித்த சுந்தர் உள்ளிட்ட 3 பேரும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது பற்றி மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியது யார்? அது வி‌ஷ சாராயமா? அல்லது வேறு ஏதுமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த எடமணல் கிராமம் பெரியதெருவை சேர்ந்த வை.ஆனந்த்(39) மற்றும் அவரது நண்பர்கள் வருசபத்து பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55), எடமணல் பகுதியை சேர்ந்த இன்பராஜ் (40), பிரகாஷ் (28) ஆகியோர் ஆனந்த் என்பவர் வீட்டில் எரிசாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், நடராஜன் கொண்ட குழுவினர் ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள பருத்திக்கொல்லையில் ஊரல் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அதன்படி அங்கு சென்ற போலீசார் எரிசாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், பானை ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை அருகே தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைமையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த சிலர் செயல்பட தொடங்கியுள்ளதாக உளவுத்துறைக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட 7 பேரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இதுதொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால், முகமது ஆசிக் மீது சென்னை பூந்தமல்லி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    இதனையடுத்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் முகமது ஆசிக்கை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது ஆசிக் மயிலாடுதுறை அருகே நீடூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை மாவட்ட அதிரடிப்படை போலீசார் உதவியுடன் நீடூருக்கு சென்று முகமது ஆசிக்கை நள்ளிரவில் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமது ஆசிக் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடூரில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட முகமது ஆசிக்கை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்றனர்.
    பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
     திருவெண்காடு:

    பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவரும், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சசிக்குமார் வரவேற்றார். இதில் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பூம்புகார் தொகுதியில் முதல் முறையாக 18 வயதுக்கு மேல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளேன். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்றார்.இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் துரைகார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி நன்றி கூறினார். முகாமில் 286 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று கடந்த 7-ந் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவை செயல்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில் தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை மேற்கொள்ள மயிலாடுதுறை அருண் பிரியா நர்சிங் ஹோம், கொள்ளிடம் விஷ்ணு மருத்துவமனை ஆகிய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா தொற்று சிகிச்சைக்கான செலவினங்கள் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்கண்ட 2 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    கொரோனாவை தடுக்கும் வகையில் மயிலாடுதுறையில், சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் 7 நாட்களுக்கு தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு விதிமுறைகளை மீறி மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வரை தேவையின்றி சுற்றித்திரிந்த 3 கார்கள் உட்பட 209 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

    2-வது நாளான நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில் பட்டமங்கலத்தெரு, மகாதனத்தெரு, காந்திஜி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

    அதேபோல போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் சாைலகளில் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மோட்டார் சைக்கிளில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனாலும் நேற்று மட்டும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 66 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மயிலாடுதுறையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா வார்டில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு மகளிர் விடுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து சித்த மருத்துவ மூலிகைகளையும், மருந்துகளையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான படுக்கைகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 50 படுக்கைகள் உள்ளன. கொரோனா தொற்று ஆரம்ப அறிகுறி உள்ளவர்கள் இங்கே அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. சில குறைபாடுகள் விரைவில் களையப்பட்டு ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜன் பிளான்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் அதில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 28 செவிலியர்களுக்கு கொரோனா நோய் பரவல் ஏற்பட்டதாக அறிந்தேன். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். செவிலியர் பற்றாக்குறையை போக்க புதிதாக செவிலியர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

    அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அரசு டாக்டர்கள், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    சீர்காழி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது தலைமை டாக்டர் பானுமதியிடம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    அப்போது கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என தலைமை டாக்டர், அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்து வரும் துரித நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க நிலையிலேயே வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத அளவிற்கு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    ஆய்வின்போது தாசில்தார் ஹரிஹரன், சீர்காழி தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் நேற்றுஅமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் டாக்டர்களிடம் மருத்துவ மனையில் அடிப்படை வசதிகள், அங்கு வரும் நோயாளிகளின் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர.் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80 படுக்கை வசதிகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ×