என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மோட்டார்சைக்கிளில் சென்னை பை பாஸ் சாலையில் சென்றனர்.
    • அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்னை பை பாஸ் சாலையில் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுமதி உடல் நசுங்கி உயிரிழந்தார்.அவரது கணவர் வேலாயுதம் படுகாயம் அடைந்தார்.அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காலையில் வந்து பார்த்தபோது 3 ஆட்டு குட்டிகள் உட்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தன .
    • அங்கு வந்த அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதித்து மர்ம விலங்கு என்ன என்பதை தேடி வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி, செப்,25-

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒபிலேசன்(வயது 45). இவர் 24 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் 24 ஆடுகளையும் விட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

    காலையில் வந்து பார்த்தபோது 3 ஆட்டு குட்டிகள் உட்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தன .

    ஒரு ஆட்டை மட்டும் மர்ம விலங்கு எடுத்து சென்றுள்ளது . ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓபிலேசன் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதித்து மர்ம விலங்கு என்ன என்பதை தேடி வருகின்றனர். மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து சுமார் எட்டு ஆடுகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

    • தனிப்படை போலீசார் நேற்று கல்லாவி அடுத்த ஓலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் வந்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார் நேற்று கல்லாவி அடுத்த ஓலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினர்.அந்த கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கடையின் உரிமையாளர் ஞானவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஊத்தங்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர்.

    அந்த கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் கடையின் உரிமையாளர் நாராயணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மற்றொரு மளிகை கடையில் போதை பொருட்கள் விற்றதாக கல்லூர் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து மொத்தம் 32 கிலோ குட்கா மற்றும் 21 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான அவர்கள் 3 பேரையும் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். 

    • லாரி, வேன்களில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
    • புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் ஆடுகள் விற்பனை பெரும் சரிவையே சந்தித்து வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெரும் அதில் ஆட்டுச்சந்தை ஒரு பகுதியில் நடைபெறுவது வழக்கம்.

    இங்கு விழா காலங்களில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடு, மாடு, கோழிகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து அந்த பணத்தைக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிங்களில் இருந்து லாரி, வேன்களில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் ஆடுகள் விற்பனை பெரும் சரிவையே சந்தித்து வந்தது.

    இந்நிலையில் இன்று விற்பனைக்காக விவசாயிகள் அதிக அளவு ஆடுகளை கொண்டு வந்தனர். ஆனால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் ஏமாற்றுடன் தங்களது ஆடுகளை திரும்ப வீட்டிற்கு பிடித்து சென்றனர்.

    • வாகன சோதனையில் வேன் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
    • அந்த வேனில் ரூ.6.76 லட்சம் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,செப்.25-

    ஓசூர் சிப்காட் போலீசார் பேகைப்பள்ளி ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் நடத்திய வாகன சோதனையில் வேன் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அந்த வேனில் ரூ.6.76 லட்சம் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மஹேந்திரசிங் (வயது 35), பட்டேல்சிங் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒசூர் இந்து அரசு உயர்நிலைப்பள்ளி பல்வேறு பள்ளி மாணவர்கள் இடையே ஓசூர் வடக்கு சரக அளவிலான கபடி போட்டி நடத்தியது.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமார் , ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி அருகே உங்கட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 250 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒசூர் இந்து அரசு உயர்நிலைப்பள்ளி பல்வேறு பள்ளி மாணவர்கள் இடையே ஓசூர் வடக்கு சரக அளவிலான கபடி போட்டி நடத்தியது.

    இந்த போட்டியில் உங்கட்டி பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்து பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் , பிடித்து சாதனை படைத்து, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமார் , ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    இந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றால் மாநில அளவிலான கபடி போட்டிக்கு இந்த மாணவர்கள் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போர்வையினை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 2023-24 ம் ஆண்டில் மரக்கன்றுகள் பணி மேற்கொள்ள உரிய முன்னோடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட அளவிலான செயலாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் நேற்று வண்டலூர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயணி முன்னிலை வகித்தார்.

    இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது:-

    பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போர்வையினை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில் விவசாய நிலம், தரிசு நிலம், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், நிறுவன பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள், தரம்குன்றிய காப்புகாட்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு 9 லட்சத்து 86 ஆயிரத்து 5 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு மரக்கன்று நடும் பணிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. 2023-24 ம் ஆண்டில் மரக்கன்றுகள் பணி மேற்கொள்ள உரிய முன்னோடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட அளவிலான செயலாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி வன பாதுகாவலர்கள் வெங்கடபிரசாத், ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மகேந்திரன், ரவி, சீதாராமன், முருகேசன், சுகுமார், சோமசேகர், வீரமணி, குமார், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், ராமசந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளை உதவி வனப்பாதுகாவலர்கள் வெங்கடேஷ்பிரபு, ராஜமாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,செப்.25-

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், வன உயிரின வாரவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவிலான ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை உதவி வனப்பாதுகாவலர்கள் வெங்கடேஷ்பிரபு, ராஜமாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் தேவானந்தன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மகேந்திரன், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகளில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வண்டலூர் அறிஞர் அண்ணா தேசிய பூங்காவில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அல்போன்சா மேரி, திவ்யலட்சுமி, ரமேஷ், ஹசினாபேகம், சாந்தி, பிரதீபா, கிரேஸிராணி, செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

    • எதற்காக இங்கிருந்து மண் அள்ளுகிறாய் என்று ராஜா கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரமேஷ் ரெட்டி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள கோவில் நிலத்தில் ரமேஷ் ரெட்டி என்பவர் மண் அள்ளி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

    எதற்காக இங்கிருந்து மண் அள்ளுகிறாய் என்று ராஜா கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம்

    அடைந்த ரமேஷ் ரெட்டி ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த ராஜா தந்த புகாரின்பேரில் தளி போலீசார் ரமேஷ் ரெட்டியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரமேஷ் ரெட்டி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    போலீசார் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சத்யாவுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது.
    • முதல்-அமைச்சர் உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சூளாமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கொட்டாயை சேர்ந்தவர்கள் சகாதேவன்-லட்சுமி தம்பதி. இவர்களுக்கு, 17 வயதில் மஞ்சு என்ற மகனும், சத்யா என்ற 14 வயது மகளும் உள்ளனர்.

    இவர்களில் சத்யா சூளாமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். மேலும் பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் பள்ளி அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாநில அளவிலான, 42 மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றார். இதைத் தவிர கடந்த, 2018-ம் ஆண்டு 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், கலந்து கொண்டு மாநில அளவில் ஏழாவது இடம் பிடித்தார். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று, 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சத்யாவிற்கு முதுகுபகுதியில் திடீரென்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு, சேலம் தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்தனர். அதில், சத்யாவுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சத்யாவுக்கு கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை, 15-ந் தேதி புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இரண்டரை மாதங்கள் சிகிச்சைக்கு பின்கடந்த, 2021-ம் செப்டம்பர் மாதம் அவர் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் மாணவி சத்யா நடக்க சிரமப்பட்டார். அவருக்கு அதே ஊரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் சத்யாவுக்கு நடைபயிற்சி, அளித்து வந்த நிலையில் கடந்த, ஜூலை மாதம் முதல் சத்யாவுக்கு மீண்டும் முதுகுவலி ஏற்பட்டது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பரிசோதித்த போது மீண்டும் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.

    தற்போது சத்யாவுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய், மூன்றாவது நிலையை எட்டியதால் மருத்துவ செலவிற்கு, 30 லட்சம் ரூபாய் ஆகும் எனவும், இதில், 5 லட்சம் ரூபாய் சத்யா தரப்பில் கட்டினால், 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் நிலத்தை அடகு வைத்து, 1 லட்சம் ரூபாய் கட்டினார்கள். மேலும் தனது மகளை காப்பாற்ற தமிழக முதல்-அமைச்சர் உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பள்ளிச் செல்லா 6 மலைவாழ் குழந்தைகளை கண்டறிந்தனர்.
    • ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், கெலமங்கலம் ஒன்றியம், ஆர்.குட்டூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று, தற்போது ராயக்கோட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்த பள்ளிச் செல்லா 6 மலைவாழ் குழந்தைகளை கண்டறிந்தனர்.

    அவர்களை, கெலமங்க லம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்சேட்டு, பயிற்றுனர் வேடி யப்பன், பள்ளி தலைமையாசிரியர்களான சையத் ஜலால் அகமத் மற்றும் சித்ரகலா மற்றும் ஆசிரியர்களான மாதேஷ், சாரதா உள்ளிட்டோர் ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

    • அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.
    • மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜா என்ற ராஜி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி வரவேற்றார்.

    பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன் ,அசோகா, மஞ்சுநாத் மற்றும் மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் அன்புக்கரசு, கொள்கை முரசு கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மதன், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மற்றும் புருஷோத்தம ரெட்டி, லட்சுமி ஹேமகுமார் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள்,கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் நன்றி கூறினார்.

    ×