என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 9.86 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம்- கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
- பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போர்வையினை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 2023-24 ம் ஆண்டில் மரக்கன்றுகள் பணி மேற்கொள்ள உரிய முன்னோடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட அளவிலான செயலாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல்-அமைச்சர் நேற்று வண்டலூர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயணி முன்னிலை வகித்தார்.
இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது:-
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பசுமை போர்வையினை 23.27 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் விவசாய நிலம், தரிசு நிலம், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், நிறுவன பகுதிகள், அரசு அலுவலக வளாகங்கள், தரம்குன்றிய காப்புகாட்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு 9 லட்சத்து 86 ஆயிரத்து 5 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு மரக்கன்று நடும் பணிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. 2023-24 ம் ஆண்டில் மரக்கன்றுகள் பணி மேற்கொள்ள உரிய முன்னோடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட அளவிலான செயலாக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி வன பாதுகாவலர்கள் வெங்கடபிரசாத், ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மகேந்திரன், ரவி, சீதாராமன், முருகேசன், சுகுமார், சோமசேகர், வீரமணி, குமார், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், ராமசந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






