என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் 15 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், எம்.ஆர்.பி., செவிலியர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலைப்பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிற அரசாணைகள் 115, 139, 152-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வெங்கடாசலபதி, கால்நடைத் துறை செல்வகுமார், வட்டச் செயலாளர் மணி, குடிநீர் வடிகால் வாரியம் பெரியசாமி, பெருமாள், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.
    • பட்டாசு வெடித்தும், தீ பந்தம் கான்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது. இந்த யானைகள் நேற்றிரவு வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.

    பின்னர் அந்த யானைகள் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் என்பவரின் 10 ஏக்கர் விளைநிலத்திற்குள் யானைகள் புகுந்தது.

    அங்குள்ள தக்காளி தோட்டத்தை நாசம் செய்தது. பின்னர் விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை மிதித்து துவம்சம் செய்தது.

    இது குறித்து வனசரக பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தீ பந்தம் கான்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.
    • அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மாதேவி (வயது 35).

    இவர் தனது தங்கையின் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது ஒரு கூடையில் நிலக்கடலை எடுத்து சென்றுள்ளார்.

    வழியில் குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் (40) என்ற ஆசாமி மாதேவியிடம் தகராறு செய்து அவர் கொண்டு சென்ற நிலக்கடலையை பறித்துள்ளார்.

    இதை கண்டித்த மாதேவியை தரக்குறைவாக பேசிய குமார் அவரது ஆடையை கிழித்தும் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாதேவி கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

    இதேபோல காவேரிபட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ரோந்து சென்றபோது காவேரிபட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்ட சாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்த நரேன் (எ)இளமாறன் (32) என்பவரை கைது செய்தார்.

    • கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தனிடம் ரூ.500 பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டான்.
    • கைது செய்து பணம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள எடவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 28). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தனிடம் ரூ.500 பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டான்.

    இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அப்போது ஆனந்தனிடம் பணம் பறித்தது தேன்கனிக்கோட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பது தெரிய வந்தது.

    அவரை கைது செய்து பணம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.
    • பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பத்மா (வயது 35).இவர்களது மகன் வினித் (10).

    3 பேரும் காரில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாமிபள்ளம் என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது.

    இதில் பத்மா, வினித் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து ராஜேஷ்சூளகிரி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

    • சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
    • பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சாலூர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு நேற்று ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது60), இவரது மனைவி நாகமணி (55) ஆகிய இருவரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அருகே சிவன்கோவில் அருகில் வந்த போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பஸ்சின் சீட்டில் அமர்ந்து இருந்த கிருஷ்ணமூர்த்தி முன்னால் இருந்த கம்பியின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
    • பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தாழ்த்த ப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.

    அவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை யை உயர்த்துவதற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் இணையத்திலிருந்து இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும், அல்லது சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண்.26-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலார் மதியழகன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில செயலாளர் ஜெயந்தி தொடக்க உரை யாற்றினார்.

    உண்ணா விரத போரா ட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழி யர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    60 சதவீதத்திற்கு மேல்உள்ள காலிப்பணி யிடங்களை போர்க்கால அடிப்படை யில் நிரப்பிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழி யர்களைக் கொண்டு நடத்த வேண்டும்.

    சத்துணவு திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். சத்துணவு அமை ப்பாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாள ருக்கு பணிக்கொடை 5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்கிட வேண்டும்.

    பணிக்காலத்தில் இயற்கை மரணமடையும் சத்துணவு ஊழியர்களின் குடும்ப ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கிட வேண்டும். பிரதி மாதம் ஏற்கனவே வழங்கியதைப் போல மாணவர்களின் உணவூட்டு செலவினம் மாதம் முதல் வாரத்தில் வழங்கிட வேண்டும்.

    ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய அனைத்து பலன்களும் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    ஓசூர்,

    ஓசூரில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா மற்றும் ஓசூர் கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஓசூர் அருகே கொரட்டகிரி என்ற கிராமத்தில் ஜல்லி கிரஷர்கள் இயங்கி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது, ஒருசிலரது தூண்டுதல் பேரில், கிராமத்திற்குள் லாரிகள் வந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் கடந்த 8 மாதங்களாக எங்களின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டது. எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சர், அதிகாரிகள் தலையிட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், நாங்கள் கோர்ட்டை அணுகினோம்.

    நீதிமன்ற உத்தரவுப்படி, கொரட்டகிரி சாலையை திறந்து லாரிகளை கிராமத்திற்குள் இயக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 8 மாதங்களாக கிரஷர்கள் இயங்காததால், ரூ.60 கோடி அளவில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. 40,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டிலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கடந்த 1 ஆண்டில் அதிக ராயல்டியாக ரூ.98 கோடி நாங்கள் தான் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த தொழிலை சட்ட விதிகளுக்குட்பட்டுதான் செய்து வருகிறோம்.

    லாபத்தை எதிர்பார்க்காமல், சேவை செய்து வருகிறோம். தடை நீங்கி கொரட்டகிரி கிராமத்திற்கு லாரிகள் செல்ல சாலை திறந்து விடப்படாவிட்டால், அடுத்த கட்டமாக, மாவட்டம் முழுவதும் அனைத்து கிரஷர்களையும் மூடி, வேலை நிறுத்தம் செய்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது, சங்க துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த், நிர்வாகி சர்வேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 5,400 பேருக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • கண், மூக்கு, தொண்டை உள்பட, 12 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக அரசு போக்குவரத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட, 15 பணிமனைகளில் உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் உள்பட 5,400 பேருக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி கிருஷ்ணகிரி நகர பணிமனையில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தருமபுரி மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    பயிற்சி மருத்துவ அலுவலர் விமல், மருத்துவர்கள் சாரதா, ப்ரீத்தி ரென்சி, கோவிந்தராஜ் சுரேஷ் பார்த்திபன் உள்பட, 22 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர், போக்குவரத்து பணியாளர்களுக்கு, ரத்த அழுத்தம், சிறுநீரகம், கண், மூக்கு, தொண்டை உள்பட, 12 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    இதில், தருமபுரி மண்டலத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், 750 பேர் பயனடைவார்கள். நேற்று நடந்த சிறப்பு முகாமில், 250 பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்தனர்.

    மீதமுள்ள அனைவருக்கும் மற்றொரு நாளில் முகாம் நடத்தப்படும் எனவும், மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக கிளை மேலாளர் பார்த்திபன், போக்குவரத்து மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி, சிவகுமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மலை இருந்தால்தான் மழை வரும். மழை பெய்தால்தான் விவசாயம் நடக்கும். விவசாயம் நடந்தால்தான் உணவு கிடைக்கும்.
    • இயற்கையாக கிடைக்கும் எல்லாவற்றையும் அழித்து விட்டால் எதிர்காலத்தில் உணவுக்கு கையேந்து நிலை ஏற்படும்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:-

    இப்பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய அரசு தற்போது 3,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக தெரிகிறது.

    இது விண்வெளி தொழில்நுட்ப பணிகளுக்காகவும், ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    இப்படித்தான் ஏற்கனவே பல நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்கினர். சொகுசாக காரில் சென்றால் போதுமா? விளை நிலங்களை அழித்துவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன வழி?

    மேலும் இங்கிருந்து நிலங்களை கையகப்படுத்தி விட்டு வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்களுக்கு வழங்குகின்றனர்.

    தற்போது நாம் போராடிய பிறகு இங்கு தொடங்கப்படும் நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடுப்போம் என்று அறிவிக்கின்றனர்.

    எனவே நமது போராட்டம் வெற்றி பெற்றதாகத்தான் கூற வேண்டும். கிருஷ்ணகிரியில் இயற்கை உருவாக்கிய மலைகள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

    மலை இருந்தால்தான் மழை வரும். மழை பெய்தால்தான் விவசாயம் நடக்கும். விவசாயம் நடந்தால்தான் உணவு கிடைக்கும்.

    இயற்கையாக கிடைக்கும் எல்லாவற்றையும் அழித்து விட்டால் எதிர்காலத்தில் உணவுக்கு கையேந்து நிலை ஏற்படும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    பின்னர் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    • இந்துமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (வயது 20).

    இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது.

    கடந்த ஓராண்டிற்கு மேலாக தம்பதியினருக்கும் குழந்தை இல்லாமல் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 20-ம் தேதி இந்துமதி வீட்டில் தனியாக இருந்தபோது எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

    இதை கண்ட உறவினர்கள் இந்துமதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அங்கு இந்துமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணமான ஓராண்டிலேயே புதுப்பெண் குழந்தையில்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×