என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்த காட்சி.
நீதிமன்ற உத்தரவுப்படி சாலையை திறக்க வேண்டும்: ஓசூரில் கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி
- 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ஓசூர்,
ஓசூரில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா மற்றும் ஓசூர் கிரஷர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஓசூர் அருகே கொரட்டகிரி என்ற கிராமத்தில் ஜல்லி கிரஷர்கள் இயங்கி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, ஒருசிலரது தூண்டுதல் பேரில், கிராமத்திற்குள் லாரிகள் வந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் கடந்த 8 மாதங்களாக எங்களின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டது. எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சர், அதிகாரிகள் தலையிட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், நாங்கள் கோர்ட்டை அணுகினோம்.
நீதிமன்ற உத்தரவுப்படி, கொரட்டகிரி சாலையை திறந்து லாரிகளை கிராமத்திற்குள் இயக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 8 மாதங்களாக கிரஷர்கள் இயங்காததால், ரூ.60 கோடி அளவில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. 40,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கடந்த 1 ஆண்டில் அதிக ராயல்டியாக ரூ.98 கோடி நாங்கள் தான் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த தொழிலை சட்ட விதிகளுக்குட்பட்டுதான் செய்து வருகிறோம்.
லாபத்தை எதிர்பார்க்காமல், சேவை செய்து வருகிறோம். தடை நீங்கி கொரட்டகிரி கிராமத்திற்கு லாரிகள் செல்ல சாலை திறந்து விடப்படாவிட்டால், அடுத்த கட்டமாக, மாவட்டம் முழுவதும் அனைத்து கிரஷர்களையும் மூடி, வேலை நிறுத்தம் செய்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது, சங்க துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த், நிர்வாகி சர்வேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.






