என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.
    • அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மிடுகரப்பள்ளியில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி, அங்குள்ள பசவேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.

    காலையில் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.விழாவில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாநகராட்சி வரிவிதிப்பு கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் சாக்கப்பா மற்றும் முக்கிய பிரமுகர்களும், ஓசூர், மத்திகிரி மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்தும், கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் வழிபாடு நடத்தினர்.விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும்.
    • மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் அறிவியல் மையம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மா, தென்னை விவசாயிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    தென்னை விவசாயிகள் பேசியதாவது:-

    தென்னை பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி உற்பத்தியை அதிகரித்து வழங்க வேண்டும். தென்னையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை, போச்சம்பள்ளி சிப்காட்டில் தொடங்கிட வேண்டும். தென்னை மரங்களுக்கு மருந்து தெளிக்க தெளிப்பான்கள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் பதில் அளித்து பேசியதாவது:-

    மா இழப்பீடு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும். மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் போலி பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தடுக்க, வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும். பருவமற்ற காலங்களில் பயிரிப்படும் மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கருத்துரு தயார் செய்து, அனுப்ப தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான சிவக்குமார், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி சுந்தர்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, விவசாய பிரதிநிதி மற்றும் தென்னை, மா விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • வயிற்று வலி காரணமாக கடுமையாக அவதியடைந்து வந்தார்.
    • மனவேதனையில் இருந்த விஜய் பாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சத்திரம் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது23).

    இவர் வயிற்று வலி காரணமாக கடுமையாக அவதியடைந்து வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த விஜய் நேற்று பாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த தளி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
    • சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலிங்கவரம் அருகே பொன்னல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் சக்திவேல் (வயது 29).

    அதே பகுதியைச் சேர்ந்த திம்மராஜ் (26), செந்தில்குமார் (32) ஆகியோர் சக்திவேலின் நண்பர்கள் ஆவார்.

    சம்பவத்தன்று சக்திவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார். இதனை சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த திம்மராஜ் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனை தடுக்க வந்த செந்தில்குமாரையும் அவர் தாக்கினார். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் அலறி துடித்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சக்திவேல் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திம்மராஜை கைது செய்தனர்.

    • அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள ெதாகரபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது80). இவர் நேற்று அப்பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 ஆயிரத்து 838 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது
    • தென்னை மரங்களில் கருத்தலைப்புழுவின் சேதம் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜனவரி முதல் மே மாதம் வரை தாக்குதல் அதிகமாக காணப்படும்.

    கிருஷ்ணகிரி,

    தென்னையில் கருத்தலைப்புழு கட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 838 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் கருத்தலைப்புழுவின் சேதம் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜனவரி முதல் மே மாதம் வரை தாக்குதல் அதிகமாக காணப்படும்.

    இதற்கு கோடையில் நிலவும் வெப்ப நிலை மற்றும் காற்றின் ஈரப்பதமே காரணம் ஆகும். கருத்தலைப்புழுக்கள் அனைத்து வயதில் உள்ள தென்னை மரங்களையும் தாக்குகிறது. இதனால் காய்ப்பு திறன் குறைந்து விடும். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3, 4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காயந்து ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சைய்தை சுரண்டி, இப்புழுக்கள் தின்றுவிடுவதால் அதிகமாக தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் காணப்படும்.

    முதிர்ந்த பட்டாம் பூச்சி இலையின் அடிப்பாகத்தில் குவியியல் குவியலாக முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்புழுப்பு நிற கலையும் உடையது. உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும் கழிவு மற்றும் பச்சை இலைகளைச் சுரண்டி செய்யப்பட்ட மெல்லிய நூலாம் படையினுள் கூட்டுப்புழுக்கள் காணப்படும். தென்னை மரங்களில் தென்படும் கருத்லைப்புழு தாக்குதலை உழவியல் மற்றும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.

    உழவியல் முறையில் மிகவும் பாதிக்கப்பட்ட அடிமட்ட இலைகளை மரத்தில் இருந்து மூன்று அடி விட்டு வெட்டி அரித்துவிட வேண்டும்.

    உயிரியல் முறையில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து அந்தி பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருந்தலைப்புழுக்கள் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, பிராக்கானிட் என்ற குடும்பங்களை சேர்ந்த ஒட்டுண்ணிகள் எக்டேருக்கு 3 ஆயிரம் எண்கள் என்ற அளவில் இலைகளில் அடிப்பாகத்தில் விடுவதன் மூலம் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    இந்த ஒட்டுண்ணிகளை கொண்டை பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டுவிடும். எனவே, இலையின் அடிபாகத்தில் ரசாயணத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் இயங்கி வரும் தென்னை ஒட்டுண்ணி மையத்தில் தென்னை கருத்தலை புழுக்களை தாக்கி அழிக்கும் பிராக்கானிட் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தென்னை விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள நாப்பினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவரது மனைவி பிரவீனா (30). இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் தகராறு நடந்தது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரவீனா தனது குழந்தையுடன் கடந்த 8-ந்தேதி அன்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவர்களை தேடி வருகின்றனர். 

    • அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பூனேபள்ளி பகுதியில் மத்திகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்தனர். போலீசார் நிற்பதை கண்டு திடீரென்று லாரியை வழியில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது அந்த லாரியை சோதனை செய்ததல் அனுமதியின்றி 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் 6யூனிட் எம்.சாண்ட் மணல், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் ஓசூர் அட்கோ போலீசார் ஆசனபள்ளி பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர். அதில புறம்போக்கு நிலத்தில் இருந்து மண் வெட்டி எடுத்து வந்து கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை அறிந்த 4 டிப்பர் லாரிகளின் டிரைவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்த பொக்லைன் டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து மண்ணை வெட்டி கடத்திய 4 டிப்பர் லாரிகளையும், ஒரு ெபாக்லைன் வண்டியையும், 100 யூனிட் மண்ணையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
    • தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலந்து கொண்டு மனுக்களை வாங்கினார்.

    அதேபோல கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், மற்ற போலீஸ் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் நீண்ட நாட்களாக தீர்வு ஏற்படாத நிலப்பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல், மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் குறித்து மனு அளித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதில் தகுதியான, 94 மனுக்கள் ஏற்கப்பட்டு, 71 வழக்குகளுக்கு தீர்வுக்கான வழிவகைகள் செய்யப்பட்டன. மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் அவ்வப்போது இது போன்ற குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில், நீண்டகால பிரச்னைகள், நிலப்பிரச்சனைகளில், போதிய ஆவணங்கள் இருந்தும் நடவடிக்கை தாமதமாகும் மனுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    அவர்களின் புகார்களில் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
    • மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பாக ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தொழில் மானிய நிதியை கொண்டு, தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது.

    தொடர்ந்து வேளாண் தொழில்நுடப விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் திட்டமாகும்.

    இந்த திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதாகும். தமிழக கிராம சூழலை மறு சீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவது, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என 2 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஆயிரம் நபர்கள் உள்ளனர். மேலும், ஆரம்ப கட்ட நிதியாக தலா ரு.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் விரிவாக்க நிதியாக தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெற்றப்பட்ட தொழில் மானிய நிதியை கொண்டு தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கையொப்பமிடப்பட்டது. இதன் மூலம் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    மேலும் மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது. விலையில் சரிவு ஏற்படு காலகட்டத்திலும் விவசாயிகள் நிலையான வருமானத்தை பெறுவர். இதனால் ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர்.சஞ்சய் குமார் சிங், முதன்மை விஞ்ஞானிகள் வெங்கடகுமார், செந்தில்குமார், சங்கர், புவனேஸ்வரி, எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சிவக்குமார், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் அருகே நிறுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டும் என்று வாடகைக்கு குடியிரு ப்பவர்கள் மாதேஷிடம் கூறியுள்ளனர்.
    • மாதேஷ், அவரது பிளஸ்-2 படிக்கும் மகள் ஆகியோரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பொன்னன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது44). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வீடுகளில் சிலர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அவரது வீட்டின் அருகே நிறுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டும் என்று வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாதேஷிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாதேஷ், அவரது பிளஸ்-2 படிக்கும் மகள் ஆகியோரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து மாதேஷ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, சுதகார் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.
    • மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளித்துணை ஆய்வாளர்கள் சுதாகர், ஜெயராமன் ஆகியோரும் மாணவனை பாராட்டினார்கள்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெயின்கான், வானவில் மன்ற போட்டியில், அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த இயலாத பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் எளிய அறிவியல் மாதிரிகளை வடிவமைத்து மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

    மேலும் தமிழக முதல் அமைச்சர் சட்டமன்ற பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி, வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவனுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளித்துணை ஆய்வாளர்கள் சுதாகர், ஜெயராமன் ஆகியோரும் மாணவனை பாராட்டினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி, வழிகாட்டி ஆசிரியர் செல்வப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×