என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பேரிகை அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் போலீசார் கைது செய்தனர்.
    • பேரிகை பகுதியில் கஞ்சா செடிகளை விவசாய நிலத்தில் வளர்த்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    ஓசூர்,

    பேரிகை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூளகிரி தாலுகா அத்திமுகம் அருகே கெரிகேப்பள்ளி என்னும் ஊரில் நரசிம்மப்பா (43) என்பவர் கஞ்சா செடிகளை விவசாய நிலத்தில் வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது 2.64 கிலோ கடை கொண்ட 3கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். அதை பறிமுதல் செய்த போலீசார், அதை பயிரிட்டதாக நரசிம்மப்பாவை கைது செய்தனர்.

    ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒருவரை சோதனை செய்த போது அவர் 3 கிலோ கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதை வைத்திருந்ததாக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ராகவா (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சூளகிரி அருகே செம்பரசனப்பள்ளியில் மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததால் 5 பெண் குழந்தைகளுடன் வீடு இல்லாமல் கூலித்தொழிலாளி தவித்து வருகின்றார்.
    • அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ராஜாவின் வீடு இடிந்து விழுந்தது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட செம்பரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி சித்ரா. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ராஜாவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

    பல மாதங்களாக முறையான வீடு இல்லாமல் வறுமையில் 5 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் குடும்பத்திற்கு சம்மந்தபட்ட அதிகாரிகள் முன்வந்து வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மத்தூரை அடுத்த கவுண்டனூரில் மின்மோட்டாரை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரைஸ்மில்லில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் திருடும்போது வாலிபர் கையும்களவுமாக பிடிப்பட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூைர அடுத்த கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேல் (வயது21). இவர் பழத்துகொட்டாய் பகுதியில் உள்ள வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில்லில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றை திருடியுள்ளார். அப்போது அங்கு வந்த வேலையாட்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். உடனே அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். 

    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்ற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக விளைநிலங்களில் மின்வேலிகள் அமைக்க கூடாது என்று விவசாயிகள், பொது மக்களுக்கு மின்வாரியத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • கடந்த சில நாட்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வனப்பகுதிகளில் வழியாக ஊருக்குள் நுழையும் யானைகள் உள்பட வனவிலங்குகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    "கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஒகனேக்கல் வனப்பகுதி மற்றும் தேன்கனிக்கோடை, சூளகிரி வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கோடைகாலம் என்பதனால் தங்களின் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் நுழையாமல் இருக்க விவசாயிகள் சிலர் மின்வேலி அமைக்கின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலியின் காரணமாக வன விலங்குகள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், அதில் மனித உயிர்களும் பலியாகின்றன.

    இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வனச்சரக அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவுடன் இணைந்து, வனவிலங்குகள் கோடைகாலத்தில் நீர்நிலையைத்தேடிச் செல்லும் வழித்தடங்களான பெட்டமுகிலாளம், அட்ட குறுக்கி, கும்பளம், ஜவளகிரி, தளி, பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளி, உத்தனபள்ளி, பேளாளம், பாளையம், சந்தனக்கல், யு.புரம், காரண்டபள்ளி, ஜார்கலட்டி, திப்பசந்திரம், பச்சப்பனட்டி, அல்சட்டி, குந்துகோட்டை, உப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதி யானைகள் செல்லும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தாழ்வாக உள்ள உயர் மின்அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளை ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் 30-ந்தேதி முதல், தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரிசெய்தல், புதிய கம்பம் நடுதல், சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்தல், மின்பாதைகள் அருகில் உள்ள மரக்கிளைகளை அக்கல் கம்பங்களின் உயரத்தை அதிகப்படுத்துதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மின் கம்பங்களை சுற்றி முள்வேலி அமைத்தல் போன்ற 140 பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள், மின்சார வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு (138)-ன்படி குற்றமாகும். மேலும் குற்றவியல் தண்டனையும் வழங்கப்படும்.

    எனவே, மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவசாய நிலங்களில் மின் வேலிகள் அமைக்கக்கூடாது என்ற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. யாரேனும், மின்வேலி அமைத்திருப்பது தெரிய வந்தால், மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓசூரில் ஸ்கூட்டர் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தர்.
    • ஸ்கூட்டரில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மனோஜ் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 41). டிரைவர். இவர் ஸ்கூட்டரில், கடந்த 11&ந் தேதி பெங்களூரு -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பக்கமாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. ஜனநாயக முறைப்படி இயக்கும் ஒரு இயக்கம்.
    • ஊழல், குடும்ப அரசியல் ஈடுபட்டு வரும் தி.மு.க.வை அகற்ற பாடுபட்டு வருகிறோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் இன்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. என்பது ஊழல், அராஜக அரசியல், குடும்ப அரசியல். இதைத்தான் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளாக வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. ஆகவே, இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. கொள்கை.

    இதற்காகதான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதில் ஜெயலலிதா அரசியல் வாரிசாக வந்தார். அதன் பிறகு சாதராண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சரானார். அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் கிடையாது.

    அ.தி.மு.க. ஜனநாயக முறைப்படி இயக்கும் ஒரு இயக்கம். ஊழலுக்கே புகழ் பெற்றது தான் தி.மு.க. கட்சியாகும். ஸ்பெக்ட்ரம் ஊழல், பூச்சி கொல்லி ஊழல், சர்க்காரிய கமிஷன் ஊழல் ஆகிய ஊழல்களை செய்த கட்சி தி.மு.க. என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. அராஜகத்தில் எவ்வாறு ஈடுபட்டனரோ, அதேபோல் ஆட்சிக்கு வந்தபோதும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியாகவும் ஊழல் மிகுந்த கட்சியாகவும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நல்ல கூட்டணி அமைப்பார்.

    ஊழல், குடும்ப அரசியல் ஈடுபட்டு வரும் தி.மு.க.வை அகற்ற பாடுபட்டு வருகிறோம்.

    கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என தொடர்ச்சியாக முதலமைச்சர் என்ற அஸ்தஸ்து பெற குடும்பமாக செயல்பட்டு வருவது இந்தியாவிலேயே ஒரே கட்சி தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற தி.மு.க. தான். இது ஜனநாயகாத்திற்கு முரணாக செயலாகும். இதற்கு முன்பு ஆண்டாக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் என்பது தி.மு.க.வை தான் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் மீது 4 மாணவர்கள் விழுந்து விளையாடியதில் சுய நினைவை இழந்தார்.
    • 4 மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து டீன் உத்தரவிட்டுள்ளார்.

    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் சபீக் அகமது என்பவர் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். மாணவருக்கு கடந்த 10-ந் தேதி பிறந்த நாளாகும்.

    இவரது பிறந்தநாளை சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த நேரம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சபீக் அகமதுவை தூக்கியும் விளையாடினார்கள். அந்த நேரம் கீழே விழுந்த சபீக் அகமது மீது மற்ற மாணவர்கள் ஒருவர் மாறி மற்றொருவர் விழுந்தார்கள்.

    அந்த நேரம் சபீக் அகமதுவின் கழுத்து பகுதியில் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் பதறிபோன சக மாணவர்கள் இது குறித்து விடுதி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மாணவருக்கு கழுத்து பகுதியில் செல்லக்கூடிய நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுய நினைவுக்கு அவர் வரவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 மருத்துவ கல்லூரி மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    மாணவர்களிடையே ராகிங், ஈவ்டீசிங் போன்றவை இருக்க கூடாது என்று ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில பஸ் டே என்ற பெயரில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், மருத்துவ மாணவர் கழுத்து பகுதியில் சக மாணவர்கள் விழுந்து விளையாடியதில், நரம்பு துண்டிக்கப்பட்டு மாணவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 150 யானைகள் இடம் பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தஞ்சமடைவது வாடிக்கை யாக உள்ளது.

    தளி, ஜவளகிரி காப்புக்காடுகளில் கூட்டம் கூட்டமாக நுழைந்து தேன்கனிகோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகா ராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திரா மாநிலம் கவுண்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    அவ்வாறு வரும் யானைகள், ஓசூர் வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. மேலும், மனிதர்கள் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருட்சேதமும் அதிகரித்து வருகிறது.

    பாதிக்கப்படும் விவசா யிகள், பொதுமக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீடுத் தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரகம், குள்ளட்டி காப்பு காடு எல்லையில் மேலூர் முதல் ஓம்மாண்டனப்பள்ளி வரை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வேலி அமைக்கப் பட்டுள்ளதையும், மேலூர் வனப்பகுதியில் தொங்கும் வகையிலான மின்வேலி அமைக்க ப்பட்டுள்ளதையும், மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் 23 வகையான செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், அய்யூர்பசுமை சுற்றுலா மாளிகை வளாகத்தில் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களையும், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். வனப்பகுதியை யொட்டி கம்பிவேலி அமைக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அைடந்துள்ளனர்.

    • நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தியதில் சிவசக்தி நகரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். 

    • இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், நேற்று தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

    ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம், இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார்.

    இதில், மாநகர பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, , மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சாச்சு என்ற அயாஸ்கான், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா 2 நாட்கள் நடைபெ றகிறது
    • இவ்விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முத்தமிழ் விழா, நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா 2 நாட்கள் நடைபெ றகிறது.

    இந்த விழாவின் முதல் நாளான நேற்று காலை முத்தமிழ் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் (பொறுப்பு) கல்பனா வரவேற்றார்.

    கல்லூரி யின் முன்னாள் தமிழத்துறைத் தலைவர் பேராசிரியர் ராசம்மாள், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கீதா, அரூர் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவகாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கிடையே நடைபெற்ற 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து கணினி அறிவியல் துறைத் தலைவர் லாவண்யா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் ஜெயபாரதி, சிறப்பு கவிதைகளை வாசித்தார். இவ்விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் 3-ம் ஆண்டு மாணவி வெண்ணிலா நன்றி கூறினார். இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பிற்பகல் நடந்த நுண்கலை மன்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் வள்ளிசித்ரா வரவேற்றார். இதில் வணிகவியல் துறை மற்றும் கூட்டுருச் செயலாண்மை துறைத் தலைவர் (பொறுப்பு) முரளி வாழ்த்தி பேசினார்.

    முடிவில் நுண்கலை மன்றச் செயலர் பவித்ரா நன்றி கூறினார். விழாவையொட்டி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெறுகிறது.

    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அனைத்து மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக. கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விக்னேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் உமர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முபாரக் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பெறுப்பாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லக்குமார் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ராகுல்காந்தியின் வளர்ச்சியை கண்டு தாங்கி கொள்ள முடியாத மத்திய அரசு ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், பாராளுமன்றத்திற்கு நுழையக்கூடாது என்பதற்காக அவரது எம்.பி.பதவியும் பறித்துள்ளதை கண்டித்து வருகிற 15&ந் தேதி ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் காலை 9 மணி அளவில் நடத்தப்பட உள்ள ரெயில் மறியல் போராட்டத்திற்கும், வருகிற 20-ந் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதில் மாவட்ட செயலாளர்கள், தனசேகரன், ஜெயசீலன், ஹரி, அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சிவலிங்கம், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்டத் துணைத்தலைவர்கள் வின்செண்ட், விவேகானந்தன், நகர துணைத்தலைவர் இருதயம், கவுன்சிலர் விநாயகம், ஊடகப்பிரிவு தலைவர் கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×