என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண் அதிகாரி அறிவுரை"
- 14 ஆயிரத்து 838 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது
- தென்னை மரங்களில் கருத்தலைப்புழுவின் சேதம் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜனவரி முதல் மே மாதம் வரை தாக்குதல் அதிகமாக காணப்படும்.
கிருஷ்ணகிரி,
தென்னையில் கருத்தலைப்புழு கட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 838 எக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் கருத்தலைப்புழுவின் சேதம் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜனவரி முதல் மே மாதம் வரை தாக்குதல் அதிகமாக காணப்படும்.
இதற்கு கோடையில் நிலவும் வெப்ப நிலை மற்றும் காற்றின் ஈரப்பதமே காரணம் ஆகும். கருத்தலைப்புழுக்கள் அனைத்து வயதில் உள்ள தென்னை மரங்களையும் தாக்குகிறது. இதனால் காய்ப்பு திறன் குறைந்து விடும். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3, 4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காயந்து ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சைய்தை சுரண்டி, இப்புழுக்கள் தின்றுவிடுவதால் அதிகமாக தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் காணப்படும்.
முதிர்ந்த பட்டாம் பூச்சி இலையின் அடிப்பாகத்தில் குவியியல் குவியலாக முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்புழுப்பு நிற கலையும் உடையது. உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும் கழிவு மற்றும் பச்சை இலைகளைச் சுரண்டி செய்யப்பட்ட மெல்லிய நூலாம் படையினுள் கூட்டுப்புழுக்கள் காணப்படும். தென்னை மரங்களில் தென்படும் கருத்லைப்புழு தாக்குதலை உழவியல் மற்றும் உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.
உழவியல் முறையில் மிகவும் பாதிக்கப்பட்ட அடிமட்ட இலைகளை மரத்தில் இருந்து மூன்று அடி விட்டு வெட்டி அரித்துவிட வேண்டும்.
உயிரியல் முறையில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து அந்தி பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருந்தலைப்புழுக்கள் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது, பிராக்கானிட் என்ற குடும்பங்களை சேர்ந்த ஒட்டுண்ணிகள் எக்டேருக்கு 3 ஆயிரம் எண்கள் என்ற அளவில் இலைகளில் அடிப்பாகத்தில் விடுவதன் மூலம் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
இந்த ஒட்டுண்ணிகளை கொண்டை பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டுவிடும். எனவே, இலையின் அடிபாகத்தில் ரசாயணத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் இயங்கி வரும் தென்னை ஒட்டுண்ணி மையத்தில் தென்னை கருத்தலை புழுக்களை தாக்கி அழிக்கும் பிராக்கானிட் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தென்னை விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






