என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தேவராஜூக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளனார்.
    • தேவராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே பெத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது55). கூலித்தொழிலாளியான இவர் புதுச்சேரியில் பூக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தேவராஜூக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளனார்.

    இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் கடந்த 9-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ் மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பளம் வழங்க வேண்டும்.
    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பொது சுகாதாத்துறை ஆயுஷ் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பல்நோக்கு பணியாளர்களின் வாழ்வாதார பறிப்பு நடவடிக்கையை கைவிட்டு, ஆயுஷ் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். மாதந்தோறும் ஒன்றாம் தேதியன்று சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை வழங்க வேண்டும். தொழிலாளர் காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களை இணைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 18 ஆண்டிற்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    • உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.
    • 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை வந்தன.

    அவை தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் சுற்றியதோடு, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன.

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வனத்துறையினர் தனித்தனிக் குழுக்களாகச் சுற்றிய யானைகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து ஜவளகிரி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்தனர்.

    இதில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தொடர்ந்து, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் நிரந்தரமாக தங்கிவிட்டன.

    இதையடுத்து, யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை மூலம் வனப்பகுதியில் சூரிய சக்தி தடுப்பு வேலிகள் மற்றும் யானைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

    இதனால், தற்போது யானைகள் வனத்தைவிட்டு கிராமப் பகுதிகளுக்கு வருவது குறைந்துள்ளது.

    இந்நிலையில், அஞ்செட்டி அருகே உடுபராணி, நூருந்துசாமிமாலை, உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.

    இதில், 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று குட்டியுடன் சுற்றிய யானைகளை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

    • மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • வெங்கடேசன் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது42). டைலரான இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    வெங்கடேசனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    நேற்று மீண்டும் அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த காணப்பட்ட வெங்கடேசன் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா பாரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.
    • அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா கொள்ளப்பள்ளியில் இருந்து எனுசோனை கிராமம் செல்லும் சாலை வழியில் இரண்டு சிறிய பாலங்கள் உள்ளன.

    இந்த பாலங்களில் தியாகரசனப்பளி ஏரியில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீர் மோதுகுளப்பள்ளி, பாளையம், மேல்பாளையம், அழகுபாவி வழியாக இந்த பாலம் வழியாக சென்னப்பள்ளி, சின்னார், முருக்கனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

    இந்த உபரி நீர், மழை நீரால் கால்வாய் கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரப்பதம் பெற்றும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் வசதி பெற்று பல ஆண்டு முன்பு பெற்று வந்தனர்.

    தற்போது கடந்த சில ஆண்டு காலமாக இந்த கால்வாய் தூர்வாரபடாமல் முட்புதர் மண்டி கால்வாய் நடுவிலே மரங்கள், செடிகள் வளர்ந்து கால்வாயை ஆக்கிரமித்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தொழிற்சாலையினர் கால்வாய்களை ஆக்கிரமித்து வருவதால் கால்வாய்கள் இருப்பது தெரியாத நிலைஉள்ளது. இந்த நிலமையை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீரான நீர் பாதைகள் அமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • நகராட்சி தலைவர் பரிதா நவாப், கலந்து கொண்டு 365 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, கையுறை வழங்கி பாராட்டினார்.
    • தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீருடை மற்றும் கையுறை அணிந்தே பணி செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில், தூய்மைப் பணியாளர்களை பாராட்டி, சீருடை வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நகராட்சி ஆணையாளர் வசந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், கலந்து கொண்டு 365 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, கையுறை வழங்கி பாராட்டினார். மேலும், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீருடை மற்றும் கையுறை அணிந்தே பணி செய்ய வேண்டும்.

    நகரை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து நகரை தூய்மையாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதில், கவுன்சிலர்கள் தேன்மொழி, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
    • பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் மிடிகிரிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் (20), ஓசூர் ரெயில் நிலைய சாலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஆலப்பட்டி அருகே பாசிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (48), லைன்கொல்லை சீனிவாசன் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற கெலமங்கலம் சுல்தான்பேட்டை ரகு (65), களர்பதி அச்சுதன் (37), கதவணை பெருமாள் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கே.ஆர்.பி. அணை போலீசார் மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூர் முருகன் (40), எம்.சி.பள்ளி பூபதி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகாலில் நடைபெற உள்ளது.

    இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. மூத்த நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், பி.எல்.ஏ.-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் இந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
    • 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், கிருஷ்ணகிரி ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் செக்போஸ்ட் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணி ஆகியோர், ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஓசூரிலிருந்து எம்.சாண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.

    • அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.
    • 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் கல்லேறி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், கல்கொண்டபள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது40), பிரகாஷ் (42), எஸ்.குருப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், லோகேஷ், சேத்தன்குமார் (26), சத்யராஜ் (26) ஆகிய 6 பேரை சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.

    • கோவில் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி குட்டப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. குட்டப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி கோவில் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார்.

    ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமணி வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

    • கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்பட வில்லை.
    • காலி குடும்பங்க ளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி செல்லும் சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இங்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் கல்லாவி- ஊத்தங்கரை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×