என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சோபனம். இவர் கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். திருமணமாகாத இவர், பொன்னப்பநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை சோபனம் வீட்டுக்கு அவரது தம்பி ரசல்ராஜ் வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால், அவர் வெளியில் நின்று சத்தம் கொடுத்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரசல் ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அப்போது அங்கு சோபனம் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித் துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரசல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கோதையாறு, குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி உள்ளது. அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே அணைகள் நிரம்பி வழிவதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.97 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 509 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.55 அடியாக உள்ளது. அணைக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.45 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 15.55 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ள ளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் கடந்த 10 நாட்களாக முழு கொள்ள ளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 42.65 கன அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 8.30 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மற்ற அணைகள் அனைத் தும் நிரம்பி வழியும் நிலையில் 2 மாதமாக மழை பெய்த பிறகு பொய்கை அணை நீர்மட்டம் உயராத நிலையில் உள்ளது.

    • மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.
    • பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே உள்ள பொத்தையடியில் அமைந்துள்ளது வைகுண்ட பதி கிராமம். இங்கு உலகப் புகழ்பெற்ற மருந்து வாழ்மலை என்னும் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் வளர்ந்து உள்ளதால் இந்த மலைக்கு மருந்து வாழ்மலை என்று பெயர் வர காரணம் ஆயிற்று.

    இந்த மலை சுமார் 1800 அடி உயரம் கொண்டதாகும். வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வ ரர் கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில் கள் அமைந்துள்ளன. மேலும் இந்த மலையில் பல குகைகளும் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான சித்தர்கள், முனிகள், ரிஷி கள், மகான்கள் தவமிருந்து வருகின்றனர். இந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    இந்த மலையில் ஆங் காங்கே சுனைகளும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இதனால் இந்த மலைக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். மேலும் இந்த மலைக்கு மலை ஏறும் பயிற்சிக்காக மலையேற்ற வீரர்களும் அதிக அளவில் அதிகாலை நேரத்தில் வந்து செல்கிறார்கள். இது தவிர தேசிய மாணவர் படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சியும் இந்த மலையில் நடந்து வரு கிறது. பிரதோஷம் போன்ற முக்கிய விசேஷ காலங்களில் இங்குள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இந்த மலையில் செய்து கொடுக்கப்படவில்லை.

    குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இந்த மலையில் இல்லை. மேலும் இந்த மலையில் பாதி வரை தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையின் உச்சிக்கு செல்வதற்காக பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மலையேறும் பயிற்சியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த மலைக்கு வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர், மின்விளக்கு, பாதை மற்றும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்க இந்த மலைக்கு வரும் பொது மக்களும், சுற்றுலா சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு
    • கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவர் திடீ ரென மாயமாகி விட்டார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பெ ற்றோர் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் குமார் என்பவரையும் காணவில்லை என பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. எனவே அவர் தான், தங்கள் மகளை கடத்தி சென்று உள்ளார் என்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அனீஸ்குமாரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடக்கு குண்டல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இளம்பெண் மட்டுமே இருந்துள்ளார். அனீஸ்குமார் தப்பி சென்று விட்டார். இதை த்தொட ர்ந்து போலீசார், மாண வியை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் அனீஸ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவில், நவ.11-

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படு கிறது. இதையடுத்து புத்தா டைகள் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பொதுமக்கள் நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் குவிந்திருந்தனர்.

    இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது. மீனாட்சிபுரம் கலெக்டர் அலுவலகம், வடசேரி, செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். நாகர்கோவில் நகரில் கூட்டம் அலைமோதியதை யடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    வடசேரி, வேப்பமூடு, செட்டிகுளம் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டனர். ஜவுளி கடைகளில் மட்டுமின்றி பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனைக்கு வந்திருந்த விதவிதமான பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலை யங்களிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. இதையடுத்து கடை வீதிகளிலும் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டக்கூடும் என்ப தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு மாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்.

    கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குழித்துறை, பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி வெளியூர்களி லிருந்து சொந்த ஊருக்கு பஸ்களில் வந்த பொது மக்கள் அதிகமானோர் அதிகாலையில் பஸ்களை விட்டு இறங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை.

    இரணியல், நவ.11-

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 46). திங்கள்நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கருணாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி, குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். கருணாகரன் மட்டும் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ் மாடியில் அவரது அண்ணன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதிக்கு பிறகு கருணாகரனை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் நேற்று இரவு மாடிக்கு சென்று கதவை தட்டி கருணாகரனை அழைத்துள்ளார். கதவு திறக்காததால் கதவை தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கருணாகரன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் கருணாகரன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கருணாகரன் மனைவி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53), விவசாயி.

    இவரது உறவினர் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறு வன டிரைவர் சுரேஷ் கிண்டல் செய்து உள்ளார். இதனை மோகன்தாஸ் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மோகன் தாஸ் தோட்டத்தில் இருந்த போது, சுபாஷ் அங்கு வந்தார். அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த சுபாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன் தாசை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரம் தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன்தாஸ் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கீதா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள சுபாசை பிடிக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசார ணையில் சுபாஷ், கேரளா விற்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

    • பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
    • புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.

    நாகர்கோவில் :

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. குழுமமான தக்ஷின் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் தடகள விளையாட்டு போட்டிகள் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.

    விளையாட்டு போட்டிகளை பள்ளி தாளாளர் தில்லைச்செல்வம் தொடங்கி வைத்தார். போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்து 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவர்கள் பங்கேற்றனர்.

    தக்ஷின் சகோதயா தலைமை ஒருங்கிணைப்பாளர் சுனில்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரனேஸ் உ நோபிள் மேற்பார்வையிட்டனர். போட்டியில் கன்னியாகுமரி அமிர்தா வித்யாலயம் முதல் பரிசையும், மணவாளக்குறிச்சி புனித ஜோசப் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் பரிசையும் வென்றது.

    மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியின் உடற்கல்வி குழுமமம் முத்தரசி, செல்வி, ஓசானியோ மற்றும் கோபி விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் இயக்குநர்கள் முகில் அரசு, ஆடலரசு, பள்ளி முதல்வர் தீபசெல்வி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி தாளாளர் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • சுற்றுலா தலங்கள் களை கட்டியது
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400,

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூ சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், புதியம்புத்தூர், ஆவரைகுளம், ராதாபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, சங்கரன்கோவில், ராஜ பாளையம், கோவில்பட்டி ஆகிய இடத்தில் இருந்து மல்லிகை பூவும், திருக் கண்ணங்குடி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரோந்தி, பட்டர் ரோசும், சேலத்தில் இருந்து அரளி பூவும், தோவாளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சம்பங்கி பூ, ரோஸ் கோழி கொண்டை அருகம்புல், தாழம்பூ ஆகியவைகள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தோவாளை சந்தையில் ஒரு கிலோ பிச்சி பூ மற்றும் மல்லிகை பூ கிலோ ரூ.1000-க்கும் இன்று விற்பனையானது. அரளி ரூ.200, சம்மங்கி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.200, கிரேந்தி ரூ.50, கனகாம்பரம் ரூ.400, துளசி ரூ.30, பச்சை ரூ.7 எனவும், மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீப ஒளி திருநாள், தித்திக்கும் நன்நாள், மகிழ்ச்சி பொங்கும் பொன் நாள், சுற்றம் சூழ மகிழும் நாள், உலகமெங்கும் கொண்டாடி சிறக்கும் நாள்.

    இந்நாளில் புத்தாடை அணிந்து, தர்மங்கள் செய்து மகிழ்வுடன் உணவுண்டு, உறவுகள் நட்புகளுடன் கலந்துரையாடி உள்ளம் மகிழும் மகத்தான நாள். இந்நாளில் இறைவன் திருவடி வணங்கி இல்லாமை இல்லாமல் ஆகிடவும், சமீப காலமாக நடக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் அழிவு சக்திகளை அழிய செய்திடவும் இறைவனை வணங்குவோம்.

    இன்பங்கள் மலர்ந்து, துன்பங்கள் மறைந்து, செல்வங்கள் பெருகி

    அனைத்து வளங்களும் அனைவரும் பெற்று வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும். அ.தி.மு.க. 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகழ்ச்சி யுடன் கொண்டாடுவோம். வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×