search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீசன் கடைகள் ஏலம்
    X

    கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீசன் கடைகள் ஏலம்

    • 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
    • கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கோவளம் ரோட்டில் இருந்து கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதியில் 73 சீசன் கடைகளும், கன்னியா குமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி மண்டபம் முன்புஉள்ள முக்கோண பூங்கா சந்திப்பு வரை உள்ள மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் 27 சீசன் கடைகளும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு பகுதியில் 23 சீசன் கடைகளும் ஆக மொத்தம் 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

    இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சிரஸ்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகி யோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும் சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு கார் பார்க்கிங் வசதி கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதி மற்றும் சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் உள்ள கார் பார்க்கிங் இடம் ஆகிய இடங்களில் கட்டண கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் சீசனையொட்டி ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனை மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்த கார் பார்க்கிங் அருகில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை ஒற்றையால்விளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    இதேபோல கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை சுக்குப்பாறை தேரிவிளையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    Next Story
    ×