என் மலர்
கன்னியாகுமரி
- அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள்
- அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை
நாகர்கோவில் : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கேரளா சமஸ்தானம் இருந்தபோதிலிருந்து அருந்ததியர் இன மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை. அதனை கேட்டு அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களது கோரிக் கையை அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த 2-ந்தேதி வடசேரி அருகே அருந்ததியர் காலனி முன்பு போராட்டம் நடத்தி னர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.எனவே அரசும், மாவட்ட நிர்வா கமும் அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கிருஷ் ணன்கோவில் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
- நேற்று மாவட்டம் முழுவதும் சற்று மழை குறைந்திருந்தது.
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவ தும் சற்று மழை குறைந்திருந்தது. ஆனால் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 47.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவிலில் இன்று நான்கு நாட்களுக்குப்பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடிக்க தொடங்கியது. மாவட்டம் முழுவதும் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம், வடிய தொடங்கியுள்ளது. முன்சிறை,திக்குறிச்சி பகுதி களில் தண்ணீர் வடிந்து வரும் நிலையில் முழுமை யாக தண்ணீர் வடியவில்லை.
இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதேபோல் தேரேகால்புதூர், தோவாளை பகுதிகளில் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்து வருகிறது. மழைக்கு 315 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கி இருந்த நிலையில் தற்போது அதை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. தண்ணீர் வடிந்தாலும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயி உள்ளனர்.
பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திற்பரப்பு அருவிப்பகுதியில்
தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை இன்று ¾ அடியும், பெருஞ் சாணி அணை 1¾ அடியும், மாம்பழத்துறையாறு அணை 2½ அடியும், முக்கடல் அணை 1½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 32.95 அடி யாக இருந்தது. அணைக்கு 1432 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 282 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியது. அணைக்கு 1353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு-1 நீர்மட்டம் 14.56 அடியாகவும், சிற் றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.66 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 32.67 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.10 அடியாகவும் உள்ளது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம் பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளிலும் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள்.
தொடர் மழைக்கு மாவட் டம் முழுவதும் நேற்று வரை 43 வீடுகள் இடிந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்து உள்ளது. மேலும் மழைக்கு 50 வீடுகள் சேதமடைந்து உள்ளது.
- பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
- இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.
- நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
- வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக மாநகராட்சி மேயருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து கழிவறையையும் ஆய்வு செய்தார். கழிப்பறையின் தரை தளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும், மேலும் கழிவு தேங்காமல் இருக்க உறிஞ்சி குழாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஏ.டி.எம்.மிஷின் களை நிறுவுவதற்கும், நடைபாதையில் இடை யூறாக இருக்கின்ற கடைகளை மாற்றுவதற்கும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரமாக பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கண்ட மேயர் மகேஷ் பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் மேயர்மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதை சரி செய்ய என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது மேல் கூரை மேல் தகர கூரைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே நீர்கசிவு ஏற்படும் பகுதிகளில் தகர கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்தமோகன் நகர்நல அதிகாரி ராம் மோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலை மை செயற்குழு உறுப்பி னர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
கடந்த 15-ந்தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையை சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 27-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைதாண்டியதாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட னர். பின்னர் கைது செய்யப்பட்டு 32 மீனவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். டீகோ கார்சியா தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது
- ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதியைச்சேர்ந்தவர் டீசன் என்ற கென்சலா கிரேசி (வயது 60),மீனவர். இவரது சகோதரியின் மகன் தினேஷ் குமார். இவரது வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு டீசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் டீசன் மீது ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று டீசன், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது ராதிகாவின் கணவர் பிரபு அவரது சகோதரர் ராஜ் என்ற ஸ்டாலின்ராஜ் ஆகியோர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் டீசன் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பிரபு ராஜ் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிரபு,ராஜ் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். கைது செய்யப்பட்ட பிரபு,ராஜ் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அரசு தரப்பில் வழக்க றிஞர் மதியழ கன் ஆஜரானார். பிரபு,ராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- வட்டவிளையில் ரூ.47 லட்சம் செலவில் சூர்யா குளம் சீரமைக்கப் பட்டது.
- தண்ணீர் நிரம்பி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளையில் ரூ.47 லட்சம் செலவில் சூர்யா குளம் சீரமைக்கப்பட்டது. தற்பொழுது பெய்த மழையினால் இந்தக் குளம் தண்ணீர் நிரம்பி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இதனையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் போடப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்திருந்ததை சீரமைக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் குளத்தின் சுற்றுச்சுவரை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.
42-வது வார்டுக்கு உட்பட்ட ஹவா நகர் பகுதி யில் பாதாள சாக்கடைக்காக மூடப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் கட்சியளித்தது. அதை உடனடி தாஸ், அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயர் மகேஷ் பெற்றுக்கொண்டார். வீட்டு வரி, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் உத்தர விட்டார். ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரி களுடன் மேயர் மகேஷ் ஆலோசனை நடத்தி
- சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி
- தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள்
நாகர்கோவில் : விளவங்கோடு தாலுகா நல்லூர் வருவாய் கிராமத் திற்குட்பட்ட சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்ததுடன் அங்கிருந்த சுற்றுச்சுவரை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட் டது.
ஆனால் இதுவரை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தினகரன் உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்
- இரவு 10 மணி வரை மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் இடைவிடாது 5 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை முதலில் லேசாக தூரத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதி கரித்தது. பின்னர் இடை விடாது மழை கொட்டிக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, மீனாட்சி புரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட் டது. அவ்வப் போது மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, மாம் பழத்துறையாறு பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 40.4 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.
கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி களிலும், மலையோர பகுதிகளி லும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1½ அடியும், மாம்பழத்து றையாறு அணை நீர்மட்டம் 6 அடியும், முக்கடல் அணை நீர்மட்டம் 2¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 32.03 அடியாக இருந்தது. அணைக்கு 1747 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யிலிருந்து 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 59.30 அடியாக உள்ளது. அணைக்கு 1167 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.40 அடியாக உள் ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. சிற்றாறு-2 அணை யின் நீர்மட்டம் 14.49 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம் பழத்துறை யாறு அணை யின் நீர்மட்டம் 30.18 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்கள் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. இன்று அணை யின் நீர்மட்டம் 12.70 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 5.8, பெருஞ்சாணி 17.2, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-6.2, பூதப்பாண்டி 35.2, களியல் 9.4, கன்னிமார் 13.2, கொட்டாரம் 36.4, குழித்துறை 13.4, மயிலாடி 40.4, நாகர்கோவில் 21.2, புத்தன் அணை 16.6, சுருளோடு 6.2, தக்கலை 23, குளச்சல் 16.4, இரணியல் 12, பாலமோர் 13.2, மாம்பழத்துறையாறு 48, திற்பரப்பு 8.4, ஆரல் வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 17.2, குருந்தன் கோடு 38, முள்ளங் கினாவிளை 7.4, ஆணைக் கிடங்கு 45.2, முக்கடல் 12.2.
- பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதி
- சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
சுசீந்திரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நல்லூர் பகுதியில் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பாலப்பணிகள் தொடங்கப் பட்டதையடுத்து சுசீந்தி ரத்தில் இருந்து நல்லூர் வழியாக மருங்கூருக்கு சென்ற பஸ்கள் அனைத்தும் வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக மருங்கூருக்கு இயக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொது மக்கள் இருசக்கர வாக னங்களில் மற்றும் ஆட்டோக் களை செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக் கப்பட்டு இருந்தது. தற்காலிக பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வந்தனர்.
பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக தற்காலிகமாக அமைக்கப் பட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருங்கூரிலிருந்து சுசீந்திரத்திற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மருங்கூரிலிருந்து மயிலாடி, வழக்கம்பாறை வழியாக சுசீந்திரத்திற்கு வந்தனர். தற்காலிக பாலம் சேதமடைந் துள்ளதையடுத்து அந்த பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து தடை பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தற்பொழுது நடைபெற்று வரும் பாலப்பணியை துரிதமாக முடித்து பஸ் போக்கு வரத்தை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சேதம் அடைந்த தற்காலிக பாலத்தை உடனடி யாக சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறி னார்கள். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகா ரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார்.
- ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்த்திடும் பொருட்டு ஐக்யூஎசி சார்பாக ஆளுமைத்திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார். இயல்பிலேயே இருக்கும் தங்கள் திறமைகளை மாணவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது, கண்டு கொண்ட திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் முறைகள், பயிற்சி, தேடல் குறித்தும், மாறி வரும் சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கு அத்திறன்கள் எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும், பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.






