என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது

    நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி, பாரதி தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, ஏசுபக்தன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 32-வது வார்டுக்குட்பட்ட சைமன் நகர் 5-வது குறுக்கு தெருவில் ரூ.18.72 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, 23-வது வார்டுக்குட்பட்ட கே.பி. ரோடு, கிறாஸ் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது போன்ற பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிகி, சிஜி பிரவின், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் துரை, சேக் மீரான், இளைஞரணி சரவணன், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் மைக்கேல் ராஜ், சுரேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடற்கரை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சமூக பாதுகாப்புத்துறை மற்றும் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்பட்டுவரும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதற்கான 3 சுற்றுலா விழிப்புணர்வு வாகனங்கள் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 16 மாணவ, மாணவியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 30 மாணவ, மாணவியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுலா வாகனத்தில் சென்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுபாப்பு அலகு அலுவலர் (பொ) பியூலா மற்றும் பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தக்கலை :

    தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி காட்டாத்துறை பகுதியில் பெரிய நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தக்கலை, திருவிதாங்கோடு, திக்கணங்கோடு, ஆத்திவிளை, முளகுமூடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பைப் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் தக்கலை அருகே கேரளபுரம் செல்லும் சாலையில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் பைப் லைன் உடைக்கப்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இது குறித்து ஆய்வு செய்த போது பல இடங்களில் பைப் லைன் முறையாக பொருத்தாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

    திருவட்டார் :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் பூஜை நடைபெறுகிறது

    இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

    நாளை 2.-ம் நாள் காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

    • மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி :

    குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் டையோன்சியஸ் (வயது 48), எலக்ட்ரீசியன். இவர் தற்போது ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் டையோன்சியஸ் காரவிளைக்கு சென்று கொண்டிருந்தார். கூட்டுமங்கலம் பகுதியில் சென்றபோது, மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் டையோன்சியஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு உடையார்விளை யில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் 2 நாட்கள் நடக்கிறது
    • 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வருகை தருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை சிறப்பாக நடத்த 15-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர். போட்டியின் 2-ம் நாள் மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவர் பொன் ராபர்ட்சிங், பொதுச்செயலாளர் சண்முகவேல், குமரி மாவட்ட பளுதூக் கும் சங்கதலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன் சுந்தர்நாத் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை : 

    மார்த்தாண்டம் முழங்குழி வாயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். ஒர்க் ஷாப் உரிமை யாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 28). இவர் பி.எட். முடித்துவிட்டு திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார். நேற்று மாலை மார்த்தாண்டம் ெரயில்வே கிராசிங் அருகே உள்ள பல்லன்விளை பகுதியில் மகேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி காயப்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார்
    • குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

    திருவட்டார் :

    திருவட்டார் பேருராட்சிக்கு உட்பட்ட திருவட்டார் பாலம் அருகே மீன் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. அதனுடன் காய்கறி கடைகளும் ரோட்டோரம் செயல்பட்டு வந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்கு வந்து தான் மீன், காய்கறிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் மழை காலங்களில் சந்தை பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். எனவே அந்த பகுதியில் மீன் விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜியிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று மீன் விற்பனை கூடம் கட்ட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் நிதியினை அமைச்சர் மனோ தங்கராஜ் ஓதுக்கினார். இதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் விற்பனை கூடத்தை திறந்து வைத்தார்.

    விழாவுக்கு பேருராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், செயல் அலுவலர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பலீலா ஆல்பன், ஆற்றூர் பேருராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், தி.மு.க. பேரூர் செயலாளர் சோழராஜன், திருவட்டார் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திற்பரப்பு பேருராட்சிக்கு உட்பட்ட சேக்கல் பகுதியில் திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பகுதி நேர ரேசன் கடையையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அஞ்சுகண்டறை பகுதியில் இருந்து குலசேகரம் - குளச்சல் வழித்தடத்தில தடம் எண் 332 என்ற பஸ்சையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜான்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், பேரூர் செயலாளர் ஜான் எபனே சர், திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் விஜய குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள அண்டூர்புல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த மகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெஸ்டஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெஸ்டஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த ஜெஸ்டசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் மற்றும் மகனுடன் ஜெஸ்டஸ் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் கூட்டம் அலைமோதியது
    • இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை

    நாகர்கோவில்,

    புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரி யங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார் கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவி லில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று காலை யில் பெருமா ளுக்கு சிறப்பு தீபாராதனை கள் நடந்தது. பெருமாளை தரிசிப்ப தற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிச னம் செய்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலி லும் இன்று காலையில் சுப்ரபாத தரிசனம், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழி பாடுகளும், தீபாராதனை களும் நடந்தது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பதி சாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்ட விளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது.

    பெருமாளை தரிசிப்பதற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில் களில் நிரம்பி வழிந்தது.

    • கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    • கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.

    இரணியல் :

    இரணியல் லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு பிள்ளை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பூப்பந்தாட்ட வீரர் ராஜபெருமாள், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன். ராஜரத்தினம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கல்லூரி தலைவர் மற்றும் செயலர் பேராசிரியர் ராஜகோபால், கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனரும் தலைவருமான ஆறுமுகம் மற்றும் கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் ரஸ்கின், சிவக்குமார் மற்றும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.

    • மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை :

    மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் 16-ந்தேதி (திங்கட்கிழமை) மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×