என் மலர்
கன்னியாகுமரி
- மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
- தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அங்கு அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணைக்கிடங்கு, களியல், கோழிப்போர்விளை, குழித்துறை பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலும் விடிய விடிய மழை பெய்தது.
சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2, அணைகள் நிரம்பி வருவதையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மதகு வழியாக 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிற்றாறு-1 அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மோதிரமலை குற்றியாறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37 அடியாக இருந்தது. அணைக்கு 1487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.35 அடியாக உள்ளது. அணைக்கு 723 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1-அணை நீர்மட்டம் 16.76 அடியாக உள்ளது. அணைக்கு 1158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரி நீராகவும் மதகுகள் வழியாகவும் 737 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் உபரி நீரை வெளியேற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அணை நீர்மட்டத்தை அவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 16.86 அடியாக உள்ளது. அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 43.14 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடியாக உள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது60). இவரது வீட்டில் மலை பாம்பு ஒன்று கோழி கூட்டினுள் புகுந்து கோழியை விழுங்கி கொண்டு வெளியே செல்ல முடியாமல் கோழிக்கூட்டினுள் பதுங்கி இருந்தது. இது குறித்து ராஜன் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைக்கும் படை வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
- ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது.
குளச்சல் :
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்றிரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குளச்சல் சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழையால் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருகி கரைபுரண்டு ஓடுகிறது. காந்தி சந்திப்பு முதல் பீச் சந்திப்பு வரை சாலையை மூழ்கடித்து வெள்ளம் ஓடியது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமடைந்தனர்.வெள்ளியாகுளம் நிரம்பி உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாததால் வளர்ந்துள்ள செடிகள், புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது. ஆசாத் நகர் வடிகால் நிரம்பி சாலையை மூழ்கடித்து சென்றது.
இதனால் மழை வெள்ளம் அருகில் உள்ள ஜூம்மா பள்ளி வாசலுக்குள் புகுந்தது. இந்த வெள்ளம் இன்று காலை வடியாததால் தொழுகைக்கு இடையூறு ஏற்பட்டது.நிர்வாகிகள் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மழைக்காலங்களில் பெரு வெள்ளம் இந்த பள்ளி வாசலுக்குள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.எனவே ஆசாத் நகர் வழியாக பாய்ந்தோடும் மழை வெள்ளம் ஏ.வி.எம்.கால்வாய் வழியாக கடலில் சேர ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
- ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
- பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாகர்கோவில் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) அருள்பிர காஷ், சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் கிராத்தூர் பகுதியில் கடந்த 7-ந்தேதி ரோந்து சென்றனர்.
அப்போது கிராத்து ரை அடுத்த கரியறவிளை பகுதியில் ஒரு மினி டெம்போவில் கேரளாவுக்கு செம்மண் கடத்திக் கொண்டு வருவதை பார்த்து டெம்போவை தடுத்து நிறுத்தி னர். அப்போது திடீரென்று ஓட்டுநர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வந்தனர். மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கொல்லங் கோடு போலீஸ் இனெ்ஸ் பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பிற்கி ணங்க, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எனது (தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.) தலை மையில் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
- தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக குழித்துறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இதேபோல் மதுரை-புனலூர் ரெயிலும் தாமதமாக இயக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்டது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ரெயில்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்களும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக வந்தது. தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
- ஆவின் ஆய்வு கூட்டத்தில் கலக்டர் ஸ்ரீதர் பேச்சு
- குமரியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடன்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் பால்வளத்துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி பூதப்பாண்டி கிளை சார்பாக கறவை மாடு கடனுதவியாக தெரிசனங்கோப்பு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நாகம்மாளுக்கு ரூ.2 லட்சமும், ஜெப ராணிக்கு ரூ.10 லட்சமும், எச்.டி.எப்.சி. வங்கி தக்கலை கிளை சார்பாக முளகுமூடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சார்ந்த விக்டர் ஜெபராஜிக்கு ரூ.3.90 லட்சமும், ஆல்வின் வினோவுக்கு ரூ.2.88 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட மகளிர் திட்ட இயக்கம், கால்நடை பரா மரிப்புத் துறை, பறக்கை கால்நடை மருத்துவ பல்கலை கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் ஸ்ரீதர், குமரி மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் கூட்டுறவு சங்கம் அமைக்க அனைத்து பால் உற்பத்தியா ளர் கூட்டுறவு சங்கங்களும் முயற்சிக்க வேண்டும்.
ஆவின் கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்து அனைத்து உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கும் வழங்க வேண்டும்.
தீவனப்புல் வளர்ப்பினை ஊக்குவிக்கு பொருட்டு தேவையான புல் விதைகள் மற்றும் கரணை கள் வாங்கி உறுப்பினர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும். சங்கங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பிட வேண்டும். உறுப்பி னர்களின் நிலங்கள் மற்றும் கால்நடைத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து தீவனப்புல் பயிரிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கறவை மாட்டுக்கடன்கள் வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கறவை மாடு பராமரிப்பு கடன்களை அதிக அளவில் வழங்க வேண்டும். பிரதம சங்கங்களிலிருந்து உறுப்பி னர்களுக்கு வழங்கப்ப டவேண்டிய போனஸ் மற்றும் ஊக்கத்தொகை களை உடனடியாக வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணைப்பதி வாளர் (பால்வளம் திருநெல்வேலி) ஜி.சைமன் சார்லஸ், ஆவின் பொது மேலாளர் அருணகிரி நாதன், மகளிர் திட்ட இயக்குநர் பீபீ ஜாண், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மகா லிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார், பறக்கை கால்நடை மருத்துவ பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ஜெனிஸியஸ் இனிகோ, சங்க செயலாளர்கள், அலுவலர்கள், முதுநிலை ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.
- 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்
- முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சுதாகர் செய்திருந்தார்.
என்.ஜி.ஓ.காலனி :
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவர் கே.எஸ்.மணி, செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். ஆர்.ஐ. ராம்குமார், கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஐ.முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் டாக்டர் ராகேஷ், ரத்ததான முகாமை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சுதாகர் செய்திருந்தார்.
- இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார்.
- படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு அருகே உள்ள எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் நேற்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாத்தங்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார். எதிர்பாராத விதமாக வாகனம் ரவி மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது சம்பந்தமாக ரவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறை அதிகாரிகள் அறிவுரை
- வனம் அழிந்தால் மிகப்பெரிய ஆபத்து
நாகர்கோவில் :
வனங்களை பாது காப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவி கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்பேரில், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா உத்தரவின் பேரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வன பகுதிக ளுக்கு சுற்றுலா அழைத்து சென்று வனம், மரங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக, குமரி மாவட்டம் தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேர், நேற்று வனம் சார்ந்த சுற்றுலா விழிப்புணர்வுக்காக 2 வேன் மூலமாக உதயகிரி கோட்டை உயிரியல் பூங்கா விற்கு அழைத்து செல்லப் பட்டனர். உயிரியல் பூங்காவை மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பல மாணவிகள் இப்போது தான் முதல் முறையாக உதயகிரி கோட்டை, உயிரியல் பூங்கா வுக்கு வந்து உள்ளோம் என தெரிவித்தனர். அவர்க ளுக்கு வனத்தின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. வன பாதுகாவலர் சிவக்கு மார், இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
இயற்கை, காடு, வன விலங்குகள், நீர், ஆக்சிஜன், வெப்பநிலை குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரங்கள், வனம், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக விளக் கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் சிவக்குமார் பேசுகையில், வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்கள் அழிந்தால் தட்ப வெப்ப நிலை மாறி விடும். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 25 சதவீத காடுகள் உள்ளன. இதை 33 சதவீ தத்துக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்க ளில் கண்டிப்பாக மரங்கள் நட வேண்டும் என்றார்.
சமூக காடுகள் சரகம் (நாகர்கோவில்) வன சரகர் ராஜேந்திரன் பேசுகையில், வன விலங்குகளின் சாம்ராஜ்யமாக காடுகள் உள்ளன. காடுகள் அழிந்தால் வன விலங்குகள் மட்டுமன்றி மனித இனமே அழிந்து விடும். காடுகளில் வன விலங்குகளின் சாணம் தான் உரமாக மாறுகிறது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு உட்கொள் ளும். 30 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கும். அதன் சாணம் உரமாகிறது என்றார்.
- சைக்கிள் போட்டியை கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
அண்ணா பிறந்த நாளையொட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி இன்று நடந்தது. புத்தேரியில் இருந்து அப்டா மார்க்கெட் வரும் அணுகு சாலையில் இந்த போட்டி நடைபெற்றது. 13 வயதிற்குள்ளான மாண வர்களுக்கு 15 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டரும், 15 வயதிற்குள்ளான மாணவர்க ளுக்கு 20 கி.மீட்டரும், மாணவி களுக்கு 15 கி.மீட்டரும், 17 வயதிற்குள்ளான மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 20 கி.மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ரெனோ முதல் பரிசையும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெய்வன் அன்டேல் இரண்டாம் பரிசையும், கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரால்டு சேம் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
13 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவி அன்லின் லிரின்டே முதல் பரிசையும், முக்குலம்பாடு புனித போலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷிகா இரண்டாம் பரிசையும், நாகர்கோவில் பிஷப் ரெமிஜூஸ் பள்ளி மாணவி தேஜா மீனாட்சி மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில்ராம் முதல் பரிசையும், காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ஜெயந்த் குமார் இரண்டாம் பரிசையும், ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுவின் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 15 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் வெட்டூர்ணி மடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான சுருதி முதல் பரிசையும், ஆர்த்தி இரண்டாம் பரிசையும், அஸ்மிதா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களான ஸ்ரீமஞ்சு நாதன் முதல் பரிசையும், ஸ்ரீமஞ்சு தேவன் இரண்டாம் பரிசையும், கென்னி தாமஸ் மூன்றாம் பரிசையும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவிகளான ஆஸ்மி முதல் பரிசும், ஆன்சி இரண்டாம் பரிசையும், வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி ஜெனிட்டா மூன்றாம் பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஓய்வு) விஜயகுமாரி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






