search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 40 பேரிடம் விசாரணை
    X

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் 40 பேரிடம் விசாரணை

    • வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா (வயது 27) என்பவர் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 10-ந்தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரிஷ் ஆகியோர் மனதளவிலும் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் பின்னர் விசாரணையை தொடங்கினார்கள்.

    மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஹரிஷ், ப்ரீத்தியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஹரிசுக்கு மதுரை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு பயிற்சி டாக்டரான ப்ரீத்தியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். எனவே அவரை பிடிக்க போலீசார் கும்பகோணம் விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு விலை உயர்ந்த 2 மதுபாட்டில்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது எங்கிருந்து வாங்கியுள்ளார் என்பதும் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவல் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். மேலும் முன்ஜாமின் பெற்றுள்ள ஹரீஸிடம் விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அவர் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஹரிசின் முன் ஜாமினை ரத்து செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.

    Next Story
    ×