என் மலர்
காஞ்சிபுரம்
- உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று திடீரென இடி இடித்தது.
- விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென இடி இடித்தது.
அந்த பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தனியார் விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதைகளை வினியோகம் செய்யும்போது அதன் தரத்தை அறிந்து விற்பனை செய்வது மிகவும் அவசியமாகும்.
- நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுக்கும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் விதை பரிசோதனை அதிகாரி ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதைகளை வினியோகம் செய்யும்போது அதன் தரத்தை அறிந்து விற்பனை செய்வது மிகவும் அவசியமாகும். விதை வினியோகம் விதை சட்டம் 1986 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பகுப்பாய்வு முடிவுகள் கைவசம் வைத்திருப்பது நன்மை பயக்கும். நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுக்கும். எனவே, விற்பனை செய்யப்படும் அனைத்து விதை குவியலுக்கும் மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பி ரூ.80-ஐ கட்டணமாக செலுத்தி பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவி படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகள் சாருமதி (வயது 18). இவர் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்
நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை தாழிட்டு மின்விசிறியில் புடவையில் தூக்குமாட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாருமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், மகள் சாருமதி சரியாக படிக்கவில்லை என தாய் சுமதி கண்டித்ததாகவும் இதனால் சாருமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது புதுக்கோட்டை மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
- மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
ஆலந்தூர்:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் இன்று அதிகாலை அவர்கள் 8 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் 8 மீனவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 20.10.2022 ஆகும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், "மகளிர் சக்தி விருது" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.on. என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதிவாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 20.10.2022 ஆகும்.
இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசு தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா தலைமைதாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களிடம் இருந்து 420 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மொத்தம் ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளரான புண்ணியகோடி, துணை கலெக்டர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மழைநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், மங்களதீர்த்தம். உலகளந்த பெருமாள் கோவில் குளம், ரங்கசாமி குளம் மற்றும் மேட்டு தெருவில் நடை பெறும் பணிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டார்.
அப்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், பணிக்குழு தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், கவுன்சிலர்கள் சோபனா, கண் ணன், கார்த்திக்,சுப்புராயன், மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
- 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
- கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றின் கரையோரம் இருந்த சுமார் 700 வீடுகள் அகற்றப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கு கீழ்கதீர்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.மேலும் வீடுகள் இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறினர். இந்த வளாகத்தின் 8-வது பிளாக்கில் தச்சு தொழிலாளியான குமார் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி சரக்கு வாகனம் ஏறி இறங்கியதில் குமார் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
இதனால் உடலை சென்னையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது. இதனால் குடும்பத்தினர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இது பற்றி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் குமாரின் உடலை தாயாரம்மன் குளம் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி அளித்தது.
இதையடுத்து குமாரின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தாயார் அம்மன் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து கீழ்கதீர்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வேகவதி நதிக்கரை யோரம் சொந்தமாக வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காமல் வேகவதி நதியோரம் இருந்த வீடுகளை இடித்து தள்ளி விட்டு, நபருக்கு ரூ.1.50 லட்சம் பெற்றுக் கொண்டு இந்த குடியிருப்பு பகுதியில் குடியேற அனுமதித்தனர்.
இந்த குடியிருப்பில் சமுதாயக்கூடம், கால்வாய் வசதி, கழிவு நீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சுடுகாடு என்பது மிக மிக அவசியமானது.
அதைக் கூட இந்த செய்யாமல் விட்டு உள்ளனர். பகுதியில் மின் மயானம் அமைத்து தர வேண்டும். அப்படி இல்லாவிடில் ஏற்கனவே தந்த வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
- லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.
- பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இருந்து மாகரல் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.
இதனை பஸ் டிரைவரும், கண்டக்டரும் கண்டித்தனர். ஆனால் மாணவர்கள் பஸ்சுக்குள் வர மறுத்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.
பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் (558பி) சென்றது. பொன்னேரி பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அவர்கள் மூடப்பட்ட படிக்கட்டு கதவை திறக்குமாறு கூறி டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரசு பஸ்சை பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிசென்று டிரைவர் நிறுத்தினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் மற்றும் வாசுகி ஆகியோர் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறி எச்சரித்தனர்.
மீண்டும் இது போல் செய்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர்.
- சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள தேவேரியம்பாக்கத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் இருந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வந்தார்.
இதில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதிதா (வயது24), சந்தியா, பூஜா மற்றும் ஊழியர்கள் உள்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் அவரது மகள்கள் பூஜா, சந்தியா உள்பட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஜீவானந்தத்தின் மூத்த மகள் நிவேதிதாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவேதிதாவும் பரிதாபமாக இறந்தார்.
இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியான நிவேதிதா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார். இதேபோல் இறந்த அவரது சகோதரிகள் பூஜாவும், முதுநிலை படிப்பும், சந்தியா இளநிலை பட்டப்படிப்பும் படித்து வந்துள்ளனர்.
சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கும்பகோணத்தை சேர்ந்த ஊழியரான சக்திவேல் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
- தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது.
இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் திடீரென கன மழை கொட்டித்தீர்த்தது.
ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதி, பஸ் நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டு வருகிறது.






