என் மலர்
காஞ்சிபுரம்
- வீரபத்திரசாமி கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அன்னை இந்திராகாந்தி சாலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வீரபத்திரசாமி கோவில்.
இந்த கோவில் வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.
இந்த மரம் தற்போது பட்டுபோய் உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும், மேலே செல்லும் மின்கம்பியில் மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது.
- தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது 36). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் பகுதியில் உள்ள கார் தாயாரிக்கும் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஜெய்கணேஷ் தான் சேமித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் பணத்தை அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டி பெற்று வந்தார்.
மேலும் நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு தன்னோடு பணிபுரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 60 பேரிடம் இருந்து ரூ.30 கோடியை பெற்று நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முகவராக இருந்த ஜெய்கணேஷ் மூலம் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுக்கவே ஜெய்கணேஷ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு அய்யம்பேட்டைக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பலமுறை கேட்ட பிறகும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் அக்கம்பள்ளியை சேர்ந்த சந்திரபாபு ( 28) , கிரி பாபு(32) மற்றும் அவரது நண்பர்கள் மகேஷ்(28), சந்திரசேகர் (29) ஆகியோர் அய்யம்பேட்டை பகுதிக்கு வந்து ஜெயகணேஷை மடக்கிப்பிடித்து காரில் ஏற்றி தெலுங்கானாவுக்கு கடத்தி செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீசாரை உஷார் படுத்தியதை தொடர்ந்து போலீசார் காரை காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரில் கடத்தப்பட்ட ஜெயகணேஷை பேரீசார் மீட்டனர்.
தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
- வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
- வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கச்சேரி மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாகரலை இணைக்கும் செய்யாற்றின் குறுக்கே உள்ளே தரைப்பாலம் உடைந்தது.
வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தொடர்ந்து தரைப்பாலம் சேதம் அடைந்து வருவதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி வெங்கச்சேரி தரைப்பாலத்தில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் அனைத்தும் உத்திரமேரூர் சென்று பெருநகர் வழியாக காஞ்சிபுரம் வரும் நிலை உள்ளது. சுமார் 20 கி.மீட்டர் சுற்றி வருகிறார்கள்.
- டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போரூர்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுல்லா புதின் (வயது28). போலீஸ்காரரான இவர் தாம்பரம் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
ஜெய்னுல்லா, மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ரேசன் கடை சிக்னலில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த டீசல் "டேங்கர் லாரி" ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி ஜெய்னுல்லாவின் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிக்கொண்டு சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.
இதில் ஜெய்னுல்லாவுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ஜெய்னுல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் டீசல் லாரி மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிக்னலில் நின்ற மற்ற வாகன ஓட்டிகள் உயிர்தப்பினர். விபத்தை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரான அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது62) என்பவரை கைது செய்தனர்.
டேங்கர் லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது.
- ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக கடந்த வாரம் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. நேற்று 2131 கன அடியாக வந்த தண்ணீர் இன்று காலை 1003 கன அடியாக குறைந்தது. ஏரியில் இருந்த 945 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2835 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் உள்ளது.
ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர்.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 513 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில்2794 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- 30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.
- முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது.
30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.
முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட பாலாறு அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேறி மாமண்டூர் ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 4118 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தினமும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி நடத்துவோர் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும்.
மாநகராட்சி குடிநீர் குழாய்களில் ஏதேனும் கசிவு, சாலைகளில் மழைநீர் தேக்கம், வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். கட்டண மில்லா தொலைபேசி எண் 1800-425-2801 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர்.
பூந்தமல்லி:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது.
இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக 100 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 2131 கன அடியாக குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் 1000 கன அடியில் இருந்து 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ள ளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2830 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.90 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர். பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
+2
- அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
- வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்,
- குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
- தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் (லோக் அதாலத்) நடை பெற்றது.
மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தலைமை தாங்கினார்.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஹரிகரன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி கார்த்திகேயன் செயலாளர் கார்த்திகேயன் அட்வகேட் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரை முருகன் அரசு வழக்கறிஞர்கள் பி. கார்த்திகேயன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன.
- ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 141 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
143 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 360 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 265 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன. இதில் 145 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பி உள்ளது. 227 ஏரிகள் 75 சதவீதமும், 332 ஏரிகள் 50 சதவீதமும், 293 ஏரிகள் 25 சதவீதமும், 152 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கும் கீழும் நிரம்பி இருக்கிறது.
ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.






