என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவன முகவரை கடத்த முயன்ற 4 பேர் கைது
- முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது.
- தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (வயது 36). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் பகுதியில் உள்ள கார் தாயாரிக்கும் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஜெய்கணேஷ் தான் சேமித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் பணத்தை அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வட்டி பெற்று வந்தார்.
மேலும் நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு தன்னோடு பணிபுரிந்த நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 60 பேரிடம் இருந்து ரூ.30 கோடியை பெற்று நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிதி நிறுவனம் தற்போது வழக்குகளில் சிக்கி முடங்கி உள்ளது. இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் முகவராக இருந்த ஜெய்கணேஷ் மூலம் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுக்கவே ஜெய்கணேஷ் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு அய்யம்பேட்டைக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பலமுறை கேட்ட பிறகும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கானா மாநிலம் அனந்தபூர் அக்கம்பள்ளியை சேர்ந்த சந்திரபாபு ( 28) , கிரி பாபு(32) மற்றும் அவரது நண்பர்கள் மகேஷ்(28), சந்திரசேகர் (29) ஆகியோர் அய்யம்பேட்டை பகுதிக்கு வந்து ஜெயகணேஷை மடக்கிப்பிடித்து காரில் ஏற்றி தெலுங்கானாவுக்கு கடத்தி செல்ல முயன்றனர்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீசாரை உஷார் படுத்தியதை தொடர்ந்து போலீசார் காரை காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். காரில் கடத்தப்பட்ட ஜெயகணேஷை பேரீசார் மீட்டனர்.
தெலுங்கானாவுக்கு ஜெயகணேஷை கடத்த முயன்ற சந்திரபாபு, கிரிபாபு, மகேஷ், சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜாபாத் போலீசில் ஒப்படைத்தனர்.






