என் மலர்tooltip icon

    ஈரோடு

    காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
    ஈரோடு:

    கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

    காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகள் குளறுபடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் எங்களிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஏரல்:

    பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் 6 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன.

    இதேபோன்று சிவகளை பரும்பு பகுதியில் நடைபெறும் அகழாய்வில் 4 முதுமக்கள் தாழிகள் முழுமையாகவும், 5-க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர், சிவகளையில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிச்சநல்லூர், சிவகளையில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி செலவில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் முறைகள், அவர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்தார்கள்? என்பதை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இங்கு கிடைக்கப்பெறும் முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை மிகவும் பாதுகாப்பாக எடுக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில் வெண்கல மோதிரம், பழங்காலத்தில் புகைப்பிடிக்க பயன்படுத்திய குழாய் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகளையிலும் பலவித பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் பொருட்களை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பழங்கால தமிழர்களின் நாகரிக வாழ்வியல் முறைகள் உலக்குக்கு தெளிவாக தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தி பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). இவர் பெருந்துறையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் 12 மணி அளவில், பணம் எடுப்பதற்காக பெருந்துறை பங்களா வீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

    பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தனது ஏ.டி.எம். அட்டையை சொருகினார். இதைத்தொடர்ந்து அதில் தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்த முயற்சித்தார்.

    அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ஸ்கிரீன் பகுதியில் சிவப்பு நிறத்தில் ஒளி ஒன்று விழுந்து உள்ளது. இதனால் அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் எந்திரத்தில் ஒளி வந்த பகுதியை உற்று கவனித்தார். அப்போது அந்த எந்திரத்தின் ஸ்கிரீன் உள்ள இடத்துக்கு மேல்பகுதியில் ஒரு பொருள் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அதை எடுத்து பார்த்தார். அது ஏ.டி.எம். அட்டைகளின் தகவல்களை திருடும் எலக்ட்ரானிக் சிப் என தெரியவந்தது.

    உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் அந்த எலக்ட்ரானிக் சிப்பையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஏ.டி.எம். அட்டையின் தகவல்களை ரகசியமாக திருடும் எலக்ட்ரானிக் சிப் அது என்பதை கண்டுபிடித்தனர். மேலும் இதுபற்றி பெருந்துறையில் உள்ள அந்த ஏ.டி.எம். மையத்தின் வங்கி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி நிர்வாகத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து நிபுணர் ஒருவரும் வரவழைக்கப்பட்டு அந்த எலக்ட்ரானிக் சிப் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஏ.டி.எம். அட்டையின் தகவல்களை திருடும் நவீன எலக்ட்ரானிக் சிப் என அந்த நிபுணர் உறுதி செய்தார்.

    இதன் மூலம் எலக்ட்ரானிக் சிப்பில் பதிவாகும் ஏ.டி.எம். அட்டையின் ரகசிய தகவல்கள் மூலம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்று உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த எலக்ட்ரானிக் சிப்பை வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி வங்கி ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ஈரோடு மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்து அனைத்து வாகனங்களையும் முழுமையாக கண்காணிக்க உத்தரவிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலங்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த தொற்று சமூக பரவலாக மாறி, ஈரோடு மாவட்ட பகுதியிலேயே இருக்கும் மக்களுக்கும் வந்து விடாமல் இருக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக பிற மாநிலங்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளின் செயல்பாட்டை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். பவானி அருகே லட்சுமிநகர் பகுதியில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிக்கு சென்ற அவர் அங்கு போலீசாருடன் சேர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். பிற மண்டலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று உள்ளனரா? வாகனங்களில் இடைவெளி விடப்பட்டு உட்கார்ந்து உள்ளனரா? முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்பது சோதனை செய்யப்பட்டது.

    பின்னர் போலீசாரிடம் பேசிய கலெக்டர் அனைத்து வகை வாகனங்களையும் கண்டிப்பாக கண்காணித்து சோதனை செய்ய வேண்டும். எல்லையை கடந்து வருபவர்களுக்கு கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுபோல் அவர் மேலும் சில சோதனைச்சாவடிகளையும் நேற்று ஆய்வு செய்தார்.
    ஈரோட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் கோவேந்தன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோவேந்தன் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான கோவேந்தனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    ஈரோடு மாநகராட்சியில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
    ஈரோடு:

    தமிழ்நாடு அரசின் சார்பில் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. மதிய நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்களின் வசதிக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை பெற்று உள்ளது.

    கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் கோவில்களில் அன்னதான திட்டமும் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியை பொறுத்தவரை கோவில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் கோவில்களில் நிறுத்தப்பட்டாலும், அந்தந்த பகுதி அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஈரோட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்கள் முழுமையாக கோவில்களில் அன்னதானக்கூடம் திறக்கப்படவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் அன்னதான திட்டம் கோவில்களில் செயல்பட தொடங்கியது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கொங்கலம்மன் கோவில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆஞ்சநேயர் கோவில், திண்டல் மலை முருகன் கோவில் என 6 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட தொடங்கியது.

    பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அன்னதான திட்டத்தில் சாப்பிடும் ஏழைகள் வரிசையில் காத்து நின்றனர். சமூக இடைவெளி விட்டு அவர்கள் உள்ளே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    ஈரோட்டில் பல வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 56 பவுன் நகைகளும், ரூ.5 லட்சமும் மீட்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேலாளர், தனது மகன் திருமணத்துக்காக ரூ.5 லட்சத்தை சதீஸ்குமாரிடம் கேட்டு இருந்தார். அவர் கேட்ட பணத்தை கொடுப்பதற்காக சதீஸ்குமார் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வாகனத்தில் ரூ.5 லட்சத்தை வைத்துவிட்டு, மேலாளரின் வருகைக்காக சதீஸ்குமார் காத்திருந்தார்.

    சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை அவர் பார்த்தபோது காணவில்லை. மர்மநபர் நைசாக பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஸ்குமார் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் பணத்தை திருடியவரை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், திருட்டு நடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். அதில் திருட்டு நடந்தவரின் அடையாளம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அந்த நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஈரோடு தனிப்படை போலீசார் நேற்று மூலப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பழைய புவனகிரிரோடு தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற கார்த்தி (வயது 43) என்பதும், தற்போது ஈரோடு பிரப்ரோடு வாமலைவீதியில் குடியிருந்து வருவதும், அவர்தான் சதீஸ்குமாரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்தியை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கார்த்தி கொள்ளை அடிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததும், இதில் யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து உள்ளதும் தெரியவந்து உள்ளது. ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய சரகத்துக்கு உள்பட்ட மூலப்பாளையம் பாரதிநகர், சென்னிமலைரோடு கே.கே.நகர், முள்ளாம்பரப்பு முல்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைய சரகத்துக்கு உள்பட்ட முனிசிபல்காலனி வள்ளலார் வீதியில் உள்ள வீட்டிலும் நகை, பணத்தை கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைதான கார்த்தியிடம் இருந்து 56 பவுன் நகைகள், ரூ.5 லட்சம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியன மீட்கப்பட்டன.

    கண்காணிப்பு கேமரா மூலமாக பிரபல கொள்ளையனான கார்த்தி சிக்கியுள்ளதால், பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் திருட்டு சம்பவத்தை தடுக்க சாலையை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
    பெருந்துறையை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்காலில் யு-9 பாசன சபை சார்பாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    சென்னிமலை:

    பெருந்துறையை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்காலில் யு-9 பாசன சபை சார்பாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாய்க்கால் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் பொன்னுசாமி, பாசன சபை தலைவர் கலைவாணன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் உமா மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது பெண் போலீஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைச்சாவடி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இங்கு போலீசாரின் சோதனைக்கு பின்னரே ஈரோட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு நேற்று ஈரோடு போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். காலை 10 மணி அளவில் பெண் போலீஸ் ஏட்டு தனபாக்கியம் என்பவர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் ஏட்டு தனபாக்கியத்தின் காதில் இருந்தும், மூக்கில் இருந்தும் ரத்தம் கொப்பளித்தது. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உடன் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு அங்கேயே படுக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனால் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடனடியாக அந்த வழியாக வந்த ஒரு கால் டாக்சியில் ஏற்றி அவர் வழக்கமாக மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ஒருவர் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து 2 சக்கர வாகனத்தில் வந்தார். சோதனைச்சாவடி அருகில் வந்தபோது அவரும் திடீர் என்று வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தார். போலீசார் விரைந்து சென்று அவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸ் ரத்தம் கக்கியது, வியாபாரி வலிப்பு நோயால் விழுந்தது என்று அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பேய் நடமாட்டம் இருப்பதாக ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனை சாவடியில் நடந்த இந்த சம்பவங்கள் இன்னும் பீதியை கிளப்பியது. ஆனால் பெண் போலீஸ் ஏட்டு தனபாக்கியத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து இதுபோன்று அவருக்கு திடீரென்று மூக்கில் இருந்தும், காதில் இருந்தும் ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு அவர் மருத்துவம் பார்த்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
    சத்தியமங்கலம் அருகே பெல்லாரி வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் 3 குட்டிகளுடன் தாய்ப்புலி தண்ணீர் குடித்து சென்றது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியை உள்ளடக்கியது ஆகும். புலிகள் வசிக்கும் சிறந்த சீதோ‌‌ஷ்ணநிலையை கொண்டதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலேயே அதிக புலிகள் வசிக்கும் இடமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்கிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் கடந்த 1 மாதமாக தாய்ப்புலி ஒன்று தனது 3 குட்டிகளுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்காரணமாக வனத்துறையினர் பண்ணாரி வனப்பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனச்சரக ஊழியர்கள் பண்ணாரியை அடுத்த பெல்லாரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள குட்டை ஒன்றில் தாய்ப்புலி தனது 3 குட்டிகளுடன் தண்ணீர் குடித்து கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்கள் செல்போனில் படமும், வீடியோவும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து பண்ணாரி, பெல்லாரி வனப்பகுதியில் ரோந்து செல்லும் வன ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாநகராட்சியில் 2 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் சளி, காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வளையக்கார வீதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களின் உடல் நிலை குறித்த தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அதிகாரி (பொறுப்பு) டாக்டர் அம்பிகா கூறியதாவது:-

    ஈரோடு மாநகராட்சியில் 2 குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் சளி, காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடந்து வருகிறது. அதன்படி வளையக்கார வீதி பகுதியில் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடந்தது. முதல் கட்டமாக சளி, காய்ச்சல் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். பின்னர் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இவ்வாறு டாக்டர் அம்பிகா கூறினார்.
    காதலியை கரம்பிடிக்க இருந்தநிலையில் கோவையில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாங்காமல் அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கேசவன் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இதேபோல் ஊஞ்சலூர் அருகில் உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் கிருத்திகா (25). பி.ஏ. முடித்து உள்ளார். இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார் ஆஸ்பத்திரியின் ஈரோடு கிளையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    கேசவனும், கிருத்திகாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேசவனிடம் கிருத்திகா கூறினார். இதற்கு கேசவன் தன்னுடைய வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்து கொண்டு பின்னர் எங்களுடைய வீட்டில் தெரிவித்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன் கிளாம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 3-ந் தேதி அன்று அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் திருமணநாளில் கேசவன் வரவில்லை என தெரிகிறது. இதனால் திருமணம் நின்று போனது. இதன்காரணமாக கிருத்திகா மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் கோவையில் கேசவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கிருத்திகா மிகவும் மனமுடைந்தார். மேலும் கிருத்திகாவின் பெற்றோரும் அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டை வீட்டு வெளியே சென்று உள்ளனர்.

    தூக்குப்போட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட துயரத்தில் இருந்த கிருத்திகா இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் உடைந்த கண்ணாடியை எடுத்து கிருத்திகா தனது கையை அறுத்து கொண்டார். பின்னர் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் இறந்த துயரத்தில் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×